சுடுகாட்டை அடைய ஆற்றைக் கடக்கும் அருந்ததியர்கள்
1993 ஆம் ஆண்டு. திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த ஆர்.முருகேசன் என்பவர் உயிரிழக்கிறார். அவரது உடலை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வரட்டாறைத் தாண்டி செல்ல முற்படுகிறார்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள். அப்போது நீர்வரத்து அதிகமாக இருந்ததால் முருகேசனின் இறந்த உடல் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. அவரது உடலை சுமந்து சென்று கொண்டிருந்தவர்களே தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டியிருந்தது.
தங்கள் பகுதியிலிருந்து சுடுகாட்டிற்கு வேறு பாதை இல்லாததால் சாலை வசதி அமைத்துத் தாருங்கள் என்ற அருந்ததியர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றபப்படவில்லை. இதர சாதியினருக்கு அந்தக் கிராமத்தில் மயானம் உள்ளது. தனி மயானம் உள்ள தலித்துகளோ அதற்குப் போகும் பாதை இல்லாததால் ஆற்று நீரில் இறங்கி மயானத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். பாலம் அமைத்துத் தருகிறோம் என்று நிர்வாகம் கொடுத்த உறுதிமொழி, உறுதிமொழியாக மட்டுமே இருக்கிறது.
பாலசமுத்திரம் பேரூராட்சியில் மொத்தம் 700 குடும்பங்கள் உள்ளன. அதில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 250 குடும்பங்கள். இந்தப்பிரச்சனை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த எம்.வேலுசாமி. மேலும் கூறிய அவர், இதற்கு முன்பாக பட்டா நிலமொன்றில் அருகிலிருந்த சாலையை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அந்த நிலத்திற்குச் சொந்தமானவரோ, சாலையின் நடுவில் சாமிசிலைஒன்றை வைத்துள்ளார். பிணங்கள் அந்த வழியாகப் போக முடியாது என்றும் கூறிவிட்டார். அப்போதிருந்து ஆற்றில் இறங்கிதான் செல்கிறோம் என்றார்.
2003 ஆம் ஆண்டில் வருவாய் அதிகாரி மற்றும் தாசில்தார் ஆகிய இருவரும் இந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளார்கள். ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுகிறோம் என்றார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பல முறை பிணங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மழை காரணமாக மயானத்திற்கே செல்லாமல் பல பிணங்கள் ஆற்றின் கரையிலேயே எரிக்கப்பட்டன.
மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. வழக்கம் போலவே மாவட்ட நிர்வாகம், இந்தப் பிரச்சனை பற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.