காந்தி மகான் தெருவில் தீண்டாமைச்சுவர்!


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத்தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’சேலம் மாநகரின் கிச்சிபாளையம் காந்தி மகான் தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவு மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சமூக ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் மிகப் பின்தங்கிய தினக்கூலி மற்றும் செருப்பு தையல் தொழிலாளர்களாவர்.
 இவர்கள் பொதுவெளியையும், பொதுப்பாதையையும் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் நீளமான “தீண்டாமைச்சுவர்” அங்கு கட்டப்பட்டுள்ளது. இச்சுவர் அப்பகுதியில் உள்ள ஆதிக்க சக்திகளின் முன் முயற்சியால் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.
மேற்கண்ட தீண்டாமைச்சுவர் காரணமாக தலித் மக்கள் உயர்சாதி மக்கள் வசிக்கும் பொதுப்பாதைக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுவதுடன், அப்பகுதியில் உள்ள கழிவு நீர் தடுக்கப்பட்டு தேங்கி இந்த குடியிருப்புப் பகுதியே சாக்கடை சூழ்ந்த பகுதியாக மாறியுள்ளது.
 இதனால் நோய்க்கிருமிகள் பரவி, தலித் மக்களின் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனை அப்பகுதி மக்களாலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தாலும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், மாநில வருவாய்த்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் பலமுறை கொண்டு செல்லப்பட்டும் தீர்வு காண எந்தவித நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட அரசு நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்நிலையில் 21-7-2011 அன்று சேலம் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் ஆர்.குழந்தைவேலு, பி.ராமமூர்த்தி (சிபிஐ(எம்), சேட்டு என்ற சிவக்குமார், பொன்சரவணன், முருகேசன்(இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்) ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதோடு, அங்குள்ள மக்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர்.
 இப்பிரச்சனைகள் குறித்து ஆர்.டி.ஓ. முன்னிலையில் 22-07-2011 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் இவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தீண்டாமைச்சுவர் மற்றும் சுகாதாரம் சம்பந்தமாக பிரச்சனைகளுக்கு ஒருவார காலத்திற்குள் தீர்வு காண்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தலித் மக்களின் வாழ்நிலையும், வாழ்வுரிமையும் அரசு நிர்வாகத்தின் பாராமுகத்தால் எந்த அளவு பாதிக்கப்படுகிறது என்பதற்கு சேலம் கிச்சிபாளையம் காந்தி மகான் தெரு ஒரு உதாரணமாகும்.



 நாடு முழுவதும் தமிழகத்திலும், தலித் மக்களின் ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் இத்தகைய இழிநிலையில்தான் உள்ளன. காந்தி மகான் பெயரில் உள்ள ஒரு தெருவிலேயே தீண்டாமைச்சுவரும், சுகாதாரக்கேடும் ஒருசேர பல ஆண்டுகளாக நீடிப்பது வெட்கக்கேடானதாகும்.
சேலம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப தீண்டாமைச்சுவர் அகற்றப்படவும், சுகாதாரச் சீர்கேட்டை முடிவுக்கு கொண்டு வரவும் உறுதியாக நடவடிக்கைகள் எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் தீண்டாமைக் கொடுமைகளுக்கும், தலித் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் நிலவும் அவலங்களுக்கும் முடிவு கட்ட உரிய கவனம் செலுத்துமாறும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.


thanks to nakkheeeran.com