தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு இலக்கியமா?


தலித் இலக்கியம் என்பது சாதி எதிர்ப்பு இலக்கியம் அல்ல. சாதி இருக்கிறது, அது என்னென்ன விதமாக இருக்கிறது, அது எந்தெந்த வடிவங்களில் இயங்குகிறது, நடைமுறை வாழ்வில் அதை எவ்வாறெல்லாம் செயல்படுத்துகிறார்கள் என்பதை, காலங்காலமாகச் சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை மட்டும் அது எப்படியெல்லாம் வதைத்துவந்திருக்கிறது என்பதைச் சொல்கிற இலக்கியமே தலித் இலக்கியம். சாதி இருக்கிறது, வர்ண வேறுபாடு இருக்கிறது, இந்தப் பாகுபாட்டால் இந்திய - தமிழ்ச் சமூகம் சமச்சீரான சமூகமாக இல்லாமல் மேல்கீழ் - உயர்வுதாழ்வு என்ற பலபடித்தான படிநிலைகள் கொண்ட சமூகமாக இருக்கிறது என்பதைத் தலித் இலக்கியம் மட்டும் பேசவில்லை, பழங்கால இலக்கியங்களும் பேசியுள்ளன.
நம்முடைய இலக்கியங்கள் மதத்தையும் சாதியையும் அடிப்படையாகக் கொண்டவை. இலக்கியப் படைப்புகள் மட்டுமல்ல இந்தியச் சமூகமே சாதியாலும் மதத்தாலும் கட்டமைக்கப்பட்டதுதான். நம்முடைய சாதியையும் மதத்தையும் சிதையாமல் காப்பவை நம்முடைய சடங்குகள்தான். இந்திய - தமிழ் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட எல்லாப் படைப்புகளின் மொத்த நோக்கமும் சாதியையும் மதத்தையும் வளர்ப்பதுதான். சமூக ஒழுக்கத்தை, அறநெறிகளைப் பேசிய அதே அளவுக்கு மதம் பற்றியும் சாதி குறித்தும் பேசியுள்ளன. மதத்திற்கொரு காப்பியம் கண்டது தமிழ்மொழி. 'வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்பாலொருவன்' என்று புற நானூறும், 'வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மலையும் தேரும் வாளும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கில்லை' என்று தொல்காப்பியமும், 'மொழிக்கொரு பசப்பும் முலைக்கொரு குலுக்கும் விழிக்கொரு பகட்டும் ஆய்' என்று குற்றாலக்குறவஞ்சியும், 'நால்வகைப்பாவும் நால்வகைக்குலத்தின் பால் வகைப்படும்' என்று சிலப்பதிகாரமும் 'எழுவகைக் கூத்தும் தமிழிசைக் குலத்தோரை ஆடவகுத்தனன் அகத்தியன்தானே' என்று திருநாவுக்கரசரும் எந்தெந்தச் சாதிக்கு என்னென்ன 'பா'வில் பாடல் புனைய வேண்டும் என்று பன்னிருபாட்டியலும், எட்டுத்தொகை, பத்துப்பாட்டிலும்கூடச் சாதிகுறித்து, வர்ணப்பாகுபாடு குறித்துத் தெளிவாகப் பேசியுள்ளதைக் காண முடியும். திருக்குறள்கூட 133, 927 ஆகிய பாடல்களில் சாதி குறித்து, வர்ணப்பாகுபாடு குறித்துப் பேசுகிறது. தமிழ் மொழியில் உருவான பெரும்பாலான இலக்கியங்கள் சாதி குறித்து, வர்ணப்பாகுபாடு குறித்துப் பேசியுள்ளதால் அவை குறிப்பிட்ட சாதிக்குரிய இலக்கியமாகிவிடுமா? பழங்கால இலக்கியங்களும் தலித் இலக்கியமும் சாதி இருக்கிறது என்று சொல்கின்றன. ஆனால் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை.
தமிழ் இலக்கிய வரலாற்றில் சாதியும் வர்ணப்பாகுபாடும் கூடாது என்று முதலில் பாடியவர்கள் சித்தர்கள்தான். ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படி 'சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பதெக்காலம்' என்று பத்திரகிரியாரும், 'பறைச்சியாவது ஏதடா பனத்தியாவது ஏதடா இறைச்சித்தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ' என்று சிவவாக்கியாரும் பேசுகிறார்கள். சித்தர்களுக்கு அடுத்த நிலையில், சாதிமதந் தவிர்த்தவரே அணைய 'வாரீர்' என்று வள்ளலார் பாடுகிறார். கடைசியாகச் சாதி கூடாது என்று பேசியவர் பாரதி. சாதி இருக்கிறது, வர்ணப்பாகுபாடு இருக்கிறது என்று சொன்ன இலக்கியங்களும் சாதி கூடாது, வர்ணப் பாகுபாடு கூடாது என்று சொன்ன இலக்கியங்களும் 1990வரை தமிழ் நாட்டில் இலக்கியங்களாகத்தான் மதிக்கப்பட்டன. இன்றும் அப்படித்தான் மதிக்கப்படுகின்றன. 1985க்குப் பிறகு சாதி குறித்தும் அது நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்தும் குறிப்பாகத் தலித்துகள் எழுதிய இலக்கியங்கள் மட்டும் இலக்கியங்களாக மதிப்பிடப்படாமல் சாதிக்குரிய இலக்கியங்களாக ஏன் மதிப்பிடப்படுகின்றன? தலித் அல்லா தோர் சாதியைப் பற்றி எழுதினாலும் நால் வர்ணப்பாகுபாடு குறித்து எழுதினாலும் தீண்டாமை குறித்து எழுதினாலும் அவை இலக்கியங்களாக மட்டுமே மதிப்பிடப்படுகின்றன. வகைப்படுத்தல்கூட ஒரு வகை தீண்டாமையே. பூமணியின் பிறகும் சிவகாமியின் பழையன கழிதலும் ஆனந்தாயியும் எப்போது தலித் நாவல்களாக வகைப்படுத்தப்பட்டன? சிறந்த படைப்பு தன்னைத்தானே நிலை நிறுத்திக்கொள்ளும். எந்தத் தத்துவத்தாங்குதலுமின்றி. இலக்கியப் படைப்பில் பிரகடனங்களுக்கு இடமில்லை.
தலித்துகளைக் கொண்டே தலித் இலக்கியம் குறித்துப் பேசவைப்பது, தலித்துகளின் படைப்புகளை மட்டுமே கொண்டு சிறப்பு மலர் வெளியிடுவது, தலித்துகள்தான் தலித் இலக்கியம் குறித்துப் பேச, எழுதவேண்டும் (அது உண்மைதான்) என்று சொல்வதுங்கூட ஒருவகையான தீண்டாமைதான். அங்கீகரிக்கிறோம் என்பது இலக்கியரீதியான அங்கீகாரமா, சாதிரீதியான அங்கீகாரமா? சாதிரீதியான அங்கீகாரம் என்பது சலுகை. சாதிரீதியான அங்கீகாரம், தனி அடையாளம், தனிவரையறை என்பதுகூடத் தீண்டாமைதான். சாதியை மேலும் இறுகச்செய்கிற காரியம். சட்ட மன்றத்தில், நாடாளுமன்றத்தில், வேலைவாய்ப்புகளில் சாதிரீதியான சலுகைகள் வழங்கப்படுவதுபோலத் தற்காலத்தில் அச்சு, காட்சி ஊடகங்களில் 'தலித்துகளுக்கு வாய்ப்பு' என்ற பெயரில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இடஒதுக்கீட்டு முறையில் இலக்கியம் உருவாக்கப்படக் கூடியதா?
தமிழ்நாட்டிற்குத் 'தலித்' என்ற சொல் அறிமுகமாகி இருபதாண்டு காலம் முடிந்துவிட்டது. ஆனாலும் தலித் இலக்கியம் என்பது என்ன, அதற்குரிய வரையறை என்ன, அழகியல் என்ன என்பது குறித்து இறுதியான தெளிவுக்கு வருவதற்குள்ளாகவே தலித் இலக்கியப் போக்கில் பெரிய தேக்கநிலை ஏற்பட்டுவிட்டது. ஏன்? தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்து தமிழில் முழுமையான உரையாடல் எழுவதற்குள்ளாகவே ஒடுக்கப்பட்டோர் இலக்கியம், விளிம்பு நிலை இலக்கியம் என்ற விவாதமும் எழுந்தது ஏன்? தலித் இலக்கியம், தலித் அரசியல் குறித்து ஆரம்ப நிலையில் பேசிய அறிவுஜீவிகள், ஏன் பிற அறிவுசார் துறைகள் குறித்துப் பேச ஆரம்பித்தார்கள்? தலித் அரசியல் தலைவர்கள், தலித் அரசியலையும் தலித் இலக்கியம் குறித்தும் பேச ஆரம்பித்ததாலா?
தலித் இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்தவர்கள் - தலித் இலக்கியத்தின் குணங்களாக மரபுகளை உடைப்பது, எதிர்மறையான சொல்லாடல்களை உருவாக்குவது, புதிய தொன்மங்களைப் படைப்பது, தலித் மொழியில் எழுதுவது, மரபார்ந்த வடிவத்தை மாற்றுவது, காலம் காலமாக இலக்கியத்திற்குரியதாக வரையறுக்கப்பட்ட எல்லா இலக்கணங்களையும் மீறுவது, கலகம் செய்வது, ஆவே சத்தை, ஆத்திரத்தை, முரட்டுத் தனத்தை வெளிப்படுத்துவது, வசையைப் பதிவுசெய்வது என்று பட்டியலிடுகின்றனர். இந்தக் கூறுகள் சாதியமைப்பை மேலும் இறுகச் செய்கிற செயலாக மாறுவதற்கு வாய்ப்புண்டு. தலித் இலக்கியத்தின் நோக்கம் சாதியை ஒழிப்பதா, வளர்ப்பதா? சாதியைப் புதிய வடிவில் புனரமைப்பதா? சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பது மட்டுந்தான் தலித் இலக்கியத்தின் நோக்கமா? சாதிமுறையிலான இழிவுகளை, கொடுமைகளை, அசிங்கங்களைப் பதிவு செய்வது மட்டுந்தான் அதனுடைய உண்மையான நோக்கமா? உண்மையில் தலித் எழுத்தாளர்கள் வலிமையாக முன்வைக்க வேண்டியது எதை? தலித் எழுத்தின் அடிப்படையான நோக்கம் என்ன? எதை முன்னிலைப்படுத்த, அடையாளப்படுத்த விரும்புகிறது? தலித்துகள் என்பவர்கள் அசிங்கமானவர்கள், ஒழுக்க மற்றவர்கள், தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்கள், உயர்வதற்கு விரும்பாதவர்கள் என்பதாகத்தான் தமிழில் இலக்கியப் படைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்நிலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காமல் தலித் இலக்கியம் என்ற பெயரில் தலித்துகள் பட்ட வேதனையை, அசிங்கத்தை, இழிவை, அவமானத்தை அப்பட்டமாக சுயசரிதை என்ற பெயரில் பதிவுசெய்வது என்பது எதை நோக்கி நகர்த்தும்? எவற்றையெல்லாம் காரணம்காட்டி, தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறதோ அவற்றையே தலித்துகளின் வாழ்வாக, அடையாளமாக, அழகியலாக, இலக்கியமாகப் பதிவுசெய்வது என்பது சாதியத்தை ஒழிக்குமா, வளர்க்குமா?
நான் எழுதும்போது, நான் வாழ்கிற காலத்தின் சமூகச் சித்திரத்தை எழுத வேண்டும் - பதிவுசெய்ய வேண்டும் என்று நினைத்துத்தான் எழுதுகிறேன். எழுதும்போது மட்டுமல்ல, படிக்கும்போதும்கூட ஒரு இலக்கிய நூலைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படிக்கிறேன். சிறந்த இலக்கியம் என்பது இனம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்தது. சிறந்த படைப்பு ஆரோக்கியமான உரையாடலுக்கும் விவாதத்திற்கும் வழிவகுக்கும். ஒரு படைப்பு எந்த அளவுக்கு விவாதத்தையும் உரையாடலையும் சமூகத்தில் நிகழ்த்துகிறதோ அதை வைத்துத்தான் அந்தப் படைப்பின் தரம் - மதிப்பு நிர்ணயமாகிறது. அதுதான் இலக்கியத்தின் அளவுகோலுமாகும். எந்தச் சாதிக்காரன், மொழிக்காரன், நாட்டுக்காரன் எழுதினான் என்பதை வைத்து இலக்கியத்தின் தரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. இலக்கியப் படைப்புக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லா இலக்கண, அழகியலையும் கொண்டு, வாழ்வின் சாரம் சார்ந்து எழுதப்பட்ட படைப்பை இலக்கியமாகப் பார்க்காமல் அதை எழுதிய எழுத்தாளனின் சாதியைக் கொண்டு மதிப்பீடு செய்வது என்பது தீண்டாமையல்லாமல் வேறென்ன? இதைவிடப் பெரிய அவமானம், இழிவு அந்த எழுத்தாளனுக்கு வேறு என்ன இருக்க முடியும்?
செய்தியைச் சொல்வது வேறு; கதை சொல்வது வேறு. தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் செய்திகளைச் சொல்பவர்களாகவே இருக்கிறார்கள். கதை சொல்வது என்பது வாசகனின் கற்பனைக்கு, யூகத்திற்கு, பூர்த்திசெய்வதற்கு இடமளிக்க வேண்டும். அவ்வாறு இடமளிக்கிற படைப்புத்தான் இலக்கியப் படைப்பு என்பது. தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள் செய்திகளைத்தான் கதை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கதை என்பது மொழியில் உள்ளது; மொழியால் கட்டமைக்கப்படுவது. மன உணர்வுகளைக் கொட்டிக்கொண்டேயிருப்பது. கதை சொல்ல, எழுதத் தெரியாதவர்கள் செய்கிற காரியம். இயற்கையாக நடக்கிற நிகழ்வுகளைப் பிறர் சொல்லும்போது, எழுதும்போது, இயற்கையான சம்பவம் புனைவாகிவிடுகிறது. புனைவாக மாற்றப்பட்ட நிகழ்வு படிக்கும்போது, கேட்கும்போது ஏற்படுத்துகிற தாக்கத்தை வைத்துத் தான் அந்தப் புனைவிற்கு மதிப்பு ஏற்படுகிறது. இந்த மதிப்பைத்தான் தரம் என்று சொல்கிறோம். எழுத்தாளன் வாழ்விலிருந்துதான் படைப்பை உருவாக்க வேண்டும். தத்துவங்களிலிருந்து அல்ல. படைப்பாளியின் மனம் உருவாக்கும் உலகம் மட்டுமே படைப்பாவதில்லை. ஒரு எழுத்தாளன் எதை எழுதுவது என்பதைவிட எதை எழுதக் கூடாது என்பதுதான் படைப்பிலக்கியத்தில் முக்கியமானது. இதுதான் தேர்வு. இந்தத் தேர்வுதான் படைப்பிலக்கியத்தில் முக்கியமான பகுதி. சிறந்த இலக்கியப் படைப்பு என்பது தன்னுள் எந்த அடையாளத்தையும் கொண்டிருக்காது என்பதோடு தன்மீது ஏற்றப்படும் அனைத்து மதிப்பீடுகளையும் புனிதங்களையும் உதறித்தள்ளுவதாகவே இருக்கும் என்பதைத் தலித் மட்டுமல்ல எல்லா எழுத்தாளர்களும் அறிந்தால் நல்லது.
இலக்கியப் படைப்பு என்பது கலாச்சாரச் செயல்பாடு. அதனுடைய நோக்கம் சமூக மேம்பாடுதான். ஒரு படைப்புக்குரிய தரம், மதிப்பு என்பது அந்தப் படைப்பு எந்த அளவுக்கு வாசகர் கவனத்தை ஈர்க்கிறது என்பதைப் பொறுத்துத்தான் தீர்மானமாகிறது. அந்தப் படைப்பை எழுதிய எழுத்தாளனின் சாதியை வைத்தல்ல. இலக்கியப் படைப்பின் நோக்கம் சாதி வளர்ப்பல்ல. மொழியின் வழியே வாழ்வை உற்றுநோக்குவது தான் இலக்கியம். அதாவது வாழ்வின் உள்முகத்தை ஆராய்வது. நிஜமான இலக்கியம் சமூகத்தின் எல்லாவிதமான கவர்ச் சிகளிலிருந்தும் விடுபட்டதாக இருக்கும். அது வாழ்வுக் குறித்த முடிவில்லாத உரையாடலைத் தொடங்குவதாக இருக்கும். வாழ்க்கை என்பது எண்ணற்ற வியப்புகளால் நிரம்பியது. அதிசயங்களால் நிறைந்தது உலகம்.
மார்க்சியமாகட்டும், பெண்ணியமாகட்டும், தலித்தியமாகட்டும் எல்லாமே எழுத்தாளனுக்குத் தடைகள்தான். புத்தியில் படிந்துள்ள ஆயிரமாயிரம் அபிப்பிராயப் பேதங்களை, வைத்திருக்கிற கோட்பாடுகளை, கொள்கைகளை, இசங்களைவிட்டு எழுத்தாளன் விலக வேண்டும். தத்துவங்களின் பிடியிலிருந்து, சித்தாந்தங்களின், மனமயக்கங்களின் பிடியிலிருந்து விலக வேண்டும். எல்லாத் தடைகளையும் தாண்டிப் போகும்போதுதான் வாழ்வின் ரகசியத்தை அறிய முடியும். வாழ்க்கை என்னவாக இருக்கிறதோ, அதை அப்படியே திறந்த மனத்துடன் அணுக வேண்டும். அனுமானங்களை, யூகங்களைக் கடந்து நின்று சமூகத்தைப் பார்க்க வேண்டும். வாழ்க்கை என்பது காலம்காலமாக மர்மங்கள் நிறைந்ததாகவும், ரகசியங்கள் நிறைந்ததாகவும் இருந்துகொண்டிருக்கிறது. அந்த மர்மங்களுக்குள் ரகசியங்களுக்குள் முன்தீர்மானங்களுடன் அபிப்பிராயப் பேதங்களுடன் நுழையக் கூடாது. அப்படிப் போகும்போது அந்த எழுத்தாளன் அவனுடைய தீர்மானங்களைத் தாண்டி எதையும் பார்க்க முடியாது. முன்தீர்மானங்களின் அடிப்படையில், விருப்பு வெறுப்புகளின் அடிப் படையில் உருவாக்கப்படுவதல்ல இலக்கியம், இலக்கியத்திற்கு அடிப்படையாக இருப்பது உணர்ச்சிப் பெருக்கு, அறிவு அல்ல. அறிவு முன் தீர்மானங்களையும் முடிவுகளையும் மட்டுமே உருவாக்கும். நிஜமான இலக்கியம் இந்த இரண்டு குணங்களையும் கடந்து நிற்கும். தலித் இலக்கியம் என்பது சாதி எதிர்ப்பு இலக்கியமாக, சாதி வளர்ப்பு இலக்கியமாக இருக்கிறதா என்பதல்ல, அது இலக்கியமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியமானது. சமூக மொழிதான் முக்கியம் - எழுத்தாளனின் மொழியல்ல. சமூகம் என்பது மொழி சார்ந்த ஒரு பரப்பு / கற்பனைகள், செயல்திறன்கள் மட்டுமே படைப்பாவதில்லை.
சாதாரண மனிதர்களைவிடப் படைப்பாளிகள்தான் பல வேலிகளுக்குள் அகப்பட்டுக் கிடக்கிறார்கள். பெண்ணியவாதி, மார்க்சியவாதி, தலித்தியவாதி என்று ஒரு சிறைக்குள் இருந்துகொண்டு உலகத்தை எட்டிப்பார்க்கிறார்கள். எழுத்தாளனுக்கு வேலிகளற்ற சுதந்திரம் வேண்டும். அவன் தன்னளவில் முழுமையான சுதந்திரம் உள்ளவனாக இருக்க வேண்டும். பாசாங்குகளையும் எழுத்தாளன் என்கிற அடையாளத்தையும் விட்டுவிட வேண்டும். எழுத்தாளர்கள் மூன்று விதமாக இருக்கிறார்கள். ஒரு பிரிவினர் சூழலுக்குத் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பவர்கள். இன்னொரு பிரிவினர் சூழலிலிருந்து தப்பித்து விலகி ஓடுபவர்கள். மூன்றாம் பிரிவினர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள். தலித் எழுத்தாளர்கள் என்பவர்கள் இந்த மூன்று பிரிவுகளில் எந்தப் பிரிவில் இருக்கிறார்கள்? காலம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. காலத்தின் முன், சமூகத்தின் முன் எழுத்தாளன் வெறும் பார்வையாளன் மட்டுமே. சமூகத்தில் நிகழும் மாற்றங்களை நிஜமான கலைஞன் கூர்ந்துப் பார்க்கிறான். தான் பார்த்தவற்றை நேர்மையான முறையில் சார்ப்பற்ற நிலையில் பதிவுசெய்கிறான். அப்படிச் செய்கிறவன்தான் கலைஞன். அப்படிச் செய்யப்படுவதுதான் கலைப் படைப்பு.
குரலற்றவர்களுக்குக் குரலைக் கொடுப்பவன் எழுத்தாளன். படைப்பு என்பது அறிதல். படைப்பாளியின் நோக்கம் அறிந்துகொள்ளுதல் மட்டுமே. அறிந்ததிலிருந்து அறியாததை நோக்கிய பயணம். அதாவது தேடல். அர்த்தத்திலிருந்து அர்த்தமின்மைக்கும், அர்த்தமின்மையிலிருந்து அர்த்தத்தை நோக்கியும் நகர்வது. இது கலைப் படைப்பின் நோக்கம் மட்டுமல்ல கலைஞனின் நோக்கமும்கூட. உலகத்தில் பெரிய எழுத்தாளர்கள் என்று போற்றப்படுகிற எந்த எழுத்தாளனும் கோட்பாட்டை உருவாக்கிக்கொண்டு உன்னதமான படைப்பை உருவாக்கியதாக வரலாறுகள் இல்லை.
வாழ்க்கை தர்க்கரீதியானது அல்ல. தர்க்கத்திற்குக் கட்டுப்பட்டது மல்ல, நடைமுறை வாழ்க்கையில் தத்துவங்களுக்கும் தர்க்க ஒழுக்கங்களுக்கும் இடமில்லை. எழுத்தாளனுக்குத் தகவலறிவு மட்டுமே போதாது. எழுத்தாளன் கருத்தை, தகவலை, யூகத்தை நிஜமென நம்புவதைக் கைவிட வேண்டும். எழுத்தாளன் எல்லாவற்றையும் தேடுகிறவனாக, கேள்விகளைக் கேட்கிறவனாக மட்டுமே இருக்க வேண்டும். தேடுதல்தான் இலக்கியம்; பதில்களும் விடைகளுமல்ல. முன்தீர்மானங்களும் நம்பிக்கைகளும் எழுத்தாளன் நினைப்பதை அடைவதற்குத் தடைகளாக இருக்கிறது. நிஜமான எழுத்தாளன் தடைகளற்றவனாக, வேலிகளற்றவனாக இருப்பான். தடைகளற்ற, வேலிகளற்ற எழுத்தாளனின் எழுத்து சமூகத்தின் இழிவுகளை அகற்றுவதற்குப் பெரிய சக்தியாக இருக்கும்.