பிரச்னைக்குரிய நிலத்தில் திடீர் குடிசையால் பரபரப்பு
சேலம்: சேலம் அருகே, பிரச்னைக்குரிய நிலத்தில் அருந்ததியர் இனமக்கள் திடீரென குடிசை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அடுத்த செங்குட்டப்பட்டி கிராமத்தில் அருந்ததியர் காலனி உள்ளது. இங்கு, 52 அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு, அதே பகுதியில் அரசு புறம்போக்கில், 1.80 ஏக்கர் நிலம், 1990ல் அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டது. இதற்கு, தாரமங்கலத்தை சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்ட நிலம், தனது பாட்டன் வழி சொத்து என்றும், 40 ஆண்டாக தனது சுவாதினத்தில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால், அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, சர்வே செய்து கொடுக்காமல் வருவாய்துறையினர் காலம் கடத்தி வந்துள்ளனர். சுந்தரவடிவேலுவுக்கு ஆதரவாக, வருவாய்துறையினர் செயல்பட்டு வருவதாக கூறிய, அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த,52 குடும்பத்தினரும் அரசு ஒதுக்கிய இடத்தில் குடிசை போட்டனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க, போலீஸார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.