உண்மை அறியும் குழுவின் அதிர்ச்சித் தகவல்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி 13.06.2011 அன்று, இரவு பத்து மணியளவில் ஒரு கொலைவெறிக்கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டு, உயிருக்குப் போராடிய நிலையில் – திருநெல்வேலி மாவட்ட அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, ஊராட்சி மன்றத் தலைவரõகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அவருக்கு அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் தொடர்ந்து இருந்துள்ளன.
1. 13.06.2011 அன்று இரவு கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி, உயிர் தப்பி, தற்பொழுது மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் கிருஷ்ணவேணி – மிகவும் நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டுள்ளார். கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் தாழையூத்து பஞ்சாயத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, 700 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். கடந்த அய்ந்தாண்டுகளாக தாழையூத்து ஊராட்சியின் மேம்பாட்டுக்கு பல திட்டங்களை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டுள்ளார்.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மாவட்டத்திலேயே திறம்பட நிறைவேற்றிய முதன்மையான ஊராட்சி மன்றத்திற்கான "சரோஜினி நாயுடு விருதினை' 2009 ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் அவர்களிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிற சாதியைச் சேர்ந்த பொது மக்கள் பலரும் இவரைப் பாராட்டுகின்றனர். இவருடைய அசாத்தியமான துணிச்சலும், நேர்மையும் பலரும் வியக்கும் அளவில் திறம்பட நிர்வாகம் செய்யும் ஆற்றலும் பாராட்டத்தக்கதாக இருந்துள்ளது.
2. ஊராட்சி மன்றத் தலைவராக இவர் நேர்மையாகவும், கறாராகவும் செயல்பட்டது – வேறு சாதியைச் சேர்ந்த சில ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களது பதவியைக் கொண்டு மக்களிடமிருந்து லஞ்சம் வாங்கவோ, கூடுதலாக வேறு வழிகளில் சம்பாதிக்கவோ முடியாத சூழலில் – இவருடைய செயல்பாட்டுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். சாதியச் சமூகத்தின் கடைகோடியில் இருக்கும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் – இவ்வளவு சிறப்பாக நிர்வாகம் செய்கிறாரே என்ற பொறாமையும், சாதிய ஆதிக்க உணர்வும் இவர்களிடம் அவ்வப்போது வெளிப்பட்டு வந்துள்ளது.
3. இதனால் இவருக்கு கடந்த அய்ந்தாண்டுகளிலும் தொடர்ந்து எதிர்ப்புகளும், அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் இருந்து வந்துள்ளன. பரவலாக பலதரப்பட்ட மக்களின் ஆதரவிருந்தாலும், ஒரு சில செல்வாக்கு கொண்ட தனி நபர்கள்/ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இது, ஊராட்சி மன்றத் தலைவரின் பணிகளுக்கு அடிக்கடி தடைகளாக இருந்ததோடு, அவருக்கு எதிரான சாதிய ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. எனவே, கடந்த அய்ந்தாண்டுகளில் ஊராட்சி மன்றப் பணிகளை சரிவரச் செயல்பட விடாமல் இடையூறு செய்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் துணைத் தலைவர் மீது புகார் மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலர், திட்ட அலுவலர் (வளர்ச்சி முகமை), காவல் ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் போன்றோருக்கு கொடுத்துள்ளார்.
பல வேளைகளில் இந்தப் புகார் மனுக்கள், காவல் துறை அதிகாரிகளால் முறையாக விசாரிக்கப்படாமலும், "இந்தம்மா இப்படித்தான், எல்லாவற்றுக்கும் தீண்டாமை புகார் மனுக்களாகக் கொண்டு வந்து தொந்தரவு செய்வார்' என்பது போன்ற உணர்வுமே மேலோங்கி இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. ஒரு சில புகார் மனுக்களின் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கைகளாகப் பதியப் பெற்றாலும், பல புகார் மனுக்கள் எந்தவித நடவடிக்கையுமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன.
4. ஒரு தலித் பெண் அரசியல் அதிகாரம் பெற்று, ஊராட்சி மன்றத்தில் ஆட்சி செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாத சாதிய ஆதிக்க உணர்வு, பிற சாதி ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் மேலோங்கி நிற்பதைக் காண முடிகிறது. அடிப்படையில் கெட்டி தட்டிப்போன சாதியச் சமூகத்தின் ஆதிக்க உணர்வின் வெளிப்பாடுதான் பல வேளைகளில் உள்ளாட்சி மன்றத் தலைவராக கிருஷ்ணவேணியை பணி செய்ய விடாது தடுக்கும் சம்பவங்களாக நடந்துள்ளன.
கிராம சபைக் கூட்டங்களில் அவர் வைத்திருந்த அறிக்கை ஏட்டைப் பிடுங்குவது, (26.01.2011) அவரது கையைத் திருகி, அடிக்க எத்தனிப்பது, சுதந்திர நாள் விழாவில் அவரை கொடியேற்ற விடாமல் தடுத்தல் (15.08.2010), ஊராட்சி மன்ற அலுவலகத் தில் தலைவருக்குரிய நாற்காலியில் அமர விடாமல் தடுப்பது, காசோலையில் கையெழுத்துப் போடாமல் இடையூறு செய்வது (22.01.2009), மக்கள் நலப் பணிகளைச் செய்யவிடாமல் தடுப்பது (08.04.2008) போன்று இவருக்கு நேர்ந்துள்ள ஒரு சில கொடுமைகள் – ஆதிக்க சாதியினர் மத்தியில் புரையோடிக் கிடக்கும் சாதிய உணர்வின் வெளிப்பாடுதான்.
5. 13.06.2011 அன்று இரவு நடந்த கொலைவெறித் தாக்குதலுக்கு உடனடிக் காரணமாகச் சொல்லப்படுவது : ஊராட்சி மன்றத் தலைவருக்கும், மேலத் தாழையூத்தில் வசிக்கும் (ஊராட்சி மன்றப் பிரதிநிதி) சுப்பிரமணியன் (எ) சுப்பு என்பவருக்கும் இடையே ஓடைப் புறம்போக்கில் பொதுக்கழிப்பறை கட்டுவதில் முரண்பாடு எழுந்தது. தங்களது வீட்டிற்குப் பின்புறம் செல்லும் ஓடையை ஒட்டி இப்பொது கழிப்பறை கட்டப்படுவதை சுப்பு கடுமையாக ஆட்சேபித்துள்ளார். இந்த சுப்புவும், மற்றொரு உறுப்பினரான மீரான்கனியும் இதனை எதிர்த்தாலும், அப்பகுதியில் வசிக்கும் கோனார் சமூகத்தினரும், பிற சாதியைச் சேர்ந்தவர்களும் அப்பகுதி பெண்களும் கழிப்பறைக்கான தேவையை உணர்ந்து, பொதுக் கழிப்பறையைக் கட்ட அந்த இடத்தைத் தேர்வு செய்துள்ளனர். மக்களின் விருப்பப்படி இந்த இடத்தில் கட்ட வேண்டும் என்ற முடிவும் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் பேசி எடுக்கப்பட்டது.
தனது வீட்டிற்குப் பின்புறம் பொதுக் கழிப்பறையை கட்டுவது தனக்கு கவுரவக் குறைச்சல் என்று சுப்பு எண்ணி, தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததோடு, மாவட்ட நிர்வாகத்திற்கும் இதுகுறித்து தகவல் கொடுத்து, சம்பவ தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, பொதுக் கழிப்பறையை அங்கே கட்டுவதற்கான தடையையும் வாங்கியுள்ளார். ஓடைப் புறம்போக்கில் எந்தவித கட்டடங்களும் கட்டக்கூடாது என்ற காரணத்தைக் கூறி, மாவட்ட நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது. இதனை எதிர்த்துப் பலதரப்பட்ட மக்களையும் திரட்டி, கிருஷ்ணவேணி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சம்பவ தினத்தன்று காலையில் ஒரு மனுவும் கொடுத்துள்ளார்.
6. ஊராட்சி மன்றத் தலைவர் மீது கொடூரத் தாக்குதல் நடந்த சம்பவத்தை முதல் தகவல் அறிக்கையாகப் (குற்ற எண். 213/11) பதிவு செய்த தாழையூத்து காவல் துறை உதவி ஆய்வாளர் கே. பால்துரை, பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்த பின்பும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய பிரிவுகளைப் பதிவு செய்யாமல், 341, 294(பி), 323, 307 போன்ற இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் மற்றும் Sec.4 of Tamilnadu Prohibition of Harassment of Women Act 2002 இன் கீழ் மட்டுமே பதிவு செய்துள்ளார்.
சம்பவ தினத்திற்கு மறுநாள் ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாகவே 15.06.2011 அன்று, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு 3 (2) (5)இன் கீழ் முதல் தகவல் அறிக்கை மாற்றம் செய்யப்பட்டு, ஆய்வாளரால் நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது (341, 294(பி), 323, 324, 307 இதச மற்றும் பிரிவு 4 TNPHW Act 2002 r/2 3 (2) (5) SC/ST (PoA) Act.
7. இத்தாக்குதலை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக மட்டுமே பார்க்கும் பார்வை காவல் துறை அதிகாரிகளிடம் உள்ளது. பல்வேறு பரிமாணங்கள் உள்ளடங்கிய கொலைவெறித் தாக்குதல் என்ற முழுமையான பார்வை இல்லை. கிருஷ்ணவேணி மிகவும் நேர்மையாக, கையூட்டு வாங்காமல் கறாராக இருந்து செயல்பட்டதை குறைபட்டு, சற்று நெழிவு சுளிவுகளோடு செயல்பட்டிருந்தால் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்காது என்ற போக்கு, காவல் துறை அதிகாரிகளிடம் மேலோங்குவதைக் காண முடிகிறது.
8. இவ்வளவு கொடுமையான தாக்குதல் நடந்து, பல வெட்டுக் காயங்களோடு உயிருக்கு ஊசலாடி, ஒரு காதை இழந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணியை வட்டார வளர்ச்சி அலுவலரோ, மாவட்ட ஆட்சித் தலைவரோ அரசு மருத்துவமனைக்கு 18.06.2011 வரை நேரில் சென்று சந்திக்கவில்லை. அரசு எந்திரத்தின் (மாவட்ட நிர்வாகத்தின்) மனிதாபிமானமற்ற போக்கையே இது காட்டுகிறது.
9. தொடர்ந்து நேர்மையாக, திறம்பட செயல்பட்டதற்கு உரிய பாதுகாப்பு தனக்கும் தன் குடும்பத்திற்கும் கிடைக்கவில்லை என்ற அச்ச உணர்வு கிருஷ்ணவேணிக்கு எழுந்துள்ளது. இதேபோல நேர்மையாக, திறம்பட மக்களுக்காகச் செயல்படும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் ஏற்படும் இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலை/அச்ச உணர்வு அவர்களுக்குள் மேலோங்கி இருப்பது – அடித்தள ஜனநாயகத்திற்கும், மக்களின் முழுமையான பங்கேற்பிற்கும், நேர்மையான, திறமையான நிர்வாகத்திற்கும் விடப்பட்ட சவாலாகவே அமையும்.
பரிந்துரைகள் :
1. கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான கிருஷ்ணவேணிக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் போதிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உடனடியாக வழங்க வேண்டும். ஏற்கனவே அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் தொடர்ந்து இருந்து வந்துள்ள நிலையில், ஆயுதந்தாங்கிய பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
2. கொடூரமான கொலைவெறித் தாக்குதலுக்கு இலக்கான கிருஷ்ணவேணிக்கு வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையான ரூ. 50,000/–அய் இரு நாட்களுக்கு முன் அரசு வழங்கியுள்ளது. ஆனால், கொலை வெறித் தாக்குதலின் தன்மை, கொடூரம் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு கூடுதலாக 3 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை அவருக்கு வழங்கப்பட வேண்டும். தவிர, அவருடைய மருத்துவச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளிலும் சிறப்புக் கவனம் செலுத்தி, அவர் விரைவாக குணமடைய அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
3. ஏற்கனவே கிருஷ்ணவேணி கொடுத்த பல்வேறு புகார் மனுக்களின் மீது காவல் துறை சுதந்திரமான விசாரணையை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் முறையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.
4. கடந்து அய்ந்து ஆண்டுகளாக கிருஷ்ணவேணி கொடுத்த புகார் மனுக்கள் மீது முறையாக விசாரணை செய்யாத, தாழையூத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் கே. பால்துரை அங்கிருந்து உடனே மாற்றம் செய்யப்பட வேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. தமிழகத்தின் பிற பகுதிகளில் குறிப்பாக தென்மாவட்டங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்களாக/பிரதிநிதிகளாகப் பணியாற்றும் தலித் மற்றும் பெண் பிரதிநிதிகளுக்கு, தமிழக அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்கள் திறம்பட தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தடையாக உள்ள விஷயங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
6. தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்றங்களில் துணைத் தலைவர் பதவிகளும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும். அதேபோல, தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்றங்களில் துணைத் தலைவர் பதவிகளும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும். (பெருவாரியான இடங்களில் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரம், ஊராட்சிகளுக்கான திட்டங்களைத் தாமதமின்றி விரைவாகவும் செய்து முடிக்கவும் இத்தகைய ஏற்பாடு பெரிதும் உதவும்.)
தாழையூத்து ஊராட்சித் தலைவர் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணங்களை ஆராயவும், இதுபோன்ற வன்கொடுமைகளைத் தடுக்கவும் – திருநெல்வேலியில் உள்ள சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் குழு ஒன்று உண்மையைக் கண்டறியும் நோக்கில் கள ஆய்வினை, சூன் 18 – 19 ஆகிய நாட்களில் மேற்கொண்டது. இக்குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்கள் : 1. பேராசிரியர் தொ. பரமசிவன் 2. பேராசிரியர் ஜெ. அமலநாதன் 3. பேராசிரியர் பே. சாந்தி 4. திரு. லெனா குமார் – யாதுமாகி பதிப்பகம் 5. வழக்குரைஞர் ஜி. ரமேஷ் 6. திரு. சு. கணேசன் – மக்கள் கண்காணிப்பகம் 7. வழக்குரைஞர் ம. பிரிட்டோ – வான்முகில் 8. திரு. பே. மாரியப்பன் – மனித உரிமை ஆர்வலர்
‘நான் ரொம்ப தைரியசாலி, யாரையும் கள்ளத்தனம் பண்ண விடமாட்டேன்’
நீங்கள் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்தே உங்களை இயங்க விடாமல் செய்து வருகிறார்களா?
நான் பொறுப்பேற்றதிலிருந்தே பல பிரச்சனைகள். தெரு பிரச்சனை, ரோடு, தண்ணீர் பிரச்சனை, வீடு ஒதுக்கீடு பண்றது எல்லாமே பிரச்சனைதான். கூட்டமே நடத்தவிட மாட்டாங்க. காவல் துறையின் உதவி யுடன்தான் கூட்டமே நடத்துவேன். காவல் துறையிடம் புகார் மனு கொடுத்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க மாட்டாங்க. அவசரம்னு போன் பண்ணி கூப்பிட்டாலும் உடனே வரமாட்டாங்க. பால்துரை இன்ஸ்பெக்டர், எந்தப் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார். ஆனா, மற்றவர்கள் கூப்பிட்டால் உடனே வருவார்.
குடியரசு தினம் அன்னிக்கு கொடியேத்திட்டு, கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும்போது, துணைத் தலைவர் அவருடைய பினாமி ஆள் மூலம் இடது கையை பின்னால் திருப்பி முறுக்கி ஒடிச்சி விட்டார். பால்துரை இன்ஸ்பெக்டருக்குதான் போன் பண்ணினோம். வரவே இல்லை. அப்புறம் இதே ஆஸ்பத்திரிலதான் வந்து சிகிச்சை எடுத்துக்கிட்டேன். "ஆதித்தமிழர் பேரவை' தான் வந்து ஆர்ப்பாட்டம் பண்ணினாங்க. ஏழைப்பேச்சு அம்பலம் ஏறலை. நம்ம சொல்றது எதையுமே கேட்க மாட்டாங்க.
வெட்டும்போது ஏதாவது சொல்லி வெட்டுனாங்களா?
பேசவே விடலை. தாறுமாறா வெட்டுனாங்க. அங்க ஒரு கழிப்பறை கட்டப் போறோம். ரொம்ப நாளா போராடி ஒரு கழிப்பறை கட்டப் போறோம். சுப்பு கோனாரு அண்ணன் பையன் ஆவுடையப்பக் கோனார் பையன் அம்மலு, சுல்தான் ஆரம்பத்தில் இருந்தே என்னிடம் பிரச்சனை பண்ணினாங்க. இரண்டு பேரும் சேர்ந்து நாடார் பையன்களை பிரெய்ன் வாஷ் பண்ணி கூட்டிட்டு வந்தாங்க. அன்னிக்கு ரொம்ப நேரமாயிடுச்சு. ஆபிஸ்ல வேலை முடியவே 9.30 மணி ஆயிடுச்சு. மறுநாள் ஜமாபந்தி இருந்ததுனால ஓய்வூதியம், அப்புறம் பட்டா, ரேஷன் கார்டு எழுதிக் கொடுத்திட்டு இருந்தேன். மாமா வேற இரவு வேலைக்குப் போயிட்டாங்க. எனக்கு அன்னைக்கு "பீரியட்ஸ்' வேறு. அதனால என்னால நடக்கவும் முடியலை. தலை சுத்தலா இருந்தது. அதனால ஆட்டோல போகலாம்னு சொல்லி கிளம்பினேன்.
வழக்கமாக போகின்ற ஆட்டோவா? வேற ஆட்டோவா?
நான் எப்பவுமே நடந்துதான் போவேன். அன்னைக்கு "பீரியட்ஸ்' சமயம், மத்தியானம் வேறு சாப்பிடலை. தலை சுத்துற மாதிரி இருந்தது. நடக்க முடியல, கீழே விழுந்துருவேனோன்னு பயந்துதான் ஆட்டோல போவோம்னு கிளம்பினேன். ஆட்டோக்காரன் வந்தான். கருப்பசாமி கோயில் திரும்பிய உடனே கூட்டமா அரிவாளோட வந்ததும் ஆட்டோக்காரன் ஓடிப் போயிட்டான். நானும் ஆட்டோவை விட்டு இறங்கப் போனேன். இறங்க முடியலை. எப்பவுமே அந்த இடத்துல கும்பலா ஆள் உட்கார்ந்து இருப்பாங்க. போலிஸ் கிட்ட எத்தனையோ தடவை, அங்க ஆட்களை உட்கார விடாதீங்கன்னு சொன்னோம். உட்கார்ந்துகிட்டு கெட்ட வார்த்தையால பேசுவாங்க. கல்லைக் கொண்டு எறிவாங்க.
அன்னைக்கு அரிவாள் கத்தியோட கூட்டமா ஓடி வந்ததும் ஆட்டோக்காரன் ஓடிட்டான். ஆட்டோக்குள்ள வைச்சி வெட்டுனாங்க. பேசவே விடலை. வாயை மூடிட்டாங்க. கண்ணைப் பொத்திட்டாங்க. வெட்டு அதிகமா விழுந்ததாலே கத்த முடியலை. எட்டரை மணிக்கு மேலே எல்லோரும் நாடகம் (டி.வி.) பாக்கப் போயிடுவாங்க.
நாடகத்திலேயே மூழ்கிடுவாங்க.
அதுக்கு முன்னால உங்களத்தான் வெட்டப் போறோம்னு ஏதாவது சொன்னாங்களா?
அப்படி சொல்லலை. சொல்லியிருந்தா உஷாரா இருந்திருப்போம். ஜாக்கிரதையா இருந்திருப்போம். எங்க வீட்டுக்காரரைத்தான் வெட்டுவேன்னு சொல்வாங்க. ரோட்லே வைச்சி வெட்டுவேன்னு சொன்னாங்க. கடைசியில அவரை இங்கிருந்து மாற்றம் பண்ணிட்டாங்க. என் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. தலைவர் ஆனதில் இருந்தே பிரச்சனை. அவங்க சொல்ற எல்லாத்துக்கும் சரின்னு ஜால்ரா அடிச்சிட்டு போயிருந்தா நல்லா இருந்திருக்கும்; எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. கள்ளத்தனம் பண்றதுக்கு, யாரையும் எதையும் தின்ன விட மாட்டேன். அதுதான் பிரச்சனை. நான் தேர்தலில் சுயேட்சையாகத்தான் நின்றேன். ஆதித்தமிழர் பேரவைன்னு ஒண்ணு இருக்கிறதே பதவி ஏற்ற பிறகு தான் தெரியும். எங்க சமுதாயம்ன்னு லேசா போவேனே தவிர, பெரிய அளவுல இல்லை.
ஊர் மக்கள் ஆதரவாக இருப்பாங்க. நீங்களே அவங்ககிட்ட கேட்டுக்குங்க. நல்லா ஒத்துழைப்பு கொடுப்பாங்க. இடையில் நாடார் சமூகத்துக்கும் ஒரு சண்டை வந்தது. 2008 இல் "சரோஜினி நாயுடு அவார்டு' சோனியா அம்மாகிட்ட வாங்க டெல்லி போயிருந்தப்ப, சாதி சண்டைல விடலைப் பசங்களுக்குள்ளே சண்டை. தட்சணம்மாள்
நாடாரோ என்னவோ ஒரு நாடார், அந்த சண்டைல எங்க சாமிய அடிச்சிட்டாங்கன்னு பிரச்சனை. அந்தப் பிரச்சனை நடக்கும்போது நான் டெல்லி போயிட்டேன்.
நான்தான் அந்த சண்டையைத் தூண்டிவிட்டேன் என்று என்னைப் பிடிக்காதவங்க சொல்லி, அந்த சாதிச் சண்டை விஸ்வரூபம் எடுத்துட்டு, என்னதான் சரிசெய்து வைத்தாலும் அப்பப்ப இது புகைஞ்சிகிட்டே இருக்கும் (அருகில் இருந்த மகள் புவனேஸ்வரி இப்ப கொடையில்கூட பிரச்சனை வந்தது. சும்மா இருந்த அம்மாவை எப்படி நீங்க இங்க வரலாம் எங்க கோயிலுக்குன்னு கேட்டாங்க. வேணி தொடர்கிறார்). மட்டமா மட்டமா அம்மணக்குண்டி அப்படி இப்படின்னு லேடிஸை கேவலப்படுத்துறாங்க. யாரு மேடம் சம்மதிப்பாங்க? இதுக்கெல்லாம் நாங்க பொறுப்பாக முடியுமா? பிரச்சனை வந்தது.
உங்க பதவிக் காலத்தில் யாரெல்லாம் அதிகளவு தொந்தரவு பண்ணாங்க?
இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த சுல்தான். ஓடைப் பிரச்சனையில சுப்பு போன வருஷத்துல இருந்து ரொம்ப தொந்தரவு பண்ணினாங்க. அப்புறம் நாடார்கள்தான். என் சொந்த ஊர் நாகர்கோவில் பக்கம். இங்குள்ள மக்கள்
எல்லாருமே நாடார் வீடுகளுக்கு கல்யாண வீட்ல இலை எடுத்துப் போடுவாங்க. சுடுகாட்டுல குழி வெட்டப் போவாங்க. இப்படி நாடார் சமூகத்துக்கு வேலை செய்வாங்க. நான் பதவிக்கு வந்ததும் அதுபோல வேலைகளுக்கு போக விட மாட்டேன். ஓடை தள்ற வேலை பார்க்கறதாலே, இப்ப போக மாட்டாங்க. இது, அவங்களுக்கு தாங்கலை. கோபம்.
சுல்தான் ஒரு தடவை தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஓடையில வைச்சி வேலை நடக்கும்போது, அங்க அம்மணமா வந்து நின்னாரு. இப்படி வந்து நின்னா பொம்பளைங்க எப்படி நிப்பாக? அதுக்குக்கூட போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காசு கொடுத்தா போலிஸ் அவங்க பக்கந்தான் நிக்கும். அப்போ டி.பி.எம். மைதீன்கான் இருந்தார், அவர்கிட்ட சொன்னேன். பூங்கோதை அம்மாட்ட சொன்னேன். நான் சுயேச்சையா நின்னேன். ஆனால், நான் அ.தி.மு.க. சார்பாக நிக்கிறேன்னு சொல்லி, அந்தம்மாவையும் நடவடிக்கை எடுக்க விடாமல் ஆக்கிட்டாங்க. கருப்பசாமி பாண்டியனையும் பார்த்தேன்.
கஷ்டப்பட்ட சமுதாயத்தில் இருந்து யாரும் வரக்கூடாதுன்னு நெனைக்கிறாங்க. கழிப்பறையை கட்டுறதை எதிர்த்து சுப்பு கோனார்; அவருடன் சேர்ந்து மீரான், சுல்தான் எல்லாம் மிரட்டினாங்க. நாங்க முறையா அணுகினோம். ஆர்.டி.ஓ.விடம் கேட்டோம், தாசில்தாரிடம் கேட்டோம், இடம் இருந்தா தாராளமாக கட்டுங்க. இடம் முடிவு செய்தது மக்கள்தான். கோனார், ஆசாரி, தேவர் எல்லா சாதியும் சேர்ந்து தான் முடிவு பண்ணாங்க. இவர் சுப்பு கோனாரிடம் முக்கால்வாசி புறம்போக்கை பிடிச்சி வைச்சிருக்காரு. அதனாலதான் அவருக்கு இது புடிக்கலை.
(அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை) நான் ரொம்ப தைரியசாலிங்க. ஆனால், பொம்பளைன்னு கூட பாக்காம இப்படி தாறுமாறா வெட்டுனதுக்கு அப்புறம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இனிமேல் எங்க சமுதாயத்துல இருந்த யாராவது பொது வாழ்க்கைக்கு தைரியமா வருவாங்களா? பொம்பளையான என்னை வெட்டும்போது என் கணவர், என் பிள்ளைங்க கதி? எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு?