இந்திய சமூகத்தில் பன்னெடுங்காலமாகவே, சமூக ரீதியான ஏற்றத்தாழ்வுகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் அனைத்து தரப்பினரும் - சமூக, அரசியல் தளத்தில் பங்கெடுக்கும் வகையில், இந்திய அரசமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஓர் ஏற்பாடே இடஒதுக்கீடு முறை. இடஒதுக்கீடானது, ஆளும் அரசுகளின் சலுகை அல்ல. அது, அனைவருக்குமான சம பங்கீடு; அடிப்படை உரிமை.
பட்டியல் சாதியினருக்கெதிரான வன்கொடுமைகள் நவீன வடிவமெடுத்துள்ளன. சான்றாக, பட்டியல் வகுப்பினர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களில், இன்றளவும் இடஒதுக்கீடு நிறைவு செய்யப்படவில்லை. அதிலும் குறிப்பாக, பட்டியல் வகுப்பினர்களில் உள்ள சில குறிப்பிட்ட பிரிவினர்களின் பங்கேற்பானது, மிகவும் சொற்பமாகவே உள்ளது கண்கூடு. அப்படிப்பட்ட பிரிவினர்களுக்காக குறிப்பாக, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சிறப்பு ஒதுக்கீடு செய்யும் திட்டம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போய்விட்ட அத்தகு சமூகத்தினரால், சிறப்பு உள் ஒதுக்கீடு கோரிக்கையை வென்றெடுக்க இயலாமல் போய்விட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் பட்டியல் சாதியினருக்கென வரையறுக்கப்பட்டிருந்த 25 சதவிகிதத்தில், 1975 ஆம் ஆண்டு, நாட்டிலேயே முதன் முறையாக, உள்ஒதுக்கீடாக 12.5 சதவிகிதம், அம்மாநிலத்தைச் சேர்ந்த மாசாபி சீக்கியர் மற்றும் பால்மீகி வகுப்பினருக்கென வழங்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு வரையிலும் இந்நிலையே நீடித்து வந்தது.
ஆனால், ஆந்திரப் பிரதேச மாநில அரசு, அம்மாநிலத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 57 வகுப்பினருக்குள்ளிருக்கும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு, சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கிடும் நோக்கில், 1999 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திர ராஜூ என்பவரைக் கொண்டு, ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. விரிவான ஆய்வுக்குப் பிறகு, சிறப்பு உள் ஒதுக்கீடு முறைக்கு ஆதரவாக அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அம்மாநிலத்தில் பட்டியல் சாதியினருக்கென வரையறுக்கப்பட்டிருந்த 15 சதவிகித இடஒதுக்கீடானது, பின்வருமாறு அளிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. பட்டியல் சாதியினர் அனைவரும் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு - "அ' பிரிவுக்கு 1 சதவிகிதம், "ஆ' பிரிவுக்கு 7 சதவிகிதம், "இ' பிரிவுக்கு 6 சதவிகிதம், "ஈ' பிரிவுக்கு 1 சதவிகிதம். இச்சட்ட முன்வரைவு, A.P. Scheduled Castes (Rationalisation of Reservation) Act, 2000 என்றொரு சட்டமாக்கப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்து, ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
"பட்டியல் சாதியினருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட இடஒதுக்கீட்டிற்குள் மாநில அரசால், சிறப்பு உள் இடஒதுக்கீடு ஏதும் செய்ய முடியாது. எனவே, இச் சட்டம் அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானது' என அறிவிக்கக் கோரி, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வாதத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்றத்தால் அந்த சட்டம் நீக்கறவு செய்யப்பட்டது. ஆந்திரப்பிரதேச மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 2005 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம், “பட்டியல் சாதியினர் எனும் வரையறையை மாற்றியமைக்க, குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, மாநில அரசு அதில் மாற்றம் ஏதும் செய்ய முடியாது’ என்று கூறி, “உயர் நீதிமன்றத்தால் அந்த சட்டம் நீக்கறவு செய்யப்பட்டது சரியே’ என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பின் காரணமாக, ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் நடைமுறையில் இருந்த சிறப்பு உள் ஒதுக்கீடும், 2005 ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தது. ஆனால் உடனடியாக, பஞ்சாப் மாநில அரசு பட்டியல் சாதியினருக்குள் உள் இடஒதுக்கீடு என்பதற்குப் பதிலாக, பட்டியல் சாதியினருக்குள் சில குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் என்று பொருள் கொள்ளத்தக்க வகையில், “பஞ்சாப் மாநில பட்டியல் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (பணியிடங்களில் இடஒதுக்கீடு) சட்டம், 2006’ என்ற சட்டத்தை இயற்றியது.
அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் உள் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. அந்த சட்டத்தை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து, அந்த சட்டம் அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என பஞ்சாப் உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. பஞ்சாப் மாநில அரசு, அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை வழங்கியுள்ளது. இதன் காரணமாக, தற்போதும் பஞ்சாப் மாநிலத்தில் பட்டியல் சாதியினருக்கு சிறப்பு உள் ஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளது.
2005 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் சிறப்பு உள்ஒதுக்கீடு முறைக்கு எதிராக வழங்கிய தீர்ப்பினைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச மாநில அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, டில்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி உஷா மெஹ்ரா என்பவரைக் கொண்டு ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டு, சிறப்பு உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவரும் 2008 ஆம் ஆண்டு சிறப்பு உள் ஒதுக்கீடு முறைக்கு ஆதரவாக தனது ஆய்வை மேற்கொண்டதோடு, இது தொடர்பாக அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற பரிந்துரையோடு, தனது அறிக்கையை நாடாளுமன்ற அவைத் தலைவரிடம் அளித்துள்ளார்.
இத்தகைய சூழலில் தமிழ் நாட்டில் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, "அரசுப் பணியிடங்களில் அருந்ததியின மக்களது கடந்தகால பங்கெடுப்பு குறித்தும், அருந்ததியினருக்கு சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்குதல்' குறித்தும் ஆய்வு மேற்கொள்ள, 2008 ஆம் ஆண்டு, தற்போதைய மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களைக் கொண்டு, ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தமிழ் நாட்டில் வரையறுக்கப்பட்ட 76 பட்டியல் சாதியினரில், அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, மாதிகா, பகடை, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரா ஆகிய ஏழு பிரிவினரும் "அருந்ததியர்' என்று வகைப்படுத்தப்பட்டு, அவர்களுடைய மக்கள் தொகைக்கேற்ப, பட்டியல் சாதியினருக்கான 18 சதவிகித இடஒதுக்கீட்டில், 3 சதவிகித உள் ஒதுக்கீடு, முன்னுரிமை அடிப்படையில் "தமிழ் நாடு அருந்ததியர்கள்' (பட்டியல் வகுப்பினர் இடஒதுக்கீட்டிற்குள் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும், நியமனங்களிலும் சிறப்பு ஒதுக்கீடு) சட்டம் 2009 என்ற சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில், இடஒதுக்கீடு முறைக்கு முற்றிலும் எதிரானவர்களால் இப்படிப்பட்டதொரு சட்டத்தை, "அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது' என அறிவிக்கக் கோரி, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூகத்தில் இன்றளவும் கடைகோடியில் உள்ள ஒரு பிரிவினருக்கான வாழ்வில் சிறு முன்னேற்றத்துக்கான படிக்கட்டாக, நீண்ட, நெடிய போராட்டங்களுக்குப் பிறகு இயற்றப்பட்டுள்ள இச்சட்டம், சில தனி நபர்களால் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வழக்கில், சமூகத்தின் பல்வேறு தரப்பினரும், தங்களை மனுதாரர்களாக இணைத்துக் கொண்டு, இச்சட்டத்திற்கு ஆதரவாக தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்து, இச்சட்டம் நீடிக்க வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றத்தில் அளித்துள்ளனர்.
அரசமைப்புச் சட்டத்தின்படி, பட்டியல் சாதியினருக்கான பட்டியலில் புதிதாக சேர்க்கவோ, ஏற்கனவே இருந்ததை நீக்கவோதான் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆனால் இந்த சட்டத்தில் அவ்விதம் மாறுதல் ஏதும் செய்யப்படவில்லை. மேலும், முன்னுரிமை என்பது வேறு, இடஒதுக்கீடு என்பது வேறு என ஏற்கனவே பல்வேறு தீர்ப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இச்சட்டத்தை உயர் நீதிமன்றத்தால் தடை செய்ய முடியாது என்பதே சட்ட ரீதியான முடிவாக இருக்க முடியும்.
இவை எல்லாம் ஒருபுறமிருக்க, இன்னொரு முக்கியச் செய்தியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வெறும் இடஒதுக்கீடு மட்டுமே எந்தவொரு சமூகத்தையும் மாற்றிவிடாது. இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து, அதற்கான அடிப்படை தகுதி வாய்ந்த போட்டியாளர்கள் அந்த சமூகத்தில் இல்லாது போனால், அங்கே இடஒதுக்கீட்டினால் பயனேதுமில்லை. ஒரு குறிப்பிட்ட சட்டத்தால் மட்டுமே, ஒரு சமூகத்தின் அனைத்து வாழ்வியல் தேவைகளையும் நிறைவு செய்துவிட முடியாது. மேலும், மாநில, மத்திய அரசுகள், அருந்ததியினரைப் போல விளிம்பு நிலையில் வாழும் மக்களையும், இதர பிரிவினரைப் போல, சமூகத்தின் அனைத்து தளங்களிலும் சம பங்கேற்பு செய்யும் வகையில், சிறப்பு வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலமே இச்சட்டம் இயற்றப்பட்டதன் உண்மையான நோக்கத்தை அடைய முடியும்.