வாழைப்பாடியில் உள்ள 'இந்திரா நகர்' பகுதியைச் சேர்ந்த பொது மக்களின் புகார் அடிப்படையில் இக்கட்டுரையை எழுத முற்பட்டிருக்கிறோம்.
"கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்திரா நகரிலுள்ள புறம்போக்கு இடத்தில் சில தனிநபர்களால் 6 இறைச்சிக்கடைகள் அரசு அனுமதி இன்றி நடத்தப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 3 மாடுகள் தினமும் இறைச்சிக்காக வெட்டப்படுவதாகவும், மொத்தமாக 6 இறைச்சிக் கடைகளிலும் 18 மாடுகள் தினமும் வெட்டப்பட்டு அதன் கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் அப்பகுதியிலேயே கொட்டப்பட்டு நாளடைவில் துர்நாற்றம் அப்பகுதி முழுவதும் இருப்பதாகவும் மக்களால் அப்பகுதியில் வசிக்க முடியாத அளவுக்கு மோசமான சுற்றுப்புழச்சூழல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
வெயில் காலங்களைவிட மழைக்காலங்களில் இன்னும் மோசமான சூழலை சந்திப்பதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். மிருக கழிவுகளும் அதில் உற்பத்தியான புழுக்களும், இரத்தமும் மழைத்தண்ணீரால் அடித்துவரப்பட்டு வீடுகளுக்கு முன்பாக தேங்கிவிடுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இப்படி சுற்றுப்புற சுகாதார பாதிப்பால் அடிக்கடி அப்பகுதி மக்கள் நோய்களுக்கு ஆளாவதும் தொடர்ந்து நீடிக்க அப்பகுதியில் வசித்த ஒரு பெண் மரணத்திற்கு பின் தங்கள் சுகாதார பிரச்சனைக்கு முடிகட்டும் நோக்கத்தோடு 6 இறைச்சிக் கடைகளுக்கும் சென்று கறி கடைகளை மாற்று இடத்தில் வைக்கும்படி கோரிக்கை வைத்து கறிகடைக்காரர்கள் மறுத்ததால் அப்பகுதி மக்கள் வாழைப்பாடி ; காவல் நிலையத்தில் 18.01.2011 இல் புகார் செய்திருக்கின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் காவல் நிலையத்தில் எடுக்கப்படாததால் பொது மக்கள் காவல் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்யவே சில பத்திரிக்கைகளிலும் செய்தி வெளிவர இறைச்சி கடை உரிமையாளர்களிடம் கடைகளை அப்புறப்படுத்தும்படி கூறி இருக்கின்றனர்.
ஒரு மாத காலத்திற்குள் வேறு இடம் செல்வதாகவும் தற்போதுள்ள கழிவுகளை சுத்தப்படுத்தி வைக்கிறோம் என்றும் காவல் நிலையத்தில் இறைச்சி கடை உரிமையாளர்கள் 6 பேரும் கையெழுத்திட்டு கொடுத்திருக்கின்றனர். கால அவகாச கெடு 22.01.2011 என்றும் அதில் காணப்படுகின்றன. ஆனால் ஜூலை மாதம் வந்தும் அப்பகுதியில் இறைச்சிக் கடைகள் அப்புறப்படுத்தப்படாமல் இருக்கின்றன.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் சொல்கிறார்:
"எங்கெங்கோ போய் பேசி பார்த்துவிட்டோம். இதுவரை யாரும் உதவி செய்வதாக இல்லை. இப்பகுதி எம்.எல்.ஏவிடம் மனு கொடுத்தோம். கலெக்டரிடம் மனு கொடுத்தோம். சுற்றுசூழல் வாரியத்திடம் மனு கொடுத்தோம். போலிசிடம் மனு கொடுத்தோம். போராட்டம் வரை போய்விட்டோம். ஜனவரியில் நாங்கள் நடத்திய போராட்டத்தில் பத்திரிகை செய்தி வந்த பின் ஓரளவு நடவடிக்கை எடுக்க முயற்சித்தார்கள். கடைக்காரர்கள் 1மாத அவகாசம் கேட்டார்கள். நாங்களும் பொறுத்திருந்தோம். அவர்கள் அப்புறப்படுத்துவதாய் இல்லை. இப்போது ஏதாவது கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார்கள். போலிசுக்கு போய் புகார் கொடுத்தபின் எங்கள் உயிருக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலைமைக்கு ஆளாகிவிட்டோம். ஆயிரம் பேர் வசிக்கும் பகுதிங்க இது. பிள்ளை குட்டிங்க அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போய்விடுகிறார்கள். இதையெல்லாம் எப்படிங்க பொறுத்திட்டிருக்க முடியும்?
ஆயிரம் பேர் வசிக்கும் நகர் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் இறைச்சி கடைகள் அக்கிரமித்து கொண்டதும் இல்லாமல் மருத்துவர் சான்றிதழ் இல்லாமல் மாடுகள் வெட்டுவதும் கழிவுகளை அங்கேயே போடுவதும் அதில் புழுக்கள் கொசுக்கள் துர்நாற்றம் என அப்பகுதியே பிணவாடையில் மூச்சை விட்டுவிட வேண்டும் என்பதான் அரசு ஊழியர்களின் அலட்சியமா என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
நேரில் பார்த்த நமது நண்பர் ஒருவர், "ரொம்ப கொடுமைங்க. அந்த துர்நாற்றத்தில் 5 நிமிடம் கூட நம்மால் நிற்க முடியவில்லை. அங்கு வசிக்கும் மக்களின் நிலைமையை என்னவென்று சொல்வது என மனிதாபிமானத்துடன் தகவல்களை தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல நாம் முயல்வோம். முடிந்தால் நீங்களும் உதவுங்கள்!