வாழைப்பாடியில் அருந்ததியர் குடியிருப்பில் தீ விபத்து. நடந்தது என்ன?


"கிளி ஜோதிடர் குடியிருப்பில் தீ. 6 குடிசை வீடுகள் சாம்பல், 3 லட்சம் பொருட்கள் நாசம்! வாழைப்பாடியில் பரபரப்பு!!" இப்படித்தான் சிறிய அளவில் அந்தஊடகம் [ஜூன் 13.06.2011] செய்தி வெளியிட்டிருந்தது.
பொதுவாகவே சாதிக் கலவரங்கள் நடைபெறும் போது, "இரு சாதிப் பிரிவினருக்கு இடையே நடைப்பெற்ற மோதலில்.." என்ற பொது வாக்கியத்தை ஊடகங்கள் கையாள்வது ஊடக மரபாக இருக்கிறது. ஆதிக்க சாதியினருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இடையே நடைப்பெறும் போராட்டமானது காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு எதிராக பொங்கி எழும் போராட்டமாகவே இதுவரை இருந்திருக்கின்றன. ஆனால் ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாகவே அரசாங்கமும் ஊடகங்களும் செய்திகளை திரிபு செய்கின்றன. இதையே வாழைப்பாடி அருந்ததியினர் குடியிருப்பு தீ விபத்திலும் ஊடகம் கையாண்டிருக்கிறது.
"4வது வார்டு, அருந்ததியர் குடியிருப்பு, க.எண் 1 முதல் 51 முடிய" என்று அக்குடியிருப்பின் பெயர் பலகை கூறுகிறது. ஆனால் பத்திரிக்கை துறை, "கிளி ஜோசியர் குடியிருப்பு" என்கிறது. 

இனி அடுத்த நிகழ்வுகளுக்கு செல்வோம்.
Dim lights Embed 
ஜூன் 13.06.2011 இல் அருந்ததியர் குடியிருப்பு தீ பிடித்து முற்றாக சேதம் அடைந்த பின் 21.06.2011 அன்று ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ பெருமாள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2.700 ரூபாய் வழங்கியதாக ஓர் நாளிதழ் தகவல் வெளியிட்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் குடும்பத்திற்கு 2500 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர். 

இங்கே இன்னொரு தகவலையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சென்னை சூளை அருகே கேசவன் பூங்காவில்29.05.2011 இல் ஏற்பட்ட தீ விபத்தில் 210 குடிசை வீடுகள் முழுவதும் தீ விபத்தால் சேதம் அடைந்த பின் தமிழக ஆளுனரின் கூட்டத் தொடரில் இனி தீ விபத்தில் சேதம் அடையும் குடிசைகளுக்கு போர் கால நிவாரணமாக உடனடியாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 5000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்ததை கவனப்படுத்துகிறோம். 

ஆனால் வாழைப்பாடி அருந்ததியினர் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு முற்றாக உடைமைகள் இழந்து 9 நாட்களுக்கு பிறகே 2500 ரூபாய் மட்டுமே கொடுக்க்பபட்டிருக்கிறது. ஆனால் பத்திரிகை செய்தி 2700 ரூபாய் கொடுத்ததாக உள்ளது. முதல்வர் தீர்மானமோ 5000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிவாரண உதவியில் கூட பணம் கையாடல் செய்யப்படுவதும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைக் குறித்து அப்பகுதி ஆட்சியாளர் (கலெக்டர்) அலட்சியமாய் இருப்பதும் ஏன்? 

நடந்த சம்பவம் குறித்து வாழைப்பாடி அருந்ததியினர் குடியிருப்பு மக்களிடம் விவாதிக்கையில் பலமுறை அப்பகுதியில் மின்கசிவு ஏற்பட்டதாகவும், மின்சாரத்துறை அலுவலகத்திற்கு சென்று பலமுறை புகார் செய்தும் அலட்சியப்படுத்தியதாலே இச்சம்பவம் நடந்தது என்று குறிப்பிடுகின்றார்கள். சம்பவம் நடைப்பெற்ற அன்று பக்கத்து தெருவில் ஒருவர் மரணம் அடைந்ததால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு சென்றிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டனர். உடல் ஊனமுற்ற ஓர் இளம் பெண்ணிற்கு நடைபெற இருந்த திருமணமும் தடைபட்டிருக்கிறது. திருமண செலவுக்காக 50,000 ரூபாய் எடுத்து வீட்டில் வைத்திருந்ததாகவும் அவையும் தீயில் கருகிவிட்டன என்று அப்பெண்ணின் தந்தை குறிப்பிடுகிறார். 

இப்படி பல பாதிப்புக்களை ஏற்படுத்திய மின்கசிவும், மின்சாரதுறையின் அலட்சியமும் பாதிக்கப்பட்ட மக்களிடம் வள்ளல் குணத்தை காட்டிவிட்டு அதிலும் ஊழல் நடத்தி இருக்கும் அரசியல்வாதியும் பாதிக்கப்பட்ட மக்களின் குடியிருப்புக்குள் சென்று நேரடி விசாரணை செய்யாமல் ஒதுங்கி நின்று நோட்டம் விட்டுச் சென்ற அப்பகுதி கலெக்டரின் 'கடமை உணர்ச்சி'யையும் யார் கேள்வி கேட்பார்கள்?
மக்கள் பிரச்சனையை சாதி அடையாளத்தோடு தீண்டாமல் மக்கள் பிரச்சனையை இனி இந்த அரசாங்கமும் அரசு ஊழியர்களும் தீர்க்க முன்வருவார்களா?