வேலூரில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் எம்எல்ஏ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவை இந்திய குடியரசு கட்சி ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும். தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தேசிய அளவில் கருத்து ஒற்றுமை ஏற்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஆகவே சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் எந்த அளவுக்கு ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பயனை அளித்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
ஆகவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் தலித் மக்களுக்கு தனியாக பட்ஜெட் போடும் மரபை உருவாக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கான நிதிஒதுக்கீடு செலவழிக்கப்படுவது குறித்து அறிய முடியும்.