புகழ்பெற்ற வரலாறு

தளபதி ஒண்டிவீரன்



இந்திய விடுதலைப் போராட்டம் எங்கே, எப்போது துவங்கியது? என்று சொல்ல யாருக்கும் துணிச்சல் இல்லை, அது வீரம் விளைந்த தமிழ்மண்ணில்தான் என்று சொல்ல பலருக்குத் தயக்கம்! வெள்ளையர்கள் வியாபாரிகளாகத்தான் நம்நாட்டிற்கு வந்தார்கள். பின்னர் கொள்ளையர்களாக மாறினார்கள். அதைத்தான் நாம் எதிர்த்தோம். வந்தேறிகள் நாட்டை ஆள்பவர்களாக மாறி வரி வசூலித்தார்கள். எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
அதைத்தான் எதிர்த்தார்கள் தமிழ் சிற்றரசர்களின் சிலர். அந்த எதிர்ப்புதான் போர்களாயின. அந்தப்போர்கள்தன் இந்திய விடுதலைப் போருக்கான ஆரம்ப விதைகள். அந்த விதைகளில் பல மறைக்கப்பட்டதுதான் கொடுமை. வீரம் விளைந்த மண்ணில் விதைக்கப்பட்டவர்களின் வீரவரலாற்றை மறைக்க யாருக்கும் உரிமை இல்லை.
தளபதி ஒண்டிவீரன்
1755! இந்திய விடுதலை வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வைத்த ஆண்டு. உலக அரங்கில் ஒரு அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன் வீரத்தைப் பதிவு செய்த ஆண்டும் அதுதான்.
விடிந்தால் போர். அது சாதாரண போர் அல்ல. பீரங்கிகள் வெடிமருந்து குவியல்கள். துப்பாக்கிகள் என்று பல ஆயிரம் பேர்கொண்ட பெரும்படையுடன் ஆங்கிலேய தளபதி கர்னல் ஹெரான், மாவீரன் பூலித்தேவனின் நெற்கட்டான்செவலைத் தாக்கப்பதுக்கியிருக்கிறான்.
""விடிந்தால் எங்கள் பீரங்கிகளுக்கு பூலித்தேவனின் ராஜ்ஜியமே சாம்பல். முடிந்தால் தடுத்துக்கொள்'' என்று அறைகூவல் விடுக்கிறான். தீப்பிழம்புகளைக் கக்கும் பீரங்கிகளின் பேய்வாய்கள் எல்லாமே நெற்கட்டான்செவலை நோக்கி நிறுத்தப்பட்டுவிட்டன.
ஏற்கெனவே இரண்டு முறை பூலித்தேவனை எதிர்த்து தோற்றோடிய வெள்ளைக்காரர்கள்தான் இவர்கள். இம்முறை பூலித்தேவனின் கோட்டையை தகர்த்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டியபடி, இரவோடு இரவாக முகாமிட்டிருந்தார்கள்.
""வரி கொடுக்க ஒப்புக் கொண்டால் சமாதானமாகப் போவோம். இல்லாவிட்டால் போர்தான். நெற்கட்டான்செவல் அழிவது உறுதி'' என்று சவால் விட்டான், ஹெரான்.
ஆனால் பூலித்தேவன், ""ஒரு நெல்மணியைக் கூட வரியாக செலுத்த முடியாது. முடிந்ததைப் பார்'' என்று எதிர் சவால்விட்டான். ""இதில் எங்களை வென்றால் நெல்லைச் சீமையைவிட்டே நாங்கள் புறப்படத் தயார்'' என்று வேறு ஏளனம் செய்தான் வெள்ளையன். ஹெரானின் சவாலுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். அதற்கு ஏற்ற வீரனைத் தேடினார் பூலித்தேவன்.
தளபதி ஒண்டிவீரன், ""நான் ஒருவன் போதும், எதிரிகளின் படையை அழிக்க'' என்று முன்வந்தான். பூலித்தேவன் சம்மதிக்க, புறப்பட்டான் ஒண்டிவீரன் ஒண்டியாக, எதிரிகள் முகாமிற்கு.
நெற்கட்டான் செவலுக்கு அருகில் உள்ள "தென்மலை' முகாமில்தான் எதிரிப்படை முகாமிட்டிருந்தது. முகாமில் ஒரே கும்மிருட்டு. தீவட்டியுடன் சில வீரர்கள் பாதுகாவலுக்கு நின்றிருந்தார்கள். அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவியபடி எப்படியோ முகாமிற்குள் புகுந்துவிட்டான் ஒண்டிவீரன்.
அப்படியிருந்தும் ஓரிருவர் பார்த்துவிட்டார்கள். "யார்?' என்று கேட்கிறார்கள். ""நான் குதிரை வாரை செப்பனிட வந்தவன்'' என்று பொய் சொல்கிறான். நம்பிவிடுகிறார்கள்.
நடு இரவை தாண்டி பொழுது ஒண்டிவீரன் மெல்ல தன் வேலையைக் காட்டத் தொடங்கினான். சத்தம் எழாமல், பீரங்கிகளின் அருகில் செல்கிறான். நெற்கட்டான்செவலை நோக்கி இருந்த பீரங்கிகளின் வாய்களை, தங்கியிருந்த முகாமை நோக்கித் திருப்பி விடுகிறான். அங்கிருந்த பட்டத்துக் குதிரை ஒன்றை அவிழ்த்துக் கொண்டு, வெளியேறப்பார்க்கிறான்.
குதிரை கலவரப்பட்டு மிரண்டு போக, சத்தம் கேட்டு சில வீரர்கள் ஓடி வருகிறார்கள். அதற்குள் ஒண்டிவீரன் அருகில் இருந்த குதிரையின் காடிக்குள் படுத்து, தன் மேல் புற்களைத் தூவி யாரும் அறியாதபடி ஒளிந்து கொண்டான்.
குதிரையைப் பிடித்த எதிரி வீரர்கள், குதிரையைக் கட்டிப்போட இடம் தேடுகிறார்கள்.




 ஒரு வீரன் பெரிய ஈட்டி போன்ற ஆயுதத்தை காடியில் அறைகிறான். அது ஒண்டிவீரனின் இடது கை வழியாக தரைக்குள் இறங்குகிறது. ஈட்டி இறங்க இறங்க வலி அதிகரிக்கிறது. ஆனால் ஒண்டி வீரன் கத்தவில்லை. வலியைத் தாங்கிக் கொள்கிறான். அந்த ஈட்டி முளையில் குதிரையைக் கட்டிவிட்டு வீரர்கள் தூங்கப் போய் விடுகிறார்கள்.
அந்த முளையிலிருந்து கையை எடுக்க முடியாத நிலை. வலி கூடிக்கொண்டே போகிறது. விடிய இன்னும் சிறிதுநேரம்தான் இருக்கிறது. வேறு வழியே இல்லை. அங்கு களவாடிய பட்டாக்கத்தியால் சத்தம் எழாமல் தன் இடக்கையை தானே வெட்டித் துண்டாக்குகிறான். யாருக்கு அந்தத் துணிச்சல் வரும்?
வெட்டுப்பட்ட கை. கொட்டும் ரத்தம். இதோடு அந்த குதிரையையும் சத்தம் எழாமல் கிளப்பி, அதன் மேல் எறியபடி அபாய முரசையும் ஓங்கி உதைக்கிறான். எதிரிகள் வந்துவிட்டார்கள் என்பதற்கான எச்சரிக்கை ஒலியாக அதை நினைத்து, பீரங்கி வீரர்கள், பீரங்கியை இயக்குகிறார்கள். குண்டுமழை பொழிகிறது.
அது தங்கள் படை முகாம் மேலேயே தாக்கி அழித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு அவர்கள் பதறுகிறார்கள். முகாம் முற்றிலும் அளிக்கப்படுகிறது. அதற்குள் எதிரியின் குதிரையிலேயே மின்னல் வேகத்தில் நெற்கட்டான்செவலுக்குப் பறக்கிறான் ஒண்டிவீரன்.
எதிரிகளை முற்றிலும் அழித்துவிட்ட சந்தோஷத்தில் பூலித்தேவனிடம் வருகிறான். எதிரியின் குதிரையையும் பட்டாக்கத்தியையும் ஒப்படைக்கிறான். கூடவே வெற்றிச் செய்தியையும் அறிவிக்கிறான்.
அப்போதுதான் ஒண்டி வீரனின் கை துண்டிக்கப்படடு இருப்பதைக் கண்டு துணுக்குறுகிறார் பூலித்தேவன்.
""எப்படி உன் கை துண்டிக்கப்பட்டது?'' என்று கேட்க, ""இந்தக் கை துண்டானால் என்ன, நம் தாய் மண்ணை விட்டு எதிரிகளை விரட்டிவிட்டோமே, அதுவே போதும். இந்தக் கைக்கு பதிலாக தங்கக் கை செய்து தரமாட்டீரா என்ன?'' என்றாராம் ஒண்டிவீரன்.
போர்க்களத்தில் ஒண்டி வீரனுக்கு நிகர் அவனே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டதாக பூலித்தேவன் பாராட்டினார்.
கொரில்லாப் போர் முறையில் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். போர்த்தந்திரங்கள் முற்றிலும் தெரிந்தவர். போர்க்களம் புகுந்துவிட்டால் வெற்றி வாகை சூடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர். நெற்கட்டான்செவல், திருநெல்வேலி, களக்காடு, கங்கைகொண்டான், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் எல்லாம் வெள்ளையர்களை ஓட ஓட விரட்டியவன் ஒண்டிவீரன். பூலித்தேவனுக்குப் பிறகும் கூட, அவரது மகன்களுக்கு உதவியாக இருந்து புதுக்கோட்டைப்போர் முதலியவற்றில் வெள்ளையர்களை எதிர்த்து வெற்றிவாகை சூடியவன். இவனைப் பற்றி வீர காவியமே பாடலாம்.
நொண்டிச் சிந்து, ஒண்டிவீரன் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவையே அவனது வீரத்திற்கு சாட்சி.
ஒண்டிவீரனின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் ஈடு இணை எதுவுமே இல்லை. தற்போது பாளையங்கோட்டையில் அவருக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டுவது அவரது வீரத்திற்குக் கிடைத்த சிறப்பு. அருந்ததியர் சமூகத்திற்கு கிடைத்த பெருமை.



Thanks to THINAMALAR




விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்துக்கு அடிக்கல்




 விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்துக்கு அடிக்கல்
சென்னை, ஜன.18 (டிஎன்எஸ்) திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபம் கட்ட செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று (ஜன.18) அடிக்கல் நாட்டினார்.

இந்த மணிமண்டபம் ரூ. 50 லட்சம் செலவில் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே கட்டப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் மைதின்கான், பூங்கோதை, எம்எல்ஏ.,க்கள் கருப்பசாமி பாண்டின், மாலைராஜா, அப்பாவு, எம்.பி.,க்கள் ராமசுப்பு, தங்கவேலு, மேயர் ஏ.எல். சிப்பிரமணியன் உள்ளிட்டோ ர் பங்கேற்றனர். (டிஎன்எஸ்)
 விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்துக்கு அடிக்கல்








ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரன்



இந்திய விடுதலைப் போராட்டம் அல்லது பிரித்தானிய எதிர்ப்புக்கான போராட்டக் களத்தில் முன்னிலை வகித்தது தமிழ்ச் சமூகம்தான். இந்த உண்மை நிலையை எடுத்துச் சொல்ல எனக்குக் கிடைத்த ஒரு பெருஞ் சான்று மாவீரன் ஒண்டிவீரனின் வரலாறு.
கி.பி. 1857இல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் அல்லது அச்சமயத்தில் வட இந்தியாவில் எழுந்த கிளர்ச்சிகளையே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் சிப்பாய்க் கலகத்தை முதல் இந்திய விடுதலைப் போராட்டம் என வர்ணிக்கிறார். எனினும் பிரித்தானிய அரசு நிர்வாகம் உருவாக்கப்படுவதற்கு முன்னதாக கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த காலகட்டத்திலிருந்தே, அதாவது சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்னதாகவே பிரித்தானிய எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி விட்டது.
தென் தமிழகத்தில் பாளையக்காரர்களாக விளங்கி பிரித்தானிய எதிர்ப்பால் தம் உயிரை ஈந்த மாவீரர்களும் உண்டு. புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் இவர்களின் பங்கு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது நாம் அறிந்ததே.
ஆனால் சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக மாபெரும் போராளிகளின் வரலாறு குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. அதை மீட்டெடுக்கின்ற மாபெரும் பணியில் இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களும், அவர்களுக்கு ஆதரவான சனநாயகச் சக்திகளும் எடுத்துள்ள முயற்சியின் வெளிப்பாடே ஒண்டிவீரன், சுந்தரலிங்கம் போன்றோரின் வரலாற்றுப் பதிவுகள். அந்த வரிசையில் வரலாற்றில் தனித்து நிற்கின்ற ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரனின் வரலாற்றை நாம்தான் அறியச் செய்ய வேண்;டும்.
இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கே அமைந்துள்ள 'நெற்கட்டும் செவ்வல் கிராமமும்' அதனைச் சுற்றி 20 கி;.மீ. தொலைவில் அமைந்துள்ள கிராமங்களுமே 'நெற்கட்டும் செவ்வயல் பாளையமாகும்'. கி.பி.1750 காலகட்டத்தில் விசயநகரப் பேரரசின் நிர்வாகக் கட்டமைப்பில் தமிழகம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றுதான் நெற்கட்டும் செவ்வயல் பாளையம். அக்காலகட்டத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்புள்ளது.
விசயநகரப் பேரரசின் நிர்வாகக் கட்டமைப்பில் நெற்கட்டும் செவ்வயலிலிருந்து வரி வசூலிக்கும் உரிமையை முகலாய மன்னர்கள் பெற்றிருந்தனர். தங்களது ஆடம்பரமான செலவினங்களாலும், சூழ்ச் சியாலும் முகலாய மன்னர்கள், வரி வசூலிக்கும் அதிகாரத்தை ஆங்கிலேயர்களின் கிழக் கிந்தியக் கம்பெனிக்குத் தாரை வார்த்துக் கொடுத்தனர். வணிகம் செய்து பிழைக்க வந்த பிரித்தானியர்கள் மிகக் கடுமையான வரிகளை உருவாக்கிச் சுரண்டலின் உச்சகட்டத்தை அடைந்தனர். இந்தச் சுரண்டலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்; மாவீரர் புலித்தேவன.; அவருக்குத் தலைமைப் படைத் தளபதியாய் ஒப்பில்லா வீரனாகக் களத்தில் நின்றவர்தான் ஒண்டிவீரன்.
வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியாரும் இணைந்து கி.பி.1755இல் முதல் போரைத் தொடுத்தனர். இப்போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டியடித்தார் ஒண்டிவீரன். தொடர்ந்து கங்கை கொண்டார் போர், ஆழ்வார் குறிச்சிப் போர், வாசுதேவ நல்லூர்ப் போர் என மூன்று தாக்குதல்களைக் கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய போதும் மண்டியிடவில்லை மானமிகு ஒண்டிவீரனும், புலித்தேவனும்.
எனினும் தொடர்ந்து அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆங்கிலேயரின் நவீன பீரங்கிகள், துப்பாக்கிகளுக்கு முன்னால் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குத் தமிழர் படையின் வாளும் ஈட்டியும் தாக்குப்பிடித்ததே மாபெரும் வெற்றியாகும். மூன்று முறை தோற்று ஒடிய ஆங்கிலேயத் தளபதிகள் ஹெரான், ய+சுப்கான், மாப+ஸ்கான் போன்றோர் மிகப் பெரிய படைபலத்தோடு கி.பி.1767இல் நெற்கட்டும் செவ்வயலைத் தாக்கிய போது புலித்தேவன், சங்கரன்கோவிலில் உள்ள ஆவுடை நாச்சியார் கோவிலில் தஞ்சம் புகுந்தார். ஒண்டிவீரன் தன் மக்களோடும், புலித்தேவனின் வாரிசுகளோடும் பாளையத்தி லிருந்து வெளியேறி அடுத்த கட்டத் தாக்குதலுக்குத் தயாரானார். இந்நிலையில் ஆவுடை நாச்சியார் கோவிலில் தஞ்சம் புகுந்த புலித்தேவன் அங்கேயே சோதியில் அய்க் கியமானதாகச் சொல்லப்படுகிறது. வழக்கமாகத் துரோகத்தால் அல்லது சூழ்ச்சியால் கொல்லப்பட்டவர்களைத்தான் சோதியானதாகக் குறிப்பிடுவார்கள். (உதாரணமாக நந்தனார் வரலாறு)
தலைவனை இழந்த பாளையத்து மக்களுக்குத் தலைவனாகப் பொறுப்பேற்று அடுத்த கட்டத் தாக்குதலுக்கு நேரம் பார்த்துக் காத்திருந்தார் ஒண்டிவீரன். அப்போது ஆங்கிலேயர் இப்படிச் சவால் விடுத்தனர்: “உங்களில் எவனாவது வீரனாயிருந்தால், எங்கள் முகாமிற்குள் ஊடுருவிப் பட்டத்துக் குதிரையையும் பட்டத்து வாளையும் எடுத்துக் கொண்டு, நாங்கள் கட்டித் தொங்க விட்டிருக்கின்ற வெங்கல நகராவை ஒலிக்க வைத்து விட்டால் நாங்கள் நெற்கட்டும் செவ்வயல் பாளையத்தை உங்களிடமே தந்து விடுகிறோம்.”
இதுதான் சரியான தருணம் என்று உணர்ந்த ஒண்டிவீரன், தன்னந்தனியாக, ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியைப் போல் ஆங்கிலேயர் முகாமிற்குள் ஊடுருவினார்.
யாரென வினவிய ஆங்கிலேயருக்கு, குதிரைக்கு வார்த்தைக்கக் கூடியவன், போர்வீரர்களின் காலணிகளை (ப+ட்ஸ்களை) செப்பனிடக் கூடியவன் என்று பதில் கூறி ஒண்டிவீரன் உள்ளே புகுந்தார்;. சில நாட்கள் அந்த முகாமில் தங்கிப் பட்டத்துக் குதிரை மற்றும் வாள் போன்றவை வைக்கப்பட்டிருந்த இடத்தை முதலில் அறிந்தார். வெங்கல நகரா கட்டி விட்டிருப்பதையும், மணி ஒலித்தவுடன் எதிரிகளைத் தாக்கக் கூடிய பீரங்கிகள் தயார் நிலையில் இருப்பதையும் கண்டுணர்ந்த ஒண்டிவீரன் சவாலில் வெல்ல அமாவாசைக் கும்மிருட்டைத் தேர்வு செய்தார்.
முதலில் முகாமின் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகளை ஆங்கிலேயர் பக்கமே திருப்பி அமைத்தார் ஒண்டிவீரன். தடுக்க முயன்ற காவலர்களைக் குத்திக் கொன்றார். பட்டத்து வாளை எடுத்துத் தனது இடுப்பில் செருகிக்கொண்டு, குதிரையைக் கிளப்ப முயன்;ற போது குதிரை ஒத்துழைக்க மறுத்துக் கனைத்து ஓடியது. குதிரை வீரர்;கள் என்னவென்று காண ஓடி வந்தனர். ஒண்டிவீரன் குதிரைக்குத் தீனி போடுகின்ற காடியில் படுத்துப் புற்களைத் தன்மேல் பரப்பி ஒளிந்து கொண்டார். இருட்டில் யாரெனக் கண்டறிய முடியாத சூழலில் குதிரையை மீண்டும் காடிக்குப் பக்கத்திலேயே ஒரு ஈட்டியை அறைந்து, அதில் குதிரையைக் கட்டி விட்டுச் சென்றனர் குதிரை வீரர்கள்.
ஈட்டி தரையில் அறையப்படும் போது ஒண்டிவீரனின் கையும் சேர்த்து அறையப்பட்டது. ஒண்டிவீரன் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு காடியிலேயே படுத்துக் கிடந்தார் என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை. வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஒண்டிவீரன் கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. மீண்டும் குதிரை கணைத்து விட்டால் ஆபத்து என்பதை உணர்ந்து தான் இடுப்பில் செருகியிருந்த பட்டத்து வாளால் தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு மேலெழுகிறார்.
குதிரையைக் கிளப்பிக்கொண்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புயலெனப் புறப்பட்டார் ஒண்டிவீரன். எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வீரர்கள். பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடிப்பதைக் கண்டு அதிர்ந்தது ஆங்கிலேயர் படை. அழிந்தது வெள்ளையர் முகாம். ஆயிரக் கணக்கான வீரர்கள் செத்து மடிந்தனர்.
விடுதலைப் போராட்டத்தில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டுத் தன் உயிரைத் தியாகம் செய்த வீரர்களும் உண்டு. அதே நேரத்தில் பகைவர்களை அவர்களின் ஆயுதத்தைக் கொண்டே அழித்தொழித்த வீரர்களும் உண்டு. இதில் இரண்டாவது வகையின் முன்னோடியாக ஒப்பில்லாப் போராளியாக விளங்கியவர் ஒண்டிவீரன்.
கையை இழந்து விட்டாயே என்று கதறிய குடும்பத்தினரிடமும் பாளையத்து மக்களிடமும் - 'இந்தக் கை போனால் என்ன? எனக்குத் தங்கக் கை கொடுப்பீர்கள் நீங்கள்" என நம்பிக்கை ஊட்டியவர் ஒண்டிவீரன். தாய் மண்ணை மீட்டெடுக்கக் கை மட்டுமல்ல உயிரையும் கொடுப்பேன் என சூளுரைத்தார் ஒண்டிவீரன்.
புலித்தேவன் கி.பி. 1767இல் மறைந்த பிறகும் 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்ததாகச் சொல்லப் படுகிறது.
 அண்ணன்... எப்போது சாவான்? திண்ணை எப்போது காலியாகும் என்பது ஒரு தமிழ் வழக்காறு. புலித்தேவன் தேவர் சமூகத்தில் பிறந்தவர்! ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் வல்லாதிக்க எதிர்ப்புப் போரில் புலித் தேவன் மறைந்த பிறகும் எதிரிகளுக்கு விலை போகாமல் மீண்டும்............ போராட்டத்தைத்.............; தொடர்ந்த நேர்மையான தமிழன் ஒண்டிவீரன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை புலித்தேவனின் மக்களை, குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தவர் ஒண்டிவீரன். அதனால்தான் இன்றும் தேவர் சமூகம் ஒண்டிவீரனைக் காவல் தெய்வமாகவும், ஒண்டிவீரனின் சமூகம் புலித் தேவனை நன்றியுணர்வோடும் வழிபட்டு வருகிறார்கள்.
 தேவர் சமூகத்தில் பிறந்த முனைவர் இராசய்யாவும், இறைப்பணி செய்து வரும் அருட்தந்தை மார்கு அவர்களும் அருந்ததியர் சமூகத்தில் பிறந்த வரலாற்றாசிரியர் எழில் இளங்கோவனும் எழுத்தாளர் பிரபஞ்சனும் இணைந்து ஒண்டிவீரனின் வீரஞ் செறிந்த வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகம் அறியச் செய்தனர்.
தமிழர்களின் வீரம் -
தமிழர்களின் விவேகம்
தமிழர்களின் போர்த் தந்திரம்
ஒண்டிவீரனின் வரலாற்றின் மூலமாகவும் இனி முன்னெடுத்துச் செல்லப்படும்.
(சமுக நீதித் தமிழ்த் தேசம் ஜனவரி 2011 இதழில் வெளியானது)




பொட்டிப் பகடை



            பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது 1799-ம் ஆண்டு. அவருக்குப் பிறகு பாளையக்காரராகத் தம்மை அறிவித்துக்கொண்ட, அவரது தம்பி ஊமைத்துரை கொல்லப்பட்டது 1801-ம் ஆண்டு. இடையில் கழிந்த இரண்டு ஆண்டுகள் மேலும் முப்பது நாட்கள், கும்பனிக்கு எதிராக, ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார் ஊமைத்துரை என்கிற குமாரசுவாமி. ஊமைத்துரையோடு அவருக்கு நிகராக, சில வேளைகளில் மேலாகப் போர்ச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர், பாஞ்சாலங்குறிச்சியின் தளபதியாக இருந்த கட்ட கருப்பச் சுந்தரலிங்கத்தேவேந்திரர் என்றே வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இப்போதும் வெள்ளையருக்கு எதிராகப் படைகளும், நாயக்கர்களும் தேவேந்திரர்களும் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள், ஊமைத்துரைக்கு ஆதரவாக.

கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்-பட்டபோது (16.10.1799) ஊமைத்துரையும் அவருக்கு நெருக்கமான உறவும், சில வீரர்களும் ஆகப் 16 பேரும் பாளையங்கோட்டைச் சிறையில், தூக்குக் கயிறை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கைவிலங்கும், கால் விலங்கும் போடப்பட்டு மிக விழிப்பாகக் கண்காணிக்கப்பட்டனர்.

முன்னர், 9.9.1799 அன்று கோல்வார்பட்டியில் நடந்த சண்டையின்போது தலைமறைவான சுந்தரலிங்கம், சும்மா இருக்கவில்லை. தலைமறைவுக் காலமான அந்த ஐந்து மாதங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பாஞ்சாலங்குறிச்சியின் பக்கத்தில் அவர் பிறந்த ஊரான சுவர்னகிரி, பசுவந்தனை, பட்டணமருதூர் முதலான ஊர்களில் தேசப்பற்றும் (தேசம் என்பது அந்தக்காலத்தில் பாஞ்சாலங்குறிச்சிதான்), போர் ஆர்வமும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி படையாக்கிப் போர்ப் பயிற்சி கொடுத்தார். இப்படியாகச் சிறுபடையைத் தயார்செய்து கொண்டிருந்த சுந்தரலிங்கம், பாளையங்கோட்டை சிறையை உடைத்து ஊமைத்துரை மற்றும் குழுவினரையும் மீட்கத் திட்டமிடத் தொடங்கினார். சிறையிலிருக்கும்

ஊமைத்துரைக்கும் சுந்தரலிங்கம் முதலான புரட்சிக்காரருக்கும் பாலமாக இருந்து பெரும்பணி செய்தவர். பொட்டிப் பகடை. ஊமைத்துரைக்கு உணவு கொண்டு போய் கொடுக்கும் பணியில் இருந்த பொட்டிப் பகடை, ஊமையன் குழுவினர் சொல்வதைப் புரட்சிக்காரர்க்கும், இவர்கள் திட்டத்தை ஊமையனுக்கும் சொல்லி வந்து, சிறை உடைப்புக்கு உருவம் கொடுத்தார். வெளியில் இருந்த புலிக்குட்டி நாயக்கரும் உதவி செய்ய முன்வந்தார். (ஊமையன் என்ற சொல், அன்போடு பயில்கிறது, வரலாற்றில்)

சிறை உடைப்பு 1801-ஜனவரி இரண்டாம் தேதி என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்நாள் சுமார் 200 புரட்சியாளர்கள், நெல்லை-பாளையங்கோட்டை சாலையில் காணப்பட்டார்கள். அவர்கள் திருச்செந்தூர், முருகனுக்குக் காவடி எடுப்பதுபோல, காவடிகளைத் தம் தோளில் வைத்துக்கொண்டு சிந்துப் பாடல்கள் பாடியபடி வந்தார்கள். இடுப்பில் மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு, மந்திரங்கள் ஓதியபடி பக்தர்களுக்குத் திருநீறு அளித்துக்கொண்டு நடந்தார்கள். முன்னரே அங்கிருந்த வீரர்களுடன் சங்கேதச் சொற்களில் உரையாடியபடியும் பாளை சிறைச்சாலைக்கு முன்பாக நடந்து இடத்தைக் கவனித்தார்கள். அதில் பெரிய காவடி எடுத்தவராகச் சுந்தரலிங்கம் இருந்தார்.

இதேநாள், சிறைச்சாலையில் இருந்த ஊமையன் குழுவினர், ஒரு நாடகம் நடத்தத் தொடங்கினார்கள். சிறையில் பெரியம்மை வந்த ஒரு கைதி இறந்ததை முன்னிட்டு, ஊமையன் குழுவினரின் கை விலங்குகள் விலக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. அதோடு, போரில் இறந்த உற்றார் உறவினர்களுக்குத் திதி கொடுக்க விரும்புவதாகவும், அதற்கான வாழை இலை, தேங்காய், சூடம் பொங்கலுக்கான அரிசி, வெல்லம், விறகு போன்றவை வாங்க அனுமதி வேண்டும் என்று சிறையதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். விஷயம் தெய்வ நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால், தனக்குத் தெய்வக் குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அதிகாரி அனுமதி கொடுத்தார்.

அதே நேரம் காவடி எடுத்துக்கொண்டு வந்த சுந்தரலிங்கம் குழுவினர், விறகுகள், வாழை, பழங்கள், அரிசி, பருப்பு விற்கும் வியாபாரிகளாக உருமாறினார்கள். திருச்-செந்தூருக்குக் காவடி எடுத்து வரும் பக்தர்கள், ஆங்காங்கே தங்கிப் பொங்கிச் சாப்பிடுவது யாதார்த்தம் ஆனதாலும், இம்மாதிரி வியாபாரிகள் அங்கு திரிவது இயல்பானது என்பதாலும், சிறை அதிகாரி, ‘இந்த’ வியாபாரிகளை விகற்பமாக நினைக்கவில்லை. அதோடு, சிறை அதிகாரி, அந்த வியாபாரிகளைச் சிறைக்குள் அனுமதித்தார். சிறைக்குள் புகுந்த வியாபாரிகள் ஊமையனின் சைகையைப் பெற்றவுடன், அந்தச் சமயத்தில் சிறைக்குள் இருந்த இருட்டைப் பயன்படுத்திக்கொண்டு, விறகுச் சுமைக்குள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்தார்கள். சிறைக்குள் அடுத்து ஏற்பட்ட சண்டையில் சிறைக்கதவு உடைக்கப்பட்டு, ஊமையன் குழுவினர் வெளியேறினர்.

புரட்சியாளர்கள், ஜனவரி 2-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம், அன்று கும்பனி அதிகாரி மெக்காலே வீட்டில் மாலை நடந்த விருந்துக்கு, இருபது அதிகாரிகளும், அவர்களது பாதுகாப்புக்கு நிறைய சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தார்கள். சிறை பாதுகாப்பு பலவீனப்பட்டிருந்தது.

ஊமையன் குழுவும், சுந்தரலிங்கம் வீரர்களும் நேராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு (சுமார் 30 கல் தொலைவில் இருக்கிறது) வந்து சேர்ந்தார்கள். ஆங்கிலேயரால் இடித்துப் பாழ்பட்ட கோட்டையை மீண்டும் கட்ட வேண்டியதே முதல் பணியாக அவர்களுக்கு இருந்தது. ஆறு நாளில், கோட்டை உருவாயிற்று. சுமார் 500 அடி உயரமும் நீளமும், 200 அடி அகலமும் கொண்ட கோட்டை. கோட்டைச் சுவரின் உயரம் 12 அடிகள்.

ஊமையனின் சிறையுடைப்பு கும்பனிக்கு மாபெரும் பின்னடைவு என்பதை அவர்கள் உணரவே செய்தார்கள். கயத்தாற்றை நோக்கி கும்பனிப் படைகள் புறப்பட்டன. குலைய நல்லூரிலும் மற்றும் பல ஊர்களிலும் ஊமையனின் கெரில்லா முறைத் தாக்குதலில் பெரும் நஷ்டங்களைச் சந்தித்தது கும்பனி படை. இந்தக் கட்டத்திலும் ஊமைத் துரை, ஒரு கூட்டணிக்கு முயற்சி செய்தார். பாளையக்காரர்கள் பலருக்கும் தனக்கு உதவுமாறும், உதவவில்லை என்றாலும், கும்பனிக்கு உதவ வேண்டாம் என்றும் சுதந்திரத்தின் பெயரால் ஓலை அனுப்பினார். தஞ்சை, புதுக்கோட்டை, எட்டையபுரம், ஊத்துமலைப் பாளையங்கள் ஊமையன் கோரிக்கையை நிராகரித்தன. தொடக்கத்தில் ஊமையன் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றார். என்றாலும் கும்பனிப் படை பலம், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதபலம், தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருக்கும் துரோக பலம் ஆகியவற்றின் உதவியால் கும்பனி, வெற்றியை ஈட்டத் தொடங்கியது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை 24.5.1801-ல் வீழ்ந்தது. ஊமைத் துரையும் சுந்தரலிங்கமும் தப்பித்து வெளியேறினார்கள். பகடைகளும், தேவேந்திரர்களும், நாயக்கர்களும் இரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டிய கோட்டை சிதைந்தது.

போரிட்டுக் கொண்டே சென்றதில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டைக்கு வெளியே சிதறிக் கிடந்தனர். கோட்டையில் இருந்து மூன்று கல் தொலைவில் இருந்த சுவர்னகிரிக்கு அருகில் ஊமையனும், சுந்தரலிங்கம், வேறு பலரும் வெட்டுக் காயங்களுடன் மண்ணில் கிடந்தனர். வீழ்ந்துக்கிடந்த வீரர்களின் மத்தியில் சுந்தரலிங்கத்தைக் கண்டுபிடித்தார், சுந்தரலிங்கத்தின் தாயாரான முத்தம்மாள். சுந்தரலிங்கம், தன் தாயிடம் ‘என்னை விடு, பக்கத்திலே கிடக்கும் சாமியைக் (குமாரசாமியாகிய ஊமைத்துரை) காப்பாற்றும்மா’ என்று சொல்லி இருக்கிறார். முத்தம்மாள் இருவரையுமே, தன் வீட்டுக்கு எடுத்து வந்து, காயங்களுக்கு மருந்திட்டுக் காப்பாற்றி இருக்கிறார்.

உடல் நிலை தேறியதும், ஊமைத்துரையும் சுந்தரலிங்கமும், மருது சகோதரர்களின் உதவியைப் பெற சிறுவயலுக்குச் சென்றார்கள். ஊமையனுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக, கும்பனி சிவகங்கை மேல் படையெடுத்தது. மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத்துரை, சுந்தரலிங்கம் ஆகியோர் அணிதிரண்டு போரிட்டார்கள். நான்கு மாதங்கள் தொடர்ந்த இந்தப் போரின் இறுதி, மிக்க சோகத்தில் முடிந்தது. மருது சகோதரர்கள் தூக்குக் கயிற்றில் தங்கள் சுதேச மானத்தை எழுதினார்கள். விருப்பாட்சியில் ஊமையனும், சுந்தரலிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் வைத்து, 16.11.1801 அன்று ஒரே நாளில் ஒரே இடத்தில் தூக்கிலிடப்பட்டார்கள்.

இப்படியாக ஆதிச் சுதந்திரப் போராட்டம், பாஞ்சாலங்குறிச்சியைப் பொறுத்தவரையில் ஒரு முடிவுக்கு வந்தது. மாபெரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தமிழ் நிலத்துப் போர், தமிழர்கள் பெருமைப்படும் விதத்திலேயே நடந்து முடிந்தது.

வரலாற்றின் பக்கங்களை, வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, யாரும் அறிவதும் இல்லை. உணர்வதும் இல்லை. பல காலங்களுக்குப் பிறகு, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் ஓர் ஆய்வாளர், வரலாற்று நிகழ்ச்சிகளை, வரலாற்றை உருவாக்கிய மாமனிதர்களின் பங்கை, தன் அறிவையும் தன் சார்பையும் கொண்டு அளவிடுகிறார். போராட்டமே வரலாற்றை உருவாக்குகிறது என்கிற ஞானம் கைவரப்பெற்ற ஆய்வாளர், தன் வரலாற்றைப் போராளிகளைச் சார்ந்து உருவாக்குகிறார். கான்கிரீட் தரையிலும் மீன் பிடிக்க ஆசைப்படும் ஆய்வாளர், நிறுவனங்கள் தமக்குச் சாதகமாக உருவாக்கி இருக்கும் கருத்துகளோடு உடன்பட்டுப் பொய்யை விரிக்கிறார்.

பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பற்றிய கதைப் பாடல்கள், அவர்கள் அனைவரும் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது 1850க்குப் பிறகே உருவாக்கப்படுகின்றன. 1847-ம் ஆண்டு, கும்பனி அரசு அடிமை முறையை ஒழித்த பிறகே, இந்தக் கலை இலக்கியங்கள் வெளிப்படத் தொடங்கின. நாட்டுப் புலவர்கள், தங்களுக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சிகளின் புரிதல் அடிப்படையில் மட்டுமே அல்லாது, அவர்கள் காலத்து ஊரின் பாடப்படும் இடத்தின் சாதி மேலாண்மைக்கு இசையத் தம் பாடல்களைப் பாடி இருக்கிறார்கள்.

பாஞ்சாலங்குறிச்சி போர் இலக்கியத்தில் நிறைய புனைவுகள் புகுந்துள்ளன. இப்புனைவுகளில் இருந்து, உண்மையைத் தேடும் சில ஆய்வாளர்கள் அண்மைக் காலத்தில் உருவாகி இருக்கிறார்கள். மேற்சாதித் தலைவர்களோடு, சமகாலத்தில் சம அளவில் பங்குகொள்ளும் வீரர்கள், அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால், வரலாற்றில் இருந்தே அழிக்கப்பட்ட இழி நிலையை மாற்றும் ஆய்வாளர்கள், கடந்த சில ஆண்டுகளில்தான் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சுந்தரலிங்கத்தை வெளிக் கொணர்ந்த தமிழவேள்.

பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முக்கியமானவர்-களாக, கட்டபொம்மன், ஊமைத் துரை, சிவத்தையா, தானாபதிப்பிள்ளை, சுந்தரலிங்கம், தாலாடி கருப்பணர், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை ஆகியோரே முக்கியமானவர்கள் என்கிறார் தமிழவேள். தேவேந்திரன், பகடை, பறையர்கள் என்று எழுதவே ஆதிக்க சாதிப் பேனாக்கள் மறுக்கும் சூழ்நிலையே வரலாறு முழுதும் இருந்துள்ள காலகட்டத்தில் இவர்களின் தியாகம் மறைக்கப்பட்ட காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றில் வெள்ளையத் தேவன், வெள்ளையம்மாள் இருவரும் புனைப் பாத்திரங்கள் என்கிறார் தமிழவேள்.

பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முதல் களப்பலியே துணைத் தளபதி கந்தன் பகடை. வரலாற்று ‘மேற்குல’ ஆசிரியர்களுக்கு அதை எழுதவே கை கூசுகிறது. ஆனால், மக்கள் தங்கள் வீரர்களை மறப்பதில்லை.

கட்டக் கருப்பன் சுந்தரலிங்கம்

மட்டிலா பேரும் கொடுத்தானடா

ஆயிரம் கம்பளம் நூறு பரிவாரமவதற்கு

நீயொரு வீரனடா-என்று வானமாமலை தொடுத்த கட்டபொம்மன் கதைப்பாடல் கூறுகிறது.

சரித்திரம் தொடர்கிறது..







' பொம்மக்காவும் திம்மக்காவும்'

கேரளத்தில் நெடுமங்காடு அருகே உள்ள ஆரியநாடு செழிப்புடைய நாடு. அந்த நாட்டில் பிராமணச் சாதியைச் சார்ந்த ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் கடைசியாகப் பிறந்தவன் முத்துப்பட்டன். அவன் நல்ல உடல் வலிமை உடையவன். போர்க்கலைகளைப் படித்தவன். வாள் யுத்தத்தில் வல்லவன்.
ஒருமுறை முத்துப்பட்டனுக்கும் அவனது சகோதரர்களுக்கம் இடையே மாறுபாடு வந்தது. அதனால் முத்துப்பட்டன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டே புறப்பட்டுவிட்டான். காடு மலைகள் எல்லாம் அலைந்தான். கொட்டாரக்கரை என்ற ஊருக்கு வந்தான். கொட்டாரக்கரையில் அப்போது அரசனாயிருந்தவன் பெயர் ராமராசன். அந்த அரசன் முத்துப்பட்டனைத் தன் பாதுகாப்பு படைவீரனாக வைத்துக்கொண்டான். பல சிறப்புகள் அவனுக்குச் செய்தான்.
முத்துப்பட்டன் அண்ணன்மார்கள் தம்பியைத் தேடி ஒவ்வொரு ஊராக வந்தார்கள். கொட்டாரக்கரைக்கும் வந்தனர். அங்கு பவிசோடு இருந்த தம்பியைக் கண்டனர். ‘ ‘தம்பி! எங்கள் தவறுகளை மன்னித்துவிடு. சேஷையர் மகளை உனக்குப் பேசி முடித்திருக்கிறோம். நீ சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டாயே, எங்களுடன் வீட்டுக்கு வா ‘ ‘ என்றனர். முத்துப்பட்டனோ ‘ ‘நான் இப்போது ராமராசனின் சேவகன். அவரிடம் உத்தரவு கேளுங்கள். வருகிறேன் ‘ ‘ என்றான். அண்ணன்மார்கள் ராமராசரிடம் தம்பியை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டனர். ராமராசனும் மகிழ்ந்து அனுமதியும் கொடுத்தார். முத்துப்பட்டனுக்கும் பரிசுகளும் கொடுத்தனர்.
முத்துப்பட்டன் அண்ணன்மார்களுடன் ஆரியங்காவு காட்டு வழியே தன் ஊருக்குச் சென்றான். வழியில் அரசடித்துறை என்ற இடத்தில் தங்கினார்கள். முத்துப்பட்டன் ‘ ‘நான் இங்கு கொஞ்ச நேரம் இருந்து வருகிறேன், நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள் ‘ ‘ என்றான். அண்ணன்மார்கள் அவனது பொருளுக்கு ஆசைப்பட்டு அவனை அங்கேயே விட்டுவிட்டு சுமையுடன் நடந்தார்கள்.
முத்துப்பட்டன் அந்தப் பாறையில் கண் அயர்ந்த நேரம் மெல்லிய குரலில் யாரோ பாடுவதைக் கேட்டான். திரும்பிப் பார்த்தான். இரண்டு பெண்கள் ஒரு நாயுடன் வருவதைக் கண்டான். அழகான பெண்களின் அருகே சென்றான்.
அப்பெண்களிடம் ‘ ‘இனிய குரல் வளமும் அழகிய அழகும் பொருந்திய பெண்களே! உங்கள் அழகு என்னை மயக்குகிறது. என் தாபத்தைத் தீருங்கள் ‘ ‘ என்றான்.
அந்தப் பெண்களோ ‘ ‘என்ன அநியாயம் இது. நாங்கள் சக்கிலியப் பெண்கள். நீரோ பிராமணச் சாதியினர். இதை நீர் கேட்கவே கூடாது ‘ ‘ என்றனர்.
முத்துப்பட்டன் அவர்களிடம் ‘ ‘நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது. உங்களுக்காக நான் எல்லா உறவுகளையும் விட்டிவிட்டு இங்கேயே தங்கத் தயாராக இருக்கிறேன் . என்னை அணைத்துக்கொள்ளுங்கள் ‘ ‘ என்றான். அவர்கள் அஞ்சி ஓடினர். முத்துப்பட்டன் அவர்களைத் துரத்தினான். அவர்கள் காட்டுமரங்களுக்குள் நுழைந்து ஓடினர். பட்டன் விடவில்லை. அப்பெண்களோ குறுக்கு வழியே போய் தந்தையை அடைந்தனர். காட்டில் ஓடமுடியாத பட்டன் நின்றுவிட்டான்
தந்தையிடம் ‘ ‘தந்தையே எங்களை ஒரு பட்டன் துரத்தி வருகிறான் ‘ ‘ என்றனர். தந்தையான பகடை ‘ ‘இப்போதே அப்பாதகனைக் கொன்று வருகிறேன் ‘ ‘ என்று கூறி வல்லயத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
பகடை காட்டுவழியே வரும்போது பட்டன் காட்டுச் செடிகளுக்கிடையே கிடந்தான். பகடை அழகொளிரக் கிடக்கும் பட்டனைப் பார்த்து ‘ ‘ஐயோ இத்தனை அழகான இளைஞன் யாரோ ? இவன் தந்தை யாரோ என எண்ணினான். சிறிய கல்லை அவன் மேல் விட்டெறிந்தான். பட்டன் விழித்தான். சக்கிலியனைப் பார்த்தான். ‘ ‘ நீர் யார் ? ‘ ‘ எனக் கேட்டான்.
சக்கிலியன் ‘ ‘என் பேர் பகடை. என் புதல்விகள் பொம்மக்காவும் திம்மக்காவும் இந்தக் காட்டுவழியே வரும்போது ஒரு பட்டன் அவர்களை மோசம் செய்ய வந்திருக்கிறான். அவனைக் கண்டதுண்டமாக வெட்டி காட்டு நரிகளுக்குப் போட வந்தேன் ‘ ‘ என்றான்.
அதைக் கேட்ட பட்டன் புலம்ப ஆரம்பித்தான். ‘ ‘ ஐயோ மாமனாரே, உன் மக்களுக்காக ஆசைப்பட்டது நான்தான். உன் பெண்களுக்காக உடன் பிறந்தவர்களை வெறுத்து நிற்கிறேன். நாலுபேர் அறிய உன் பெண்களை மணம் செய்துகொள்ளுகிறேன் ‘ ‘ என்றான்.
பகடையோ ‘ ‘ஐயோ நான் சக்கிலியன். நாய் சாதி. என்னை நீங்கள் தீண்டமுடியுமா ? நாங்கள் செத்த மாட்டைத் தின்பாம். சேரியில் வாழ்வோம். தோலை அழுகு வைப்போம். மாடு அறுப்போம். சாராயம் குடிப்போம். இது வேண்டாம் அந்தணரே ‘ ‘ என்றான்.
பட்டனோ ‘ ‘மாமனே சொல்வதைக் கேள், புண்ணியம் உண்டு. உன் மக்களை எனக்கு மணம் செய்து வை. உன் ஜாதியில் நான் இணைந்துவிடுகிறேன் ‘ ‘ என்றான்.
பகடை ‘ ‘எங்களைப்போல் நீயும் தோல் செருப்பு அணிந்து பூ நூல் அறுத்து குடுமி இல்லாமல் இருந்தால் என் மக்களை உனக்குத் தருகிறேன். நீ உன் தமயன்மார்களிடம் இதைச் சொல்லி வரவேண்டும் ‘ ‘ என்றான்.
முத்துப்பட்டன் சக்கிலியன் பேச்சுக்குச் சம்மதித்தான். தன் அண்ணன்மார்களைத் தேடிச் சென்றான். அவர்கள் விக்கிரமசிங்கபுரம் அக்கிரகாரத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்றான். தான் ஒரு சக்கிலியனின் புதல்விகளை மணம் செய்யப் போவதைச் சொல்லி அனுமதி கேட்டான். அண்ணன்மார்கள் ‘ ‘உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா ? ‘ ‘ என்று கேட்டு பொங்கி எழுந்தனர். பலவாறாக நயந்தும் பயந்தும் சொல்லிப்பேர்த்தனர். பட்டன் கேட்கவில்லை. பட்டனைப் பெரிய அறையில் அடைத்து வைத்தனர்.
முத்துப்பட்டனோ நில அறைக்கல்லைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்தான். விக்கிரமபுரச் சந்தையில் தோல் செருப்பு தைத்துக்கொண்டான். பூநூலை அறுத்தான். குடுமியைக் களைந்தான். பகடையின் வீட்டிற்கு வந்தான்.
பகடை வேறுவழியில்லாமல் திருமணத்திற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான். தன் ஜாதிச் சனங்களை வரவழைத்தான். பெரிய பந்தலிட்டான். வாழைக்குலை நாட்டினான். பெரிய மணவறை செய்தான். பட்டனுக்குத் தன் மகளைக் கொடுத்தான். திருமணம் இனிதே நடந்தது. பொம்மக்காளும் திம்மக்காளும் சாதி முறைப்படி பட்டனுக்கு சாப்பாடு கொண்டு வைத்தனர். தன் பங்கு மாடுகன்றுகளுடன் முத்துப்பட்டன் சக்கிலிய குடியில் வாழவந்தான்.
திருமணம் முடிந்ததும் சக்கிலியப் பெண்கள் கும்மி அடித்தனர். அவர்களுடன் சேர்ந்து முத்துப்பட்டனும் கும்மியை ரசித்தான். கும்மி முடிந்ததும் பட்டன் பொம்மக்கா மடியில் தலையையும் திம்மக்கா மடியில் காலையும் வைத்து உறஙகினான். உறஙகும்போது தன் கையில் கட்டிய காப்பு நூலைக் கரையான் அரிக்கவும், உடம்பு கெட்டுப்படவும், கோழிக்கூட்டிலிருந்து வரவும் கனவு கண்டான்.
அந்த வேளையில் ஒரு தொப்பி ஆள் வந்தான். ‘ ‘அண்ணே முத்துப்பட்டா உங்கள் கிடை மாடுகளை வன்னியர் கொண்டு போகிறார்கள் ‘ ‘ என்றான். பட்டன் சினத்தோடு எழுந்தான். ‘ என் மாடுகளைத் திருடிய ‘வன்னியரையும் உப்பளங்கோட்டை மறவர்களையும் இப்பொழுதே அழிக்கிறேன் ‘ ‘ எனக் கூறிப் புறப்பட்டான்.
முத்துப்பட்டனை அவன் மனைவிகள் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று சொல்லி தடுத்தனர். பட்டனோ அவர்களை வகை வைக்கவில்லை. மனைவிகள் வளர்த்த பூச்சி நாயை துணைக்கு அழைத்துக்கொண்டு வன்னியர்களை எதிர்க்கச் சென்றான். அவர்களுடன் போரிட்டு எல்லோரையும் வெட்டி வீழ்த்தி மாடுகளை மீட்டான். பின்னர் உடம்பில் பட்ட குருதியை ஒரு சுனையில் கழுவச் சென்றான்.
அப்போது ஏற்கனவே ஏற்பாடுசெய்திருந்தபடி சப்பாணி ஒருவன் பின்னாலிருந்து பட்டனைக் குத்திக் கொன்றுவிட்டான். பட்டன் இறந்ததைப் பார்த்து பூச்சி நாய் சக்கிலியனின் வீட்டிற்கு ஓடி பொம்மக்கா திம்மக்காவை பிடித்து இழுத்தது. பொம்மக்காவும் திம்மக்காவும் பட்டனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்து சாதமும் கறியும் எடுத்துக்கொண்டு நாயின் பின்னால் சென்றனர்.
பட்டன் இறந்துகிடந்த இடத்திற்கு அவர்கள் வந்தனர். இறந்த கணவனைப் பார்த்ததும் அலறிப் புலம்பி சட்டியை எறிந்துவிட்டு அவன் மேலே விழுந்து அழுதனர். பட்டனை எடுத்தத் தோள் மேல் போட்டுக்கொண்டு சிங்கம்பட்டி அரண்மனைக்குச் சென்றனர். அரசனிடம் தங்கள் வரலாற்றைக் கூறி தாங்கள் பட்டனுடன் தீயிலே இறக்க அனுமதி கேட்டனர். பழிபாவம் ஏற்படும் என்று மன்னன் மறுத்துப் பார்த்தான். பெண்கள் ஒரேயடியாய் கெஞ்சினர்.
அவர்கள் கற்பின் உறுதியைக் கண்ட மன்னன் பெரும் தீ வளர்க்க உதவினான். அத்தீயில் இருவரும் பாய்ந்து உயிரை விட்டனர். அவர்கல் கதையை கேட்ட ஊரார் அவர்கள் தெய்வங்களாகி விட்டதை அறிந்தனர். மன்னன் அவர்களுக்கு கோயில் எடுப்பித்து பலியும் பூசனையும் செய்வித்தான். அவர்கள் தெய்வங்களாகி அருள் புரிந்தனர்.

இக்கோவில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலைப்பகுதியில் காரையாறு என்னுமிடத்தில் சொரிமுத்து அய்யனார் கொவிலுக்கு அருகில் உள்ளது. 



அருள்மிகு சொரி முத்தய்யனார் திருக்கோயில் காரையார்

மூலவர் : சொரிமுத்து அய்யனார்
மூலாதாரம் : ஸ்ரீஅய்யப்பன்
தேவியர் : பொம்மக்கா திம்மக்கா
அம்மன் : பேச்சியம்மன்
காவல்தெய்வம்: பூதத்தார்
முக்கியத்துவம் : வாலைபகடை
தீர்த்தம் : தாமிரபரணி
ஊர் : பாபநாசம்.
புராணபெயர் : காரையார்
மாவட்டம் : நெல்லை.


பிரார்த்தனை


இத்தலத்துக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் சொரிமுத்தையனாரை தங்கள் குலதெய்வமாக வணங்குகின்றனர்.குழந்தை பாக்கியம் வேண்டுவோர், திருமண பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். பில்லி சூன்யம், செய்வினை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் அத்தகைய துன்பங்கள் நீங்குகிறது.கோர்ட் வழக்குகள், தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் வருகை தந்து வழிபடுகின்றனர். மேலும் இத்தலம் அமைந் துள்ள இடம் இயற்கை எழில் சூழ்ந்துள்ள இடமாக இருப்பதால் உடற்பிணிகள் நீங்குவதாகவும் சொல்கின்றனர்.


இத்தலத்தின் மற்றொரு முக்கியமான பிரார்த்தனை சிறப்பம்சம் என்னவெனில் சபரிமலைக்கு செல்வோர் இத்தலத்தில் வந்து மாலைபோடுகின்றனர். இந்த மாலை போடுவதற்காக மட்டும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருப்பது முக்கிய சிறப்பு


நேர்த்தி கடன்


வாலைப் பகடை சுவாமிக்கு செருப்பு காணிக்கையாக செலுத்தவது மிகவும் வித்தியாசமாக உள்ளது.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளை பக்தர்கள் செய்கின்றனர்.தங்கள் நேர்த்திகடனாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.




கோயிலின் சிறப்பம்சம்


இத்தலம் எந்தஅளவு சிறப்புமிக்கது என்பதை கீழ்கண்ட நிலைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.


ஷேத்திரங்களின் ஆதார நிலை


நிலை : சிவன் : முருகன் : சாஸ்தா :


மூலாதாரம் திருவாரூர் திருப்பரங்குன்றம் சொரிமுத்தையனார்


சுவாதிபுஷ்டானம் திருவானைக்கா திருச்செந்தூர் அச்சங்கோயில்


மணிபூரகம் திருவண்ணாமலை பழநி ஆரியங்காவு


விசுத்தி காளத்தி குன்றுதோருடல் பந்தளம்


ஆஞ்சை காசி பழமுதிர்சோலை சபரிமலை


பிரமந்திரம் கைலாசம் கதிர்காமம் காந்தமலை


தல பெருமைகள் : 


*அய்யப்பனின் முதல் மூலாதாரக் கோயில்.


*ஜாதி வேறுபாட்டை நீக்க அய்யப்பன் 2 தாழ்த்தப்பட்ட பெண்களை முத்துபட்டன் என்ற மனித அவதாரமெடுத்து திருமணம் செய்து கொண்ட தலம்.


*பசு வளர்ப்பவர்கள் தங்கள் பசு அதிக பால் சுரக்காமல் இருந்தால் வழிபட்டால் பால் சுரப்பு அதிகரிக்கும்.


*பூதத்தாருக்கு மணி காணிக்கை தருவது வழக்கம்.


*அய்யப்பனின் முதல் கோயில் என்பதால் சபரி மலைக்கு மாலை போட விஷேசம்.


*பொதிகை மலையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான கோயில்


தல வரலாறு :


முத்துப்பட்டர் என்ற பிராமணர் வட திசையில் வாழ்ந்து வந்த போது அவரது சகோதரர்கள் ராமாயணக் கதை பேசுகிறார்கள். அப்போது சகோதரர்கள் சீதைக்கு ராமர் என்ன உறவு எனக் கேட்க சித்தப்பன் என தவறாக முத்துப்பட்டர் சொல்லி விட முத்துபட்டரை சகோதரர்கள் அடித்து விடுகின்றனர்.அவர் தென்பொதிகை மலைக்கு வருகிறார்.அங்கு வாலைப்பகடை என்ற தாழ்த்தப்பட்டவர் வளர்த்து வரும் இரு பெண்களை சந்தித்து மனம் பறி கொடுக்கிறார். அவர்கள் இருவரையும் திருமணம் செய்ய ஜாதி ஒரு தடையாக இருப்பது கண்டு தானே தாழ்த்தப்பட்டவனாக மாறி திருமணம் செய்து கொள்கிறார்.முதலிரவன்று பசு திருடு போக அதை திருடியவர்களை தேடிப்போன இடத்தில் ஏற்பட்ட சண்டையில் முத்துப்பட்டர் கொல்லப்படுகிறார்.அதையறிந்த இரு மனைவியரும் அவருடனேயே மரணத்தை தழுவுகின்றனர்.முத்துப்பட்டரே சாஸ்தாவாக வந்ததாகவும் பின்பு அவரே சொரிமுத்தையனாராக எழுந்தருளியுள்ளதாக வரலாறு.திருவாங்கூர் சமஸ்தானம் வெளியிட்டுள்ள அய்யப்பன் வரலாற்று கெசட்டிலும் அய்யப்பனின் முதல் கோயில் இதுவே என்று கூறுகிறது.


முக்கிய திருவிழாக்கள்


ஆடி அம்மாவாசை,தை அம்மாவாசை தினங்களில் 2லட்சம் பக்தர்கள் கூடுகின்றனர்.


தவிர ஒவ்வொரு அம்மாவாசைக்கும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.


ஆடி அம்மாவாசை தினங்களில் வெட்ட வெளியில் கூடாரங்கள் அமைத்து மக்கள் தங்கி வழிபடுவார்கள். ஒருமாதத்திற்கு முன்பே அரிசி, பருப்பு சாமான்களோடு மக்கள் வெள்ளமாக திரண்டு வந்து தங்கி சொரி முத்தய்யனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு.


பொது தகவல்கள்


முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருநெல்வேலி யிலிருந்து 60 கி.மீ.


தூத்துக்குடி யிலிருந்து 215 கி.மீ.


தங்கும் வசதி : அடிவாரத்தில்உள்ள விக்கிரம சிங்க புரத்தில் தனியார் விடுதிகள் உள்ளன.இருந்தாலும் குடும்பத்தோடு வரும் பக்தர்கள் அம்பையிலோ நெல்லையிலோ தங்கி கோயிலுக்கு சென்றுவரலாம்.


கட்டணம் ரூ.100 முதல் ரூ.150 வரை.


போக்குவரத்து வசதி : *நெல்லையிலிருந்து அடிக்கடி பாபநாசத்திற்கு நிறைய பஸ் வசதி உள்ளது.அங்கிருந்து காரையார் அணை செல்லும் பஸ்ஸில் செல்ல வேண்டும்.எனினும் வாடகை கார், வேன் மூலம் செல்லுதல் நலம்.


*அருகிலுள்ள ரயில் நிலையம் அம்பாசமுத்திரம்.
*அருகிலுள்ள விமான நிலையம் மதுரை.

                                                                                                                       ---  அருந்ததியன்