இன்று தோழர்கள் வலங்கை இடங்கை சாதி பிரச்சனைகளை ஏற்படுத்தி தமிழர்களை பிரித்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கல்வெட்டுகள் சிலவற்றிலும் சரபோஜி மன்னர்கள், நாயக்கமன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் நடந்த வலங்கை இடங்கை சாதி பிரச்சனைகளை தான்.
வலங்கை இடங்கை சாதி பிரச்சனை என்பது ஆரம்பித்தது சோழர் காலத்தின் 11ம் நூற்றாண்டின் இறுதியில் தான், அதன் பிறகு இருக்கும் கல்வெட்டுகளே இந்த வலங்கை இடங்கை பிரச்சனைகளை பற்றி குறிப்பிடுகின்றன. இந்த போராட்டம் 18ம் நூற்றாண்டு தாண்டியும் நடந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் இந்த சாதிபிரசனைகள் நடந்துள்ளன. மிகப்பெரிய அளவிளான பிரச்சனைகள் என்பவை 17 நூற்றாண்டில் தான் நடந்துள்ளது.
வலங்கை இடங்கை சாதிகள் என்பதற்கும் ஒரு கதை சொல்லுகிறார்கள். ஒரு முறை இருபிறிவினர்கிடையே பிரச்சனை வந்ததாம் அப்பொழுது அரசனிடம் முறையிட சென்றவர்கள் எதிர் எதிர் தரப்பினர், ஒரு தரப்பினர் வலப்புறம் நின்றார்களாம், மற்றவர்கள் இடப்புறம் நின்றார்களாம். அரசர் இவர்களை தனது வலப்பக்கம் இருந்தவர்களை வலங்கை சாதியினர் என்றும் இடப்பக்கம் நின்றவர்களை இடங்கை சாதியினர் என்றும் அழைத்தாராம் அதனால் இவ்ர்களின் சாதிகளுக்கு இந்த பெயராம்.
மேலும் சில வரலாற்றியலார்கள் நிர்வாகத்திற்காக இப்படி பிரிவுகளை வைத்திருந்தனர் சோழர்கள் அது சில காலம் கழித்து வரி கொடுப்பவர்களுக்கும் வரி கொடுக்காமல் இருப்பவர்களுக்கும், வரி வாங்குபவர்களுக்குமான பிரச்சனையாக உருவாகி பின் சாதி பிரச்சனையாக உருவானது என்கிறார்கள்.
வலங்கை சாதியினர் என்று அழைக்கப்பட்டவர்கள் யார் யார் என்று பார்த்தால் "வலங்கை இடங்கை சாதி வரலாறு" என்று எழுதப்பட்ட ஒரு ஒலைச்சுவடி இன்று சென்னை பல்கலைகழகத்தில் உள்ளது அதன் கூற்றின் படி. வலங்கை சாதியினர் எனப்படுபவர்கள் ஒரிடத்தில் இருந்து வேளாண்மை செய்த வேள்ளாளர், பறையர் போன்றவர்கள் என்றும், இடம் விட்டு இடம் பெயர்ந்து கைவிணை தொழில்கள், வணிகம் சார்ந்த தொழில்களை செய்த கம்மாளர்கள், கோமுட்டி, சக்கிலியர்கள் ஆகியோர் இடங்கை சாதியினர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
இதில் எங்கு இன்று இருக்கும் சாதீயம் வந்ததென்று தெரியவில்லை வெள்ளாளனும் பறையர்களும் ஒரே பிரிவில் இருந்திருக்கின்றனர். கோமுட்டியும் சக்கிலியனும் ஒரே பிரிவில் இருந்திருக்கின்றனர். இதில் எங்கு ஏற்ற தாழ்வு வந்தது, வெள்ளாளனும் பறையனும் இன்று இரு வேறு துருவங்களாக இருக்கின்றனர். ஆனால் அன்று அவர்கள் ஒன்றாகவே இருந்திருக்கின்றனர். அதிலும் வலங்கை சாதியினர் இடங்கை சாதியினர் தனி தனி தெருக்களில் வாழ்ந்திருக்கின்றனர் அடுத்தவர் பிரிவு சடங்குகளுக்கு செல்வதில்லை அவர்கள் பிரிவிற்கே சென்றனர் என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் வெள்ளாளர்கள் பறையன் வீட்டு திருமணத்திற்கு சென்று இருக்க வேண்டும். ஆசாரிகள் சக்கிலியன் வீட்டு காது குத்துக்கு சென்று இருக்க வேண்டும். இன்று நடந்து கொண்டிருக்கும் சாதி சண்டை இதற்க்கு முற்றிலும் மாறாகவே அல்லவா இருக்கிறது.
இதிலும் இராஜரான் தான் இந்த இடங்கை வலங்கை பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லுகிறார்கள், பிரச்சனை ஆரம்பித்ததாக இருக்கும் கால கட்டம் அதற்கான கல்வெட்டுகள் 11ம் நூற்றாண்டில் இறுதியில் 10 நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி புரிந்த ஒரு மன்னன் இதற்கு எவ்வாறு காரணம் ஆவான் என்றால். கல்வெட்டு ஆதரங்களில் குறிக்கப்படும் சில பெயர்கள் தான் அவை
வலங்கை பழம்படைகளிலார்
பெருதனத்து வலங்கை பெரும்படையினகள்
அழகிய சோழத் தெரிந்த வலங்கை வேளைகார படைகள்
ராஜராஜன் தெரிந்த வலங்கை வேளைக்காரர்
இவைகள் அனைத்தும் இராஜராஜனின் படைகள் ஆகும். இராஜராஜன் காலம் வரை யாரும் நிரந்தரமாக படைகளை வைத்து இராணுவமாக நடத்தியதாக செய்திகள் இல்லை. தேவைப்படும் பொழுது படைகளை திரட்டியதாகவே செய்திகள் அனைத்தும் தெரிவிக்கின்றன. இராஜராஜன் நிரந்தரமாக திரட்டிய படைகளுக்கு அவைகளின் வெற்றிகளுக்கு ஏற்ப மெய்கீர்த்திகளும் பட்டங்களும் வழங்கப்பட்டன. அப்படிபட்ட பட்டங்களே இந்த படைகளின் பெயரில் சேர்ந்தது. இதில் வலங்கை இடங்கை என அழைக்கபட்ட படைகளில் ஒரு குறிப்பிட்ட சாதியினரே இருந்திருக்க முடியும் என்பது நம்பதகுந்ததாக இல்லை.
மேலும் வேளைகாரர் என்பது படைவீரர்களை குறிக்கும் ஒரு சொல், இது வேளார்களை அல்லது வெள்ளாளர்களை குறிக்கும் சொல்லாக எடுத்துக்கொள்ளமுடியாது. இப்படி இருந்த படைப்பிரிவுகள் அவர்களுக்குள் இருந்த படைதலைவனால் பிரிந்து சண்டையிட்டிருக்கலாம். அதுவே பின்னர் வலங்கை இடங்கை சாதி சண்டையாக மாறி இருக்கலாம். இதனால் இப்படி சாதி பிரிவை வளர்த்தது இராஜராஜன் தான் என்று சொல்லும் கூற்று சரியாக இருக்காது. மேலும் இந்த வலங்கை இடங்கை சாதி சண்டைகள் 11ம் நூற்றாண்டின் இறுதியில் தான் ஆரம்பித்திருக்கின்றன அதாவது இராஜேந்திர சோழனின் காலத்திற்கு பிறகு. இதற்கும் காரணம் இராஜராஜன் தானா???
இவை எல்லாம் கிடக்கட்டும் விடுங்கள் அந்தகாலத்தில் சாதி சண்டை இருந்திருக்கிறது என்று. ஆனால் இன்று நாம் வாழும் நாளில் யாரும் யாரையும் சாதி கேட்டு பழகுவதில்லை, யாரும் சாதி கேட்டு கை கொடுப்பதில்லை. ஏன் இந்தியா முழுவதும் சாதிபெயரை பின்னால் சேர்த்துக்கொண்டு சர்மா குருமா என்று கூறும்பொழுது நாம் மட்டும் தான் சாதி அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு வாழ்கிறோம்.
பெரியார் போன்ற சான்றோர்களுக்கு இதற்காக நாம் நன்றி செலுத்த வேண்டும். இன்றைய தேவையான சாதி ஒழிய வேண்டுமென்றால் என்ன வேண்டும் என்பதை தான் பார்க்கவேண்டும் எவன் நம்மிடையே சாதியை கொண்டுவந்தான் என்று பார்ப்பது தேவை இல்லாதது. அதை விடுத்து ஆக்கபூர்வமான விசயங்களில் கலப்பு திருமணம் செய்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்கும் கொடுமைகளை அழித்தொழிக்க முயல்வதே இன்றைய காலகட்டத்தில் தேவையான அடுத்த நிலைப்பாடாகும்.
thanks to Kumarikantam