தலித் பெண்களுக்கான தேசிய கூட்டமைப்பு சார்பில் சென்னை இக்சா மையத்தில் 20.08.2011 அன்று தலித் பெண் வழக்கறிஞர்களுக்கு மனித உரிமைகள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. அக்கூட்டமைப்பின் தமிழக தலைவர் வழக்கறிஞர் எழில் கரோலின் தலைமையில் நடைபெற்றது. அப்பயிற்சி கருத்தரங்கில் அக்கூட்டமைப்பின் தேசிய தலைவர் ரூத் மனோரமா, பேராசிரியர் அரங்க மல்லிகா, திருமதி. பிரேமா, வழக்கறிஞர் ஹெப்சீபா ஆகியோர் கலந்துக்கொண்டு கருத்துரை வழங்கினர். விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அப்பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினர். அந்நிகழ்ச்சியில் பெண் வழக்கறிஞர்களும், சட்டக்கல்லூரி மாணவிகளும் கலந்துக்கொண்டனர்.
அங்கே உரையாற்றிய தொல்.திருமாவளவன், அடிப்படையில் ஆதிக்கம், அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்து போராடுவது என்பதே மனித உரிமைகளுக்கான போராட்டமாகும் என்று குறிப்பிட்டார். மேலும் பலவிதமான சமூக பிரிவினர்களுக்கான விளிம்பு நிலை மக்களுக்காக,சிறுபான்மையினருக்காக போராடுவதுதான் மனித உரிமை போராட்டம் என்பதை விளக்கினார் தலித்துகள் மட்டுமே ஒன்றுகூட வேண்டுமென்று கருதுவது பொது நீரோட்டத்திலிருந்து நம்மை நாமே விளக்கி கொள்கிற – தனிமைபடுத்திக் கொள்கிற ஆபத்தாக முடியும். ஆகவே தலித்துகள், தலித்தல்லாதவர்கள், சிறுபான்மையினர்கள் என அனைத்து தரப்பிலும் உள்ள ஜனநாயக சக்திகளோடு ஒருங்கிணைந்து போராடுதல் வேண்டும். நம்மை ஒதுக்குவதற்கோ தனிமைபடுத்துவதற்கோ நாம் அனுமதிக்க கூடாது என்றும் கூறினார்.
மதசார்பின்மை என்பது இன்று எல்லோராலும் பேசப்படுகிறது. உண்மையில் மதசார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராமல் இருப்பது என்று பொருள் கொள்ள முடியாது.சாதியை எதிர்க்கிற, தீண்டாமையை ஏற்காத, சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்துகிற மதங்களையும் அதற்கு நேரெதிரான ஆதிக்க போக்குள்ள மதங்களையும் சமமாக பார்க்க கூடாது. ஆகவே தான் பவுத்தம், சமணம், இஸ்லாம், கிறித்தவம் போன்ற மதங்களை சார்ந்து நாம் செயல்பட வேண்டியிருக்கிறது. இதுவே மதசார்பின்மைக்கான புரிதலாக இருக்க வேண்டும். இவ்வாறு மத சிறுபான்மை, மொழி சிறுபான்மை உள்ளிட்ட சிறுபான்மை பிரிவினர்க்காக போராடுவதுதான் மனித உரிமை போராட்டம் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.