தலித் மக்களுக்கு நிலஉரிமை கிடைக்க எத்தகைய செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்?
பட்டியல் சாதி மக்களை நில உடைமையாளர்களாக மாற்ற வேண்டியது அவசியம். இது, பட்டியல் சாதி மக்களுக்கு பெரும் விடுதலையையும் சுதந்திரத்தையும் பெற உதவும். தற்போது, பட்டியல் சாதி மக்கள் பெரும்பாலும் நிலமற்ற விவசாயக் கூலி மக்களாக இருக்கிறார்கள். இது, பழங்காலத்தில் நிலவுடைமை தடை செய்யப்பட்டு அடிமைகளாக அவர்கள் வாழ வைக்கப்பட்டதன் விளைவாகும். சிறப்பு உட்கூறு திட்டத்திற்கான நிதி நிலையின் மூலம் பின் வருவனவற்றை செய்யலாம் : வட்ட மற்றும் மாவட்ட அளவில் செயற்படைகளை உருவாக்கி, மதிப்பீடு செய்யப்பட்ட வீண் நிலங்கள் போன்ற அரசு நிலங்களை அடையாளப்படுத்த வேண்டும்; அந்த நிலங்களில் பயிரிடும் பட்டியல் சாதி மக்கள் மற்றும் மற்றவர்களுக்கு நிலப் பட்டாக்களை வழங்குவது, அந்த நிலங்களை ஆக்கிரமித்து இருக்கும் தகுதியற்றவர்களை அப்புறப்படுத்தி, அந்த நிலங்களுக்கான பட்டாக்களை பட்டியல் சாதி மக்களுக்கு வழங்கலாம்.
உப்பு மற்றும் கார நிலங்களை கையகப்படுத்தி அவற்றை பயிர் செய்யக் கூடிய நிலங்களாக மாற்றி, அவற்றை நிலமில்லாத பட்டியல் சாதி மக்களுக்கு விநியோகம் செய்து, இதன் மூலம் நிலமில்லாத ஒவ்வொரு பட்டியல் சாதிக் குடும்பத்திற்கும் நிலம் கிடைக்கும்படி வகை செய்ய வேண்டும்.
அரசு நிலங்கள் இந்த நோக்கத்திற்கு போதுமானதாக இல்லையென்றால், அதிக நிலம் வைத்திருக்கும் தனியாரிடம் இருந்தும் விவசாயம் செய்யாத நில உரிமையாளர்கள் மற்றும் பினாமி நிலவுடைமையாளர்களிடம் இருந்தும் நிலங்களை கையகப்படுத்துவது அல்லது வாங்குவது சாத்தியமானதாக இருக்கும். இதைத் தவிர, நீர்ப்பாசனம் தேவைப்படும் பட்டியல் சாதி மக்களின் அனைத்து நிலங்களுக்கும் ஆழ் குழாய்க் கிணறு மற்றும் குழாய்க் கிணறு மூலம் நீர்ப்பாசனம் செய்து தருவது இன்றியமையாததாகும். இது, பட்டியல் சாதி மக்களை பொருளாதார சுய நிர்ணயம் உள்ளவர்களாகவும், சுதந்திரம் பெற்றவர்களாகவும் இருப்பதற்கு வகை செய்யும். இவை எல்லாம் சிறப்பு உட்கூறு திட்டத்தின் புதிய முறை மூலம் வரக் கூடிய நிதி நிலையினால் சாத்தியமாகும்.
பட்டியல் சாதி மக்கள் அனைவருக்கும் எல்லா நிலையிலும் இலவச கல்வி மற்றும் அனைத்து நிலைகளிலும் இலவச மருத்துவ வசதி செய்து தருவதன் மூலம் குறிப்பாக, இவற்றை பட்டியல் சாதி பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் கிடைக்கச் செய்வதன் மூலம், துன்பத்தினால் பட்டியல் சாதி மக்கள் நிலங்களை விற்பது நிறுத்தப்படும் அல்லது குறைக்கப்படும். இதோடு, பட்டியல் சாதி மக்களுக்கு உரிமையான நிலங்களை பட்டியல் சாதி அல்லாதவர் வாங்குவதையும், உரிமை கொண்டாடுவதையும், ஆக்கிரமிப்பதையும் முற்றி லுமாக தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்துவது இன்றியமையாத தேவையாகும். இதைப் போன்ற சட்டங்கள் பல மாநிலங்களில் இருந்தாலும் அவை சரியாக செயல்படுத்தப்படுவது இல்லை. மேலும், சிறப்பு உட்கூறு திட்டத்தின் இந்தப் புதிய முறையில் கிடைக்கும் நிதி நிலையை பயன்படுத்தி, பட்டியல் சாதியினருக்கான நில வங்கி ஒன்றை உருவாக்கி, இந்த நில வங்கி மூலம் தங்கள் நிலத்தை விற்பதைத் தவிர வேறு வழியில்லாத தலித் மக்களிடம் இருந்து நிலங்களை வாங்கி, பிற தலித் மக்களுக்கு அந்த நிலங்கள் கிடைக்கும்படி செய்தல் வேண்டும்.
பெரும்பான்மையான பழங்குடி மக்கள் தங்கள் பழங்குடி நிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள், ஆகவே அவர்களுக்கு நிலத் தன்னுரிமையும் வளர்ச்சித் தன்னுரிமையும் உரித்தாகும். பழங்குடி மக்களின் நிலத் தன்னுரிமையை உறுதி செய்யும் பல்வேறு சட்டங்கள் பல மாநிலங்களில் இருந்தும் அவை முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. ஆனால், பழங்குடி மக்களைப் போல பட்டியல் சாதி மக்கள் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் வாழ்வதில்லை. அவர்கள் நாடு முழுவதும் வாழ்கிறார்கள். ஆனால், மக்கள் தொகையில் சிறுபான்மையினராகவும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் வர்க்கத்தில் பெரும்பான்மையினராகவும் தலித் மக்கள் உள்ளனர்.
ஆகவே, பட்டியல் சாதியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பட்டியல் சாதியினருக்கான வளர்ச்சி ஆணைய சட்டமானது, பட்டியல் சாதி மக்களின் முன்னேற்றத்திற்கு ஒரு சட்ட அடிப்படையை உருவாக்கி, பட்டியல் சாதி மக்களின் முன்னேற்றத்தை ஒரு சட்டப்படியான உரிமையாக்கி, தலித் மக்களுக்கு முன்னேற்ற சுயாட்சியை வழங்குகிறது. பட்டியல் சாதி மக்களிடையே செய்திகளையும் விழிப்புணர்வையும் பரப்பி இந்த உரிமையை வென்றெடுப்பதில் தலித் பத்திரிகையாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.
தலித் மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களைப் பற்றி சொல்லுங்கள்.
சிறப்பு உட்கூறு திட்டத்தின் இந்தப் புதிய முறை மூலம் கிடைக்கும் நிதி நிலையைக் கொண்டு, ஒவ்வொரு பகுதி மற்றும் குழுமங்களாக இருக்கும் கிராமங்களில் பட்டியல் சாதி சிறார்களுக்காக பன்னிரண்டாம் வகுப்பு வரை உயர் தர தங்கும் வசதி கொண்ட பள்ளிகளை உருவாக்க வேண்டும். இந்த பள்ளிகளில் எழுபத்தைந்து விழுக்காடு வரை பட்டியல் சாதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும். மீதி இருபத்தைந்து விழுக்காடு பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கப்படலாம். அனைத்து பட்டியல் சாதி சிறார்களுக்கும் கல்வி கிடைக்கும் வகையில் இத்தகைய உயர் தர தங்கும் வசதி கொண்ட பள்ளிகளை தேவையான எண்ணிக்கையில் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் பட்டியல் சாதியினரின் கல்வித் தரம் உயர்த்தப்படுவதோடு, உயர் கல்விக்கான உறுதியான அடிப்படையும் பட்டியல் சாதி மக்களிடையே உருவாக்கப்படும்.
இவ்வாறு தலித் மக்களுக்காக உயர் தர தங்கும் வசதி கொண்ட பள்ளிகளை ஏற்படுத்துவது, 1996 ஆம் ஆண்டு என்னால் தயாரிக்கப்பட்ட தலித் அறிக்கையின் அங்கமாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜி தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தலித் பிரச்சினைகளுக்கான அமைச்சர் குழுவும் பல்வேறு அமைச்சகங்களோடு கலந்தாலோசித்து விட்டு 2008 ஆம் ஆண்டு வழங்கிய பரிந்துரைகளிலும் இவ்வாறு பட்டியல் சாதி சிறார்களுக்காக தங்கும் வசதி கொண்ட பள்ளிகளை ஏற்படுத்துவது இடம் பெற்றது. தலித் பிரச்சினைகளுக்கான அமைச்சர் குழுவின் அறிக்கை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படாமல் கோப்புகளிலேயே இருக்கிறது. பன்னிரண்டாம் திட்டத்தின் முதல் துணைக்குழு இது குறித்து நிறைய பரிந்துரைகளைச் செய்துள்ளது. சிறப்பு உட்கூறு திட்டத்தின் புதிய முறை செயல்படுத்தப்பட்டால் இவை நடைமுறைப்படுத்தப்படும்.
தனியார் உயர் தொழில் கல்வி நிறுவனங்களில் தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு அவசியமாகிறது. இதற்காக 2005 ஆம் ஆண்டு அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதோடு 11 ஆம் வகுப்பு முதல் பட்டியல் சாதி சிறார்கட்கு சிறந்த கல்விப் பயிற்சியும் இடம் பெற வேண்டும். இதோடு பட்டியல் சாதி மக்களிடையே கல்வி வளர்வதற்கு எதிராக இருக்கும் பல்வேறு தடைகளை, கல்வி உதவித் தொகை பெறுவதற்கு குடும்ப வருமான நிதி உச்ச வரம்பு போன்றவை நீக்கப்பட வேண்டும்.
சிறப்பு உட்கூறு திட்டத்திற்கான இந்த புதிய முறையையும் அதற்கான சட்டத்தையும் திட்ட ஆணையம் ஆதரிக்கும் என்று நாம் எதிர்பார்த்தாலும் இதற்கு சில இடங்களில் இருந்து எதிர்ப்பும் எதிர் மறைச் செயல்பாடுகளும் வரலாம். இதனால்தான் மக்களை அணி திரட்டுவது முக்கியமாகிறது. அணி திரட்டுவது என்பது வன்முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், மக்களை அணி திரட்டுவது அமைதியானதாகவும் சக்தி வாய்ந்ததாகவும், உரிமைகள் இல்லாமல் சாதி சமூகப்பண்பாட்டு அமைப்பால் ஒடுக்கப்படும் பட்டியல் சாதி மக்களின் முன்னேற்றத்திற்கு உறுதி செய்யும் வகையில் பட்டியல் சாதி மக்களின் சிறப்பு உட்கூறு திட்டத்திற்கான இந்த புதிய முறையும் அதற்கான சட்டமும் வேண்டும் என்று ஒரே குரலில் தெளிவாகக் கூறக் கூடியதாக இருக்க வேண்டும்.
ஆகவே, பட்டியல் சாதி மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்திற்கான இந்த புதிய முறையினையும் அதற்கான சட்டத்தினையும் ஏற்படுத்தும் குறிக்கோளை பன்னிரெண்டாவது அய்ந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டிலேயே எய்திட மக்களை அணி திரட்ட வேண்டியது அவசியமாகிறது. இந்தப் புதிய சட்டத்தை நாடாளுமன்ற குளிர் காலத் தொடரில் நிறைவேற்றிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; இயலாவிட்டால் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின்போது இதை நாம் நிறைவேற்றிடச் செய்ய வேண்டும். இச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே பட்டியல் சாதி மக்கள் முன்னேற்றத்திற்காக இந்தச் சட்டம் மொழியும் செயல்அமைப்பை நாம் ஏற்படுத்திட வேண்டும்.
பட்டியல் சாதிகள், பழங்குடிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்து வதில் பல்வேறு தடைகள் உள்ளனவே?
சிறப்புக் கூறு சட்டத்தின் புதிய முறை தீண்டாமை ஒழிப்பிற்கும் வன்கொடுமை ஒழிப்பிற்கும் இயைபுடையதாக இருக்கும். யார் தலித் மக்கள் மீது தீண்டாமையைச் சுமத்துகிறார்களோ அவர்களிடமே தலித் மக்கள் விவசாயத் தொழிலாளர்களாகப் பணி செய்வதும் அடுத்த நாள் ஊதியத்திற்கு அவர்களை சார்ந்து இருப்பதும்தான் இன்று கிராமப்புறங்களில் வாழும் தலித் மக்கள் எழுதப்படாத சடங்கு ரீதியான தீண்டாமை கட்டளைகளை மீற முடியாமல் இருப்பதற்குக் காரணம். ஆகவே, சிறப்பு உட்கூறு திட்டம் மூலமாகவும், துணைக் குழு அறிக்கையில் விளக்கப்பட்டுள்ள வழிகள், மேற்கூறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் மூலமாகவும் தலித் மக்களை பொருளாதார சுதந்திரம் பெற்றவர்களாக செய்ய வேண்டியதன் முதல் படியாகும். இது, அடுத்த வேளை உணவுக்காக அஞ்ச வேண்டிய நிலையை ஒழித்து, தீண்டாமையை எதிர்க்கும் ஆற்றலை பட்டியல் சாதி மக்களுக்கு அளிக்கும். இது, வன்கொடுமைகள் நடப்பதையும் தடுக்கும்.
பட்டியல் சாதி மக்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவது, கல்வி ரீதியான சமத்துவத்தை அடைவது, அவர்கள் வாழும் நிலை மற்றும் வீடுகள் மனித வாழ்வுக்கு ஏற்றவாறு தரம் உயர்த்தப்படுவது ஆகியவை அவர்கள் மீது வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுவதைத் தடுக்க பெருமளவில் உதவும். இதோடு, கடுமையான சட்டங்களும் அவற்றை செயல்படுத்துவதும் அவசியமாகிறது. நம்மிடம் 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டமும், 1989 ஆண்டு இயற்றப்பட்ட பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்பு சட்டமும் உள்ளது. வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை கொண்டு வருவதில் எனது முயற்சிகள் பலன் அளித்தது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த இரு சட்டங்களும் பயன் உள்ளதாகவும் சில விளைவுகளை உண்டாக்கியதாகவும் உள்ளன.
ஆனால், அரசியல் அதிகாரத்திலும் நிர்வாக அதிகாரத்திலும் உள்ளவர்கள் இந்த சட்டங்களை செயல்படுத்துவதில் காட்டும் அலட்சியம் காரணமாகவும், இந்த சட்டங்களில் உள்ள சில குறைபாடுகள் காரணமாகவும், இந்த சட்டங்களால் சிறந்த விளைவுகளை ஏற்படுத்த முடியவில்லை. 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தையும் அதன் செயல்பாட்டையும் மேலும் பலம் பெறச் செய்யும் நோக்கில், அந்த சட்டம் இருபது ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் 2009 ஆம் ஆண்டில், இந்தியா முழுதும் பல மாநிலங்களில் இருந்து 70 தலித் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கூட்டணி, என்னை தலைமை அறிவுரையாளராகக் கொண்டு தேசிய அளவில் ஒரு கலந்தாய்வை நிகழ்த்தின.
நாங்கள் செய்த கலந்தாய்வின் அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்திற்கு விரிவான திருத்தங்களை தயாரித்தோம். இந்த திருத்தங்களில் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் 1989 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட போது நான் சேர்க்க விரும்பி அப்போது அச்சட்டத்தில் சேர்க்க முடியாமல் போன திருத்தங்களும், கடந்த இருபது ஆண்டுகளில் களப் பணியாளர்கள், செயற்பாட்டாளர்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையிலான திருத்தங்களும் அடங்கும். வன்கொடுமைத் தடுப்பு சட்டத்திற்கான இந்த திருத்தங்களையும், அவற்றோடு தொடர்புடைய இந்திய குற்றவியல் சட்டத்திற்கான திருத்தத்தையும், மக்கள் பிரநிதித்துவ சட்டத்திற்கான திருத்தத்தையும் ஒரு கடிதத்தோடு இந்திய அரசுக்கு 2009 ஆம் ஆண்டு அனுப்பினேன். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் செய்யப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களில் சில பின் வருவன:
வேகமாக வழக்கு நடைபெறும் நோக்கில், வன்கொடுமைத் தடுப்பு சட்ட வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்துவது, தலித் மக்களை சமூகப் புறக்கணிப்பு அல்லது பொருளாதாரப் புறக்கணிப்பு செய்வது போன்ற குற்றங்களை வன்கொடுமைகளாக சேர்ப்பது, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைத்தோர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், வன்கொடுமை நடந்ததை உறுதிப்படுத்தும் சாட்சிகள், போன்றோருக்கு சிறப்பான பாதுகாப்பை அளிப்பது போன்றவை பரிந்துரைக்கப்பட்ட இந்த திருத்தங்களில் அடங்கும். சிவில் உரிமைப் பாதுகாப்பு சட்டத்தில் செய்ய வேண்டிய முன்னேற்றங்கள் 1996 ஆம் ஆண்டு என்னால் உருவாக்கப்பட்ட தலித் அறிக்கையிலும், முதல் துணைக் குழுவின் அறிக்கையிலும் இடம் பெற்றன. இந்தச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றிடவும் அவற்றை சிறப்பாக செயல்படுத்தவும் தலித் மக்கள் சக்தி வாய்ந்த வகையிலும் அமைதியாகவும் அணி திரண்டு போராட வேண்டியது அவசியமாகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரப்படுத்துவது எப்படி?
இந்தியாவில் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள முன்னேறிய சாதிகளுக்கும், அண்மையில் அதிகாரமயமாக்கப்பட்டுள்ள சில பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் நான் சில அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கூற விரும்புகிறேன். பட்டியல் சாதியினர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் உரிமைகளுக்காக நான் அறுபது ஆண்டுகளாக செய்த பணிகள் மற்றும் பெற்ற அனுபவங்களின் அடிப்படியில் நான் இந்த அறிவுரையை வழங்குகிறேன்.
நான் 1990 ஆம் ஆண்டு மத்திய அரசின் நல்வாழ்வு அமைச்சகத்தின் செயலாளராக இருந்தபோது தயாரித்த "கேபினெட் குறிப்பின்' அடிப்படையில்தான் சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு மண்டல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 27 சதவிகித இட ஒதுக்கீடு அவர்களுக்கு வழங்கப்பட்டது. அரசுக்குள்ளேயும் வெளியேயும் கிளம்பிய பலத்த எதிர்ப்புக்கு இடையில் நான் இதைச் செய்தேன். பட்டியல் சாதி மக்கள் மற்றும் பழங்குடியினர் நலன்களின் அடிப்படையிலும், பிற்படுத்தப்பட்ட சாதியினர் நலனின் அடிப்படையிலும், கூடுதலாக பட்டியல் சாதிகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆகியோர் அல்லாத பிறர் நலனின் அடிப்படையிலும் என் அறிவுரை அமைந்துள்ளது.
இந்தியா முன்னேறினால்தான் முன்னேறிய சாதிகளும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் அண்மையில் அதிகாரமயமாகியுள்ள பிரிவினரும் முன்னேற முடியும். பட்டியல் சாதியினரும், பழங்குடி மக்களும், நலிந்த பிற்படுத்தப்பட்ட சாதியினரும் முற்பட்ட சாதிகளின் நிலை வரைக்கும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் அதிகாரமயமாகியுள்ளோர் நிலை வரைக்கும் முன்னேறினால்தான் இந்தியா முன்னேற முடியும்.
நலிந்த பிற்படுத்தப்பட்ட சாதியினரை பின் வருமாறு விளக்கலாம்: நிலமற்ற ஏழை விவசாயிகளாக உள்ள சாதியினர், மீனவர்கள், கைவினைஞர்களாக உள்ள சாதியினர், கல் உடைப்போர், முடி திருத்துவது மற்றும் துணி துவைப்பது போன்றவற்றைத் தொழிலாக செய்யும் சாதியினர் போன்றோர் நலிந்த பிற்படுத்தப்பட்டவராவர். இவ்வாறு ஒடுக்கப்பட்ட சாதியினர் முன்னேறினால்தான் இந்தியாவின் உள்ளாற்றல் உச்ச நிலைக்கு வளர்ச்சியடைய முடியும். இந்நிலைக்கு வளர்ச்சி அடைந்த பின் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதரும் விடுதலை பெறலாம். பிறகு சாதி தேவைப்படாத ஒன்றாகி, சாதி காய்ந்து மறைந்து விடும் என்று எதிர்பார்க்கலாம்.
ஒரு நவீன நாடும் சாதி அடிப்படையிலான சமூகமும் முரண்பாடானது. சாதி என்பது மனிதர்களின் மனதை குறுகச் செய்கிறது, ஆனால், ஒரு நவீன நாட்டிற்கு பரந்த மனதும் பெரிய இதயமும் தேவைப்படுகிறது. இந்த நாட்டில் சாதி அடிப்படையில் எழும்பியுள்ள தலைமைக்கும் இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கான நவீன தேவைகளுக்கும் இடையே முரண்பாடு உள்ளது. ஆகவே பட்டியல் சாதியினர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், குறிப்பாக மிக மிக பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆகியோரை அதிகாரம் உடையவர்களாக செய்வது, அவர்களுக்கு பயன் அளிப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இன்றியமையாத தேவையாகும்.