மனிதர்களாக பிறந்தவர்கள் எப்போதும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதற்கு மனித குலத்திற்குள் ஏற்ற தாழ்வுகளை கற்பித்துள்ளது மதம். ஆம் இங்கு உழைக்கிறவன் தாழ்ந்த சாதியாகவும், சுரண்டுகிறவன் உயர்ந்த சாதியாகவும் இருக்கிறான். இந்து வர்ணாசிரம சாதியக் கட்டமைப்பில் கடைசியில் தலித்துகளுக்குள் தலித்துகளாக இருப்பவர்கள் அருந்ததியர்கள். இவர்கள் கொங்கு மண்டலமான கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் எண்ணிக்கையில் அதிகமாகவும், பிற மாவட்டங்களில் பரந்து வாழ்கிறார்கள்.
கிராமப்புறங்களில் நிலமற்ற விவசாயக் கூலி தொழிலாளிகளாகவும் நகர்ப்புறங்களில் துப்புரவு தொழிலாளர்களாகவும், செருப்பு தைய்க்கும் தொழிலாளர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள். இப்போது தான் முதல் தலைமுறையாக இவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள்.
இவர்களுக்கென்று குல தெய்வங்களாக மதுரைவீரன், ஓண்டிவீரன், பட்டத்துளசி அம்மன் போன்ற தெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள். இவர்கள் மீதான தீண்டாமை, வன்கொடுமைகள் என்பது சொல்லிமாளாது. இன்றைக்கு இந்திய அரசு சந்திராயன் விண்கலம் அனுப்புகிறது அந்த அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால் அருந்ததியர்கள் ஆண் நாய் வளர்க்க தடை. ஏனென்றால், அருந்ததியர்களின் ஆண் நாய் உயர்சாதி இந்துக்களின் பெண்நாயுடன் உறவு கொண்டு குட்டிப் போட்டுவிடும் என்பதால், இது தூத்துக்குடி மாவட்டம் வேலாயுதபுரத்தில் நடந்தது. தீண்டாமையின் வடிவங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமங்களை எடுத்து வருகிறது.
அதில் ஈரோடு மாவட்டம், நம்பியூரில் அருந்ததியர் மாரியப்பனுக்கு திருமண மண்டபம் தரமறுப்பு, உடுமலைப்பேட்டை சாளரப்பட்டியில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்த அருந்ததியர் தோழர்களுக்கு அடி, உதை, 40 வீடுகள் சூறையாடல், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஆடுமேய்த்த அருந்ததியர் கருப்பனை கட்டிவைத்து அடித்துக் கொலை, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அருந்ததியர் பள்ளி மாணவி புனிதா பாலியல் பலாத்காரம் செய்து கொலை இப்படி தீண்டாமையையும், வன்கொடுமைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவர்களுடைய உரிமைகளையும், நலன்களையும் மேம்படுத்த வேண்டிய அரசு பல்வேறு சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டுவந்தன. அது எல்லாம் பனிக்கட்டி கதை போன்றதாக உள்ளது.
இவர்களை வன்கொடுமையிலிருந்து பாதுகாக்க 1989\ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் 1995\ஆம் ஆண்டுதான் நடைமுறைப்படுத்தப்பட்டது
இந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமலேயே இந்தச் சட்டத்தை எடுக்க வேண்டும் என்பது ஆதிக்க வர்க்கத்தின் கோரிக்கை ஆகும். இந்தியாவில் மிகக் கடுமையான பொடா சட்டத்தை கூட நடைமுறைப்படுத்துவார்கள். ஆனால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில், காவல்துறை தயக்கம் காட்டுகிறது. இவர்கள் மேல் அக்கறை இருக்கின்ற அருந்ததியர் இயக்கங்களும், இடதுசாரி அமைப்புகளும் குரல் கொடுக்கும் போதுதான் அங்கொன்றும், இங்கொன்றும் இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்கிறார்கள். ஆனால், தண்டனை என்பது நீதித்துறைக்குத்தான் வெளிச்சம்.
மேற்கண்ட மூன்றாண்டுகள் வன்கொடுமை வழக்குகள் என்பது அருந்ததியர்களின் குரல் வலுவடைந்து வருகிறது என்பதற்கு அடையாளம் ஆகும். ஆனால், எத்தனையோ வன்கொடுமைகள் ஊர் பஞ்சாயத்துகளின் மூலமாகவும், காவல்துறையின் மூலமாகவும் வழக்கு பதிவு செய்யாமலேயே கட்டப் பஞ்சாயத்து செய்யப்படுகிறது. எனவே, இம்மக்களின் உரிமை போராட்டங்கள் தொடரும் போது, இவர்களுடைய சமத்துவத்திற்கான வெளிச்சம் உருவாகும்.