இந்தியச் சமூகத்தில் பன்னெடுங்காலமாகவே, பல்வேறு தரப்பினர்களால் திட்டமிட்டு, தொடர்ந்து சமூகரீதியான ஏற்றத்தாழ்வுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இது எவராலும் மறுக்கவியலாத உண்மை என்பதனால் தொன்றுதொட்டு ஒடுக்குதலுக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்படும் அனைத்து தரப்பினரும் சமூகத்தில் பங்கெடுப்பு செய்யும் வகையில், இந்திய அரசியலமைப்பு சாசனத்தால் உறுதி செய்யப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடே இட ஒதுக்கீடு முறையாகும். இட ஒதுக்கீடானது, ஆளும் அரசுகளின் சலுகை அல்ல. மாறாக அனைத்து தரப்பினர்களுமான சம பங்கீடு; எவராலும் மறுக்கமுடியாத வகையில் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும்.
இட ஒதுக்கீடானது, சமூகத்தில் சாதி, மதம், மொழி, பாலினம் என பல்வேறு தளங்களில் சட்டப்பூர்வமாக, படிப்படியாகாக கொண்டுவரப்பட்டு தற்போது நடமுறைபடுத்தப்பட்டும் வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் சமீபத்தில் கொண்டுவரப்பட்டதே முன்னுரிமை அடிப்படையிலான ‘உள் ஒதுக்கீடு’ எனும் திட்டமாகும்.
இந்தியாவில் சாதி ரீதியான பாகுபாடுகள் இன்றளவும் நிலவி வருகிறது. கணிப்பொறி யுகமென மார்தட்டி கொள்ளப்படும் தற்போதைய சூழலில், இதர தரப்பினர்களின் சிந்தனைகளில் மட்டுமின்றி, ஆளும் அரசுகளின் பார்வையிலும் பட்டியலின மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் நவீன வடிவமெடுத்துள்ளன. சான்றாக, பட்டியல் வகுப்பினர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களில், இன்றளவும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. அதிலும் குறிப்பாக பட்டியல் வகுப்பினர்களுல் இடம்பெற்றிருக்கும் சில குறிப்பிட்ட பிரிவினர்களின் பங்கெடுப்பானது மிகவும் சொர்பமாகவே உள்ளது கண்கூடு. அப்படிப்பட்ட பிரிவினர்களுக்காக குறிப்பாக, வேலை வாய்ப்பில் சிறப்பு உள் ஒதுக்கீடு செய்யும் திட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாமல் போய்விட்ட அப்படிப்பட்ட சமூகத்தினரால், சிறப்பு உள் ஒதுக்கீடு கோரிக்கையை உடனடியாக வென்றெடுக்க இயலாமல் போய்விட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் பட்டியல் வகுப்பினர்களுக்கென வறையறுக்கப்பட்டிருந்த 25 விழுக்காட்டில், கடந்த 1975ஆம் ஆண்டு, நாட்டில் முதல் முறையாக, உள் ஒதுக்கீடாக 12.5 விழுக்காடு அந்த மாநிலத்தைச் சேர்ந்த மாசாபி சீக்கியர் மற்றும் பால்மீகி வகுப்பினருக்கு சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு வரையிலும் இந்த நிலையே நீடித்து வந்தது.
இந்நிலையில், ஆந்திரபிரதேச மாநில அரசு, அம்மாநிலத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 57 பட்டியல் வகுப்பினருக்குள்ளிருக்கும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு, சிறப்பு உள்ஒதுக்கீடு வழங்கிடும் நோக்கில், கடந்த 1999ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஆந்திரபிரதேச உயநீதிமன்ற நீதிபதி இராமசந்திர ராஜூ என்பவரைக்கொண்டு ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. விரிவான ஆய்வுக்குப்பிறகு சிறப்பு உள்ஒதுக்கீடு முறைக்கு ஆதரவாக அவர் சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில், அம்மாநிலத்தில் ஒரு சட்ட முன்வரைவு கொண்டுவரப்பட்டது. அதன்படி, அம்மாநிலத்தில் பட்டியல் வகுப்பினருக்கென வறையறுக்கப்பட்டிருந்த 15 விழுக்காடு இட ஒதுக்கீடானது, பட்டியல் வகுப்பினர் அனைவரும், 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ‘அ’ பிரிவுக்கு 1 விழுக்காடு, ‘ஆ’ பிரிவுக்கு 7 விழுக்காடு, ‘இ’ பிரிவுக்கு 6 விழுக்காடு, ‘ஈ’ பிரிவுக்கு 1 விழுக்காடு இடஒதுக்கீடும் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அந்த சட்ட முன்வடிவை எதிர்த்து ஆந்திரபிரதேச உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உடனடியாக அந்த சட்ட முன்வடிவு ஆந்திரபிரதேச மாநில பட்டியல் வகுப்பினர் (இட ஒதுக்கீடு பகுத்தறிதல்) சட்டம்,2000 (A.P. Scheduled Castes (Rationalisation of Reservation) Act, 2000) என்றொரு சட்டமாக்கப்பட்டது.
‘பட்டியல் வகுப்பினருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டிற்குள் மாநில அரசால், சிறப்பு உள் இடஒதுக்கீடு ஏதும் செய்யமுடியாது. எனவே அந்த குறிப்பிட்ட சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பானது’ என அறிவிக்ககோரி ஆந்திரபிரதேச உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வாதத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்றத்தால் அந்த சட்டம் நீக்கறவு செய்யப்பட்டது. ஆந்திரபிரதேசம் மாநில அரசு, அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 2005ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம், ‘பட்டியல் வகுப்பினர் எனும் வறையறையை மாற்றியமைக்க குடியரசுத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே மாநில அரசு அதில் மாற்றம் ஏதும் செய்ய முடியாது என்று கூறி உயர் நீதிமன்றத்தால் அந்த சட்டம் நீக்கறவு செய்யப்பட்டது சரியே’ என்று கூறியது.
இந்த தீர்ப்பின் காரணமாக ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் அமலில் இருந்த சிறப்பு உள் ஒதுக்கீடும், 2005ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தது. ஆனால் உடனடியாக, பஞ்சாப் மாநில அரசு பட்டியல் வகுப்பினருக்குள் உள் இடஒதுக்கீடு என்பதற்குப் பதிலாக, பட்டியல் வகுப்பினருக்குள் சில குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் என்று பொருள் கொள்ளத்தக்க வகையில், ‘‘பஞ்சாப் மாநில பட்டியல் வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (பணியிடங்களில் இட ஒதுக்கீடு) சட்டம், 2006' என்ற சட்டத்தை இயற்றியது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் உள் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. அந்த சட்டத்தை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து, அந்த சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என பஞ்சாப் உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பிடப்பட்டது. பஞ்சாப் மாநில அரசு, அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை வழங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போதும் பஞ்சாப் மாநிலத்தில், பட்டியல் வகுப்பினருக்குள் சிறப்பு உள் ஒதுக்கீடு முறையானது அமலில் உள்ளது.
2005ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் சிறப்பு உள்ஒதுக்கீடு முறைக்கு எதிராக வழங்கிய தீர்ப்பினைத் தொடர்ந்து, ஆந்திரபிரதேசம் மாநில அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, டில்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி உஷா மெஹ்ரா என்பவரைக் கொண்டு ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்று மத்திய அரசால் அமைக்கபட்டு, சிறப்பு உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவரும் கடந்த 2008ஆம் ஆண்டில், சிறப்பு உள் ஒதுக்கீடு முறைக்கு ஆதரவாக தனது ஆய்வை மேற்கொண்டதோடு, இது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரையோடு, தனது அறிக்கையை பாராளுமன்ற சபநாயகரிடம் சமர்பித்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, ‘அரசு பணியிடங்களில் அருந்ததியின மக்களது கடந்தகால பங்கெடுப்பு குறித்தும், அருந்ததியினருக்கு சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்குதல்’ குறித்தும் ஆய்வு மேற்கொள்ள, 2008ஆம் ஆண்டு, தற்போதைய மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான எம்.எஸ். ஜனார்தனம் என்பவரைக்கொண்டு, ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கபட்டது. அந்த ஆணையம் சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் வறையறுக்கப்பட்ட 76 பட்டியல் வகுப்பினரில், அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, மாதிகா, பகடை, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரா ஆகிய ஏழு பிரிவினரும் “அருந்ததியர்” என்று வகைபடுத்தப்பட்டு, அவர்களது மக்கள் தொகைக்கேற்ப, பட்டியல் வகுப்பினருக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீடில், 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு முன்னுரிமை அடிப்படையில், (“தமிழ்நாடு அருந்ததியர்கள்”(பட்டியல் வகுப்பினர் இட ஒதுக்கீட்டிற்குள் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும், அரசு பணிகளிலும், நியமனங்களிலும் சிறப்பு ஒதுக்கீடு) சட்டம்,2009 (“The Tamilnadu Arunthathiyars” (Special Reservation of seats in Educational Institutions including private Educational Institutions and of Appointments or Posts in the Services under the state within the Reservationfor the Scheduled Castes) Act,2009) என்ற சட்டம் இயற்றப்பட்டது.
இட ஒதுக்கீடு முறைக்கு முற்றிலும் எதிரானவர்களால், இப்படிப்பட்டதொரு சட்டத்தை, ‘அரசியல் அமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது’ என அறிவிக்கக்கோரி, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூகத்தில் இன்றளவும் கடைக்கோடியில் உள்ள ஒரு பிரிவினருக்கான வாழ்வில் சிறு முன்னேற்றத்துக்கான படிக்கட்டாக, நீண்ட, நெடிய போராட்டங்களுக்குப் பிறகு இயற்றப்பட்டுள்ள இந்த சட்டமானது, சில தனி நபர்களால் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வழக்கில், சமூகத்தின் பல்வேறு தரப்பினர்களும், தங்களை மனுதாரர்களாக இணைத்துக்கொண்டு, இந்த சட்டத்திற்கு ஆதரவாக தங்களது கருத்துகளைப் பதிவு செய்து, இந்த சட்டம் நீடிக்க வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.
அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, பட்டியல் வகுப்பினருக்கான பட்டியலில் புதிதாக சேர்க்கவோ அல்லது ஏற்கனவே இருந்ததை நீக்கவோதான் மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. ஆனால் இந்த சட்டத்தில் அவ்விதம் மாறுதல் ஏதும் செய்யப்படவில்லை. மேலும், முன்னுரிமை என்பது வேறு, இட ஒதுக்கீடு என்பது வேறு என ஏற்கனவே பல்வேறு தீர்ப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த சட்டத்தை உயர் நீதிமன்றத்தால் தடை செய்ய முடியாது என்பதே சட்ட ரீதியான முடிவாக இருக்க முடியும்.
இருப்பினும், வெறும் இட ஒதுக்கீடு மட்டுமே எந்தவொரு சமூகத்தையும் மாற்றிவிடாது. இட ஒதுக்கீடு அமலில் இருந்து, அதற்கான அடிப்படை தகுதி வாய்ந்த போட்டியாளர்கள் அந்த சமூகத்தில் இல்லாது போனால் அங்கே இட ஒதுக்கீட்டினால் பயனேதுமில்லை என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியதைப்போல, ஒரு குறிப்பிட்ட சட்டத்தால் மட்டுமே, ஒரு சமூகத்தின் அனைத்து வாழ்வியல் தேவைகளையும் பூர்த்தி செய்து விடமுடியாது. மாநில, மத்திய அரசுகள், அருந்ததியினர்களைப் போல விளிம்பு நிலையில் வாழும் மக்களையும், இதர பிரிவினரைப் போல, சமூகத்தின் அனைத்து தளங்களிலும் சம பங்கெடுப்பு செய்யும் வகையில், போதிய, அத்தியாவசிய, சிறப்பு வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலமாகவே இந்த சட்டம் இயற்றப்பட்டதன் உண்மையான நோக்கத்தை அடைய முடியும்.