தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமை கோரியப் பேரணியில் கர்தினால், ஆயர்கள்

ஜூலை 29,2011. இந்தியாவின் அரசியல் அமைப்பில் “பிற்படுத்தப்பட்ட இனத்தவர்க்கு” வழங்கப்படும் சலுகைகள் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கும் வழங்கப்படுமாறு இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் வலியுறுத்தினார்.
தலித் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் சம உரிமை கோரி இவ்வியாழனன்று புதுடெல்லியில் நடத்தப்பட்ட மாபெரும் பேரணியில் கலந்து கொண்ட மும்பை கர்தினால் கிரேசியஸ், பிறமதத் தலித்துக்கள் பெறும் சலுகைகள், தலித் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அளிக்கப்படாமல் இருப்பது தெளிவான பாகுபாட்டைக் காண்பிக்கின்றது என்றார்.
இது, எல்லாருக்கும் சமத்துவத்துக்கு உறுதி அளிக்கும் இந்தியாவின் அரசியல் அமைப்பை மீறுவதாகவும் இருக்கின்றது என்றார் மும்பை கர்தினால்.
இத்திங்கள் முதல் மூன்று நாட்களுக்குத் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நான்காவது நாள் பேரணியும் இடம் பெற்றன. இதில் ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் உட்பட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையும் இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகள் அவையும் நடத்தின.