மத்தியில் காங்., ஆட்சியை அகற்றுவோம் நெல்லையில் தலித் கிறிஸ்தவர்கள் ஆவேசம்


திருநெல்வேலி : நெல்லையில் பட்டியல் இனத்தவராக அறிவிக்க வலியுறுத்தி தலித் கிறிஸ்தவர்கள் மவுன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலித் கிறிஸ்தவ மக்களின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கும் வகையில் 1950ம்ஆண்டு ஜனாதிபதி ஆணை கையெழுத்தான ஆகஸ்ட் 10ம்தேதியை கருப்புநாளாக தலித் கிறிஸ்தவ அமைப்புகள் ஆண்டுதோறும் கடைபிடிக்கின்றன. இதையொட்டி நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது, தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலித் கிறிஸ்தவர் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.


இதன் ஒருபகுதியாக பாளை. லூர்துநாதன் சிலை முன்பு இந்திய தலித் கிறிஸ்தவர் நல இயக்கம், தலித் கிறிஸ்தவர் வாழ்வுரிமைச்சங்கம் சார்பில் நேற்று மவுன ஊர்வலம் துவங்கியது. பாஸ்டர் ஜான்பீட்டர் துவக்கிவைத்தார். கருப்புநாள் அனுஷ்டிக்கும் வகையில் ஊர்வலக்குழுவினர் சவப்பெட்டியுடன் ஒப்பாரி வைத்தபடி வந்தனர். மார்க்கெட் திடலில் ஊர்வலம் நிறைவு பெற்றது. அங்கு உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. இந்திய தலித் கிறிஸ்தவர் நல இயக்கத்தலைவர் தனராஜ் தலைமை வகித்தார். பாளை. வட்ட பணியக ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். உதயம் கல்வி அறக்கட்டளை இயக்குனர் ஞானப்பிரகாசம், பணியக கமிஷன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் ராஜேந்திரன், மறைமாவட்ட பணியக இணைச்செயலாளர் மரிய சேவியர் அந்தோணி, தலித் கிறிஸ்தவர் நல இயக்க மாவட்டத்தலைவர் ஸ்டீபன், செயலாளர் ஜெயபாலன், விருதுநகர் மாவட்டத்தலைவர் முத்துக்கண்ணு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணன், மா.கம்யூ., மாவட்டச்செயலாளர் பழனி, பணிநிறைவு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்தரஞ்சன், எஸ்.சி.எஸ்.டி., ஊழியர் கூட்டமைப்பு செயலாளர் சுவாமிநாதன், அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் சிவக்குமார், அருள் சீனிவாசன், பங்குத்தந்தை பெலிக்ஸ், வக்கீல் ராஜாசிங் உட்பட பலர் பேசினர். ஆர்.சி., பிஷப் ஜூடு பால்ராஜ் நிறைவுரை ஆற்றினார். அமல்ராஜ் அடிகள் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தலித் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 
தீர்மானங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய காங்., அரசை 2014 பார்லிமென்ட் தேர்தலில் அகற்றுவது, வரும் அக்டோபர் 2ம்தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது, தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.