அருந்ததியனும் - இசையும்


“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை”
என்றார்வள்ளுவர். அறிவுசெல்வங்களில் செவியால் வரும் செல்வமே சிறந்த்து என்பது இத்ன் பொருள்.
நல்ல இசை என்பது இலகுவாகச் செவி வழி புகுந்து விடுகிறது.மிகுந்த
 சிரமத்துடன் தான் நினவிலிருந்து மறைகின்றது” என்றார் தோமஸ் பீக்சாம்.
 ”மெளனம் முழுமையாக சூழ்ந்துவிட்டநிலையில் வெளிக்கொணர முடியாத உணர்வுகளை, கருத்துக்களை ஓரளவேனும் வெளிக்காட்டக் கூடிய ஊடகம் இசையாகும்” என்றார் அட்டஸ்
“பாட்டினைப் போல் ஆச்சரியம்
பாரின் மிசை இல்லையடா……
பண்ணை இசைப்பீர்- நெங்சில்
புண்ணை ஒழிப்பீர்” என்றார் பாரதி.

“துன்பகடலை தாண்டும் போது
தோணியாவது கீதம்”… என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்

“கலைகளைச் சுவைக்கும் திறன் வளர கலைகளே உதவிசெய்யும், என்பதற்கு இசையேசிறந்த உதாரணம் ஆகும்”
என்று கார்ல் மார்க்ஸ் கூறிய மேற்கோள்கள் இசையின் சிறப்பை விளக்குகின்றன.
 இப்படி இசையின் சிறப்பை நிறையவே மேற்கோள்காட்டிக்கொண்டே போகலாம். தமிழில் இயல், இசை,நாடகம் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. முத்தமிழில் இசையும் நாடகமும் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்ததெனவும், அதற்கென சிறந்த இலக்கண நூல்கள் இருந்ததெனவும் வரலாற்று நூல்களிலிருந்து நாம் அறியக்கூடியதாக உள்ளது.
 இலக்கியம் போலல்லாமல் இசையையும்,நாடகத்தையும் பற்றி எழுதப்படவோ, விவாதிக்கப்படவோ இல்லை என்பது தமிழ்ச்சூழலில் வருந்தத்தக்க உண்மையாகும். அதற்கான காரணங்கள் என்னவென்று ஆராய்ந்து பார்ப்பின் இந்த இரண்டு கலை வடிவங்களும் சாதீய அடையாளங்ககளுடன் இனம் காணப்பட்டமையே என்கிற வரலாற்று உண்மை வெளிப்படும்.
 இக்கலைகள் படிநிலையில் குறைந்தது என்று சொல்லப்படுகின்ற சாதியினருடன்  அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளன. வரலாற்று நிகழ்வுகளூடாக இவை இன்று மேம்பட்ட நிலையில் உள்ளன போன்றதொரு தோற்றத்தைத் தந்தாலும் அதில் ஈடுபடும் கலைஞர்களை “கூத்தாடிகள்” என்றும் “சின்னமேளக்காரிகல்” ஏன்றும் கேவலப்படுத்தும் நிலையும் நிலைகொண்டுள்ளன. இதற்கான அடிப்ப்டைக்காரணம் மேற்கூறிய கலைகள் சாதி அடையாளங்களுடன் காணப்பட்டமையே என்பதை யாரும் மறுக்கமுடியாது.
 படிநிலையில் குறைந்த சாதியினருடன் அடையாளப்படுத்தப்பட்டு வந்த இசை இன்று பார்ப்பனர்களின் கைக்கு மாறியவுடன் அதன்அந்தஸ்தும்”உயர்ந்து” விட்டது. அதன் மர்மம் என்ன?
 ”இசை என்றால் பார்ப்பனர்கள்தானே முதலிடத்தில் இருக்கிறார்கள்! அவர்கள் தான் பெரிய ஜாம்பவான்கள் என்கிற பயம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக கர்நாடக இசை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. கர்நாடக சங்கீதத்தில் பயன்படும் சொற்கள் தெலுங்கு, சமஸ்கிருத மொழியில் இருப்பதால் பார்ப்பனர்கள் தான் அதனை வளர்த்துள்ளார்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளதுடன், அது அவர்களுடையது தான் என பார்ப்பனர்களும் சாதித்து வருகிறார்கள்.
இவ்வாறே அமெரிக்காவிலும் கறுப்பின இசைக்கலைஞர்களால் ரொக் அன்ட் ரோல்(Rock and Roll) என்ற  இசை வடிவம் உருவாக்கப்பட்டு பிரபல்யம் பெறுகிறது. இந்த இசை வகையை வெள்ளை இன இசைக்கலைஞர்கள் பின்பற்றி புகழ் அடைகிறார்கள். இன்று அந்த இசையின் முழு உரிமைக்காரர்களாக வெள்ளையர்களே திகழ்கிறார்கள். அது கறுப்பின மக்களால் தோற்றுவிக்கப்பட்ட இசை என்பது மறைக்கப்பட்டுவிட்டது . அதே போல் தான் ராப் (RAP) என்ற இசை வடிவமும் வெள்ளைன ஆதிக்கத்திற்குற்பட்டு வருகின்றது.
               ஆனால் தமிழ் நாட்டில் இசை சாதிய அடையாளங்களுடனேயே 2000 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது அல்லது இசை மரபுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது வரலாறு தருகின்ற பாடமாக உள்ளது. வரலாற்றில் மிகப் பிந்திய காலத்திலேயே பார்ப்பனர்கள் இசைத்துறையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்கள். இந்த ஆதிக்கநிலையில் இருந்தே அவர்கள் ஏனைய கலை வடிவங்களை எல்லாம் மட்டம்தட்டியும் வருகின்றார்கள்.
                       உயர்ந்த கலை அல்லது செம்மைப்ப்டுத்தப்பட்டகலை (Classical Art)என்ற நிலையில் இருந்து ஓவியம்,சிற்பம், நாடகம் போன்ற கலைகள் நாட்டார் கலைகளின் பண்புகளை உள்வாங்கி புதிய பரிமாணங்களை பெற்று நவீன கலைகளாக(Modern Art) வளர்ந்து இன்று உலகலாவியரீதியில் பிரசித்தம் பெற்றுள்ளன. உலக அளவில் இதன் முன்னோடியாக ஓவியர் பிக்காசோவைக் குறிப்படலாம்.
நவீன ஓவியத்தை உலக அளவில் எடுத்துச் சென்று சாதனை படைத்த அவர் “அந்த நவீனத்தின்  ஊற்றுக்கண் ஆபிரிக்கநாட்டு கிராமிய சிற்பங்களே” என்றார். பிக்காசோவின் பாதிப்பே தமிழ்நாட்டிலும் பல ஓவியர்களை நாட்டார் கலைகளின் மீது ஆர்வம் கொள்ள வைத்தது எனலாம்.
                   அதே போல் மேற்கத்திய நாடுகளில் உயர்ந்த இசைமேதைகள் என போற்றப்படுகின்ற ஜோன் ஸ்ராவ்ஸ்( John Strauss)             , ஜோகனஸ் ப்ராம்ஸ்(Johhanes Brahms) போன்றோர் நாட்டுப்புற இசையை தமது சிம்போனிகளில்  பயன்படுத்தி புதுமை செய்தார்கள்.
  தமிழில் தீண்டத்தகாத இசையாக இருந்த நாட்டுப்புற இசையை சினிமாவில் பயன்படுத்தி புகழ்பெறுகிறார் இளையராஜா. நாட்டுப்புற இசைக்கும் புது மவுசை ஏற்படுத்துகிறார். இசையில் புதிய ரசனை மாற்றத்தை அவரது இசை ஏற்படுத்துகிறது.
பார்ப்பணர்கள் இசை பற்றி தகவமைத்த மாயைகளை எல்லாம் இளையராஜா நடுத்தெருவில் போட்டு உடைத்தார் ராஜா. இளைராஜாவுக்கு முன்பிருந்த பெரும்பாலான சினிமா இசையமைப்பாளர்கள் எல்லாம் கர்நாடக இசை கலைஞர்களால்  இரண்டாம், மூன்றாம் தர கலைஞர்களாக நடாத்தப்பட்டார்கள்.
 சினிமா இசை அமைப்பாளர்களும் தொந்தரவு இல்லாத அவர்களுக்கு பணிந்து போகும் ஒரு போக்கே கடைபிடித்து வந்தார்கள். இவ்வாறு எந்தெந்த வழிகளில் தமக்கு எதிர்ப்பு வரும்போது மட்டம் தட்டியே வந்திருக்கிறார்கள்.
 ”கர்நாடக இசை என்றால் அது தெலுங்கிலோ அல்லது சமஸ்கிருதத்திலோதான் இருக்க வேண்டும் இவ்விரு மொழிகளிலும் பாடினால்தான் கர்நாடக சங்கீதத்தின் தரம் உயரும், அது உன்னத நிலை எய்தும்” என்பது பார்ப்பண சங்கீத வித்துவான்கள் தோற்றுவித்துள்ள ஒரு மாயை ஆகும்.
 இந்தியாவில்-தமிழ்நாட்டில்-பார்ப்பணர்களுக்கு வாய்ப்பாக இருக்கும் அதிகாரம் ,ஆட்சிப்பலம், மேலாதிக்கம் என்பன  இந்த மாயைக்கு எதிராக எழுந்த குரல்களை எல்லாம் நசுக்க வாய்ப்பளித்தன. இவர்கள் தமிழிசையை அற்பமானதென்று ஒதுக்கியும், புறக்கணித்தும், நிராகரித்துமே வந்தார்கள். அவர்களுக்கு தமிழிசை என்பது தீண்டத்தகாத ஒன்றாகவே இருந்து வந்தது.
 எனினும் இந்த எண்ணங்களுக்கு எதிரான வலுவான ஒரு  கருத்துப் போராட்டத்தை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து வைத்தவர் தஞ்சை திரு.ஆப்ரகாம் பண்டிதர் தான். இவர் “கர்நாடக இசையின் மூலாதாரம் த்மிழிசையே” என்பதற்கு ஆணித்தரமான நியாயங்களை ஏராளமான ஆதாரங்களோடு முன்வைத்தார். ஆற்றல் படைத்த பல இசை அறிஞர்களையும்  வித்துவான்களையும், இசை ஆர்வாலார்களையும் வித்துவான்களையும், இசை ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்து தமது சொந்தச் செலவிலேயே ஏழு இசை மாநாடுகளை தமது சொந்தச் செலவிலேயே நடத்தினார்.

அவ்வாறு நடைபெற்ற மாநாடுகளின் பலனாக இசையுலகில் நடந்த தில்லுமுல்லுகளும், இருட்டடிப்புகளும், திட்டமிட்டுச் செய்த சதிகளும் அம்பலத்திற்கு வந்தன.
 இவ்வாறான வரலாற்றுச் சான்றுகளை விலாவாரியாகத் தரும் அரிய நூலே “கர்ணாமிர்த சாகரம்” என்னும் வரலாற்று இசை நூலாகும். இந்த நூல் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தது. இதற்கென புதிய அச்சுச் சாதனங்களை இங்கிலாந்திலிருந்து தருவித்து அச்சகம் ஒன்றையும் உருவாக்கிய ஆபிரகாம் பண்டிதரே பெரு முயற்சியெடுத்து அதனை வெளியிட்டார்.
 இந்திய இசையின் சுருதிகள் பற்றி ஆய்வு நடத்திய பண்டிதர், சமஸ்கிருத நூல்களில் சொல்லப்படுவது போல் சுருதிகள் இருபத்தி இரண்டு அல்ல என்றும் இருபத்தி நான்கு சுருதிகளே சரியானவை என்று விளக்கியதோடு, பாடிக்காட்டியும் நிரூபித்தார். தமிழிசையே கர்னாடக இசை என அவர் நிறுவியபோது, பார்ப்பன இசை அறிஞர்களும் ஒப்புக்கொள்ள நேர்ந்தது. பரோடாவில் நிகழ்ந்த இசை அறிஞர்கள் மாநாட்டில் சுருதி குறித்து நடந்த இசைத்துறை ஆய்வுகள் ஆரிய திராவிடப் போராட்டம் என்ற அளவிற்குச் சென்றது.
 சுரங்கள் நுட்பமாகப் பிரிக்கப்படும் போது அவை “சுருதிகள்” என்று அழைக்கப்படுகின்றன. தொன்மைக் காலத்தில் அவை “அலகுகள்”  என்றும்,  ”மாத்திரைகள்” என்றும் அழைக்கப்பட்டன. பண்டைய தமிழ் ராகங்கள் வடமொழியில் மாற்றம் செய்யப்பட்ட உண்மை அம்பலமானது.

தமிழ்ப் பெயர் வடமொழிப் பெயர்



செம்பாலைப்பண் -சங்கராபரணம்

படுமலைப்பண்  -கரஹரப்பிர்யா

அரும்பாலைப்பண் 

-கல்யாணி


கோடிம்பாலைப்பண்

-கரிஹாம்போதி

விளரிப்பாலைபண்
-நடனபைரவி

செவ்வழிப்பண்
-தோடி

மேற்செம்பாலைப்பண் 
-சுத்ததோடி
 இங்கே பண் என்பது தமிழிசை ராகத்தையே குறிக்கும். இது மட்டுமா?…
இன்னும் வரும் …
thanks to inioru.com



இது இங்கே வெளியிட பட காரணம் சிலருக்கு புரியாமல் போகலாம். நம்
 அருந்ததிய மக்கள் பாடலை கேட்க்கும் போதே அதற்கு ஏற்றாற் போல்
 தாளம் போடும் தன்மை உண்டு. நமக்கு எவ்வாறு இசை ஞானம்
 கிடைத்தது? என்பது யாறுக்கும் தெரியாத ஒன்று. இசை மரபு வழியாக
 வந்தால் மட்டுமே அதனை எளிதில் கற்க முடியும். அருந்ததியர்கள் மலம்
 அள்ளுவதும், செருப்பு தைப்பதும் போன்ற தொழிலில் ஈடுபட்டிருக்கும்
 பொழுது , இசைக்கும் அருந்ததியனுக்கும் உள்ள தொடர்பு
 கேள்விக்குறியாகி உள்ளது. அதுமட்டுமல்லாது அருந்ததியன்
 ஒடுக்கப்பட்டு தீண்டத்தகாதவனாக இருந்ததால் இசையை கற்கவும்
 முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இசை இங்கே எவ்வாறு உதயம்
 ஆனது?? ,  அருந்ததியன் மாட்டு தோலை பதப்படுத்தி செருப்பு
 தயாரித்தான், மேளங்களை தயாரித்தான் என வரலாறு கூறுகிறது.
 செருப்புகளை தயாரித்து மன்னர்களிடத்தில் கொடுத்தான் என கூறிய
 வரலாறு, மேளங்களை தயாரித்து யாரிடம் கொடுத்தான் என்பதை கூற
 மறந்துவிட்டது. மேலே கூறப்பட்டுள்ள நிகழ்வுகளையும். வரலாற்றயும்
 ஆராய்ந்து பார்க்கும்போது அருந்ததியன் ஒரு காலகட்டத்தில் இசை
 கலைஞனாக இருந்திருக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது. 
எடுத்துக்காட்டாக நானும் ஒரு இசைக்கலைஞன் என்பதை கூறுவதில்
 பெருமை கொள்கிறேன். நான் இன்றும் கர்நாடக இசையை பயிலாமல்
 என்னால் இசையை எவ்வாறு வெளிப்படுத்த முடிந்தது என்பது எனக்கு
 கேள்விக்குறியாகி உள்ளது.  என் முன்னோர்களின் மரபுகளின்
 காரணமாகவே என்னால் இசை கலைஞனாக முடிந்தது என்பதே
 உண்மை.

                                                                        --- அருந்ததியன்