தாமரை பூத்த தடாகங்களே, உமை
தந்தஅக் காலத்திலே-எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது தொடர்பாக, 23.06.2011 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளாக நாம் சுமந்து கொண்டிருக்கும் இழிவைக் கண்டித்த அந்த உத்தரவு, பெரும்பான்மை கவனத்தைப் பெறாமல், நாளேட்டுச் செய்திகளுள் ஒன்று என்றளவில் நின்று போயிற்று. கதர்ச் சட்டைகளும், காவி வேட்டிகளும் அரங்கேற்றிய உண்ணாவிரத சலசலப்புகளில், மனச்சாட்சியைத் தட்டி எழுப்பி இருக்க வேண்டிய ஒரு செய்தி, அந்த மக்களைப் போலவே ஒதுக்கப்பட்டுவிட்டது.
'சாக்கடைப் பராமரிப்பில் மனிதர்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான சட்டத் திருத்தத்தை ஆகஸ்டு மாதத்திற்குள் கொண்டு வராவிட்டால், பிரதமர் அலுவலக அதிகாரியை நீதிமன்றத்திற்கு அழைப்போம் ' என அந்த உத்தரவு கூறுகிறது. காரணம் சாக்கடை அள்ளும் பணிகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து 2008ஆம் ஆண்டே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்படவில்லை.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர், இரு அரசுகளின் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தார். இதில் தமிழக அரசு அதிகாரிகள் நேரில் வந்திருந்து விளக்கம் அளித்தனர். 23ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் செயலாளர் நீதிமன்றத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அன்று செயலாளருக்குப் பதிலாக, இணைச் செயலாளர் ஆஜரானார். அவர் அளித்த மனுவில், இது தொடர்பாக சட்டத் திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்து பிரதமருக்கு தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் கடிதம் எழுதிய பிறகு, இந்த விவகாரத்தில் பிரதமர் தனிக்கவனம் செலுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக இதற்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஆச்சரியமளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்தே மேற்காணும் உத்தரவினைப் பிறப்பித்திருக்கின்றனர்.
கழிவுகளை அகற்றும் பணி - என்பதில், குப்பைகளை அகற்றுதல், கழிவு நீர்க் கால்வாய்களைச் சுத்தப்படுத்துதல், கழிப்பறைகளைச் சுத்தப்படுத்துதல் போன்று இன்னும் பல வேலைகளும் அடங்கும். இதில் கழிப்பறைகளைச் சுத்தப்படுத்துதல் என்பது, தண்ணீர் ஊற்றிக் கழுவி விடுவதோடு நின்று விடவில்லை. கையால் மலம் அள்ளும் வேலையும் இதில் அடங்கும். இவற்றை எல்லாம் தூய்மைப் பணி என்று வரையறுக்கின்றனர். இவை அனைத்துமே இயந்திரங்களால் செய்யப்பட வேண்டியவை. அதிலும் கையால் மலம் அள்ளும் முறை அடியோடு ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.
கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்குப் பின் தொடங்கிய இந்தப் பணியில் 95 விழுக்காடு, அருந்ததியர்(தமிழ்நாடு), மாதிகா(ஆந்திரா), பங்கிகள்(குஜராத்), மகர்(மராட்டியம்) சமூகங்களைச் சேர்ந்த மக்களே ஈடுபட்டு வருகின்றனர். சாதியின் பெயரால் தங்களின் மீது திணிக்கப்பட்ட இந்த இழிவிலிருந்து மீள்வதற்காக 1924 முதல் இன்றுவரை அந்த மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆதித்தமிழர் பேரவை தொடர் போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு, 1993ஆம் ஆண்டு ஜுன் 5ஆம் தேதி மத்திய அரசு உலர் கழிப்பகங்களில் மனிதக் கழிவுகளைக் கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பகக் கட்டுமானத் தடைச் சட்டத்தைக்( The Employment of Manual Scavengers and Construction of Dry latrines ( prohibition) Act 1993) கொண்டுவந்தது. இச்சட்டத்தின்படி, விதிகளை மீறுகின்றவர்களுக்கு அதிகபட்சமாக ஓராண்டுவரை சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக 2000 ரூபாய் தண்டம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும் என்றிருக்கிறது. ஆனால் சட்டம் இயற்றி 18 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை ஒருவர் கூட இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படவில்லை. அப்படியானால், கையால் மலம் அள்ளுதல் ஒழிக்கப்பட்டுவிட்டதா அல்லது இயந்திரமயமாக்கப் பட்டுவிட்டதா?
இல்லை. அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள் என எங்கும் இந்நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும், இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனமான தொடர்வண்டித் துறையில், பொதுமக்கள் சாட்சியாகவே இந்த அவலம் நடந்துகொண்டிருக்கிறது.
Asian Legal Resource Centre(ALRC) என்னும் அரசு சாரா அமைப்பின் ஆய்வறிக்கையை ஆகஸ்ட் 25, 2008 இல் மனித உரிமைகள் கவுன்சில் வெளியிட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் புனே மாநகராட்சியில் பணிசெய்யும் 6826 தூய்மைப்பணியாளர்களில் 327 பேர் இறந்து போயிருக்கிறார்கள். பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்பட்ட நோய்த் தொற்றுகளால் அவர்களின் இறப்பு நேர்ந்துள்ளது. இந்த விவரங்களை புனே மநாகராட்சியே வெளியிட்டுள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பவர்களில் 98 விழுக்காட்டினர் தலித்துகள், அதிலும் 95 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் அவ்வறிக்கை சொல்கிறது.
1949 இல் பார்வே கமிட்டி(Barve Committee), 1957இல் தூய்மைப்பணி நிலைபற்றிய விசாரணைக் குழு( Scavenging Conditions Enquiry Committee), 1968 தொழிலாளர் குழுவிற்கான தேசிய ஆணையம் (National Commission of Labour Committee) மற்றும் கையால் மலம் அள்ளுவோருக்கான தேசிய ஆணையம் (National Commision for Safai Karmacharies ) என அத்தனை ஆணையங்களும், குழுக்களும் தூய்மைப் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தன. பல வடிவங்களில், பல்வேறு கட்டங்களில் போராட்டங்கள் நடந்துவந்தாலும் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
காரணம் இது ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கான பிரச்சினை என்ற குறுகிய கண்ணோட்டம் பெரும்பான்மையாக இருக்கிறது. இது அவர்களுடைய பிரச்சினை மட்டுமன்று, மானமுள்ள மனிதர்கள் அனைவருக்குமானது என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் உணரத் தலைப்பட வேண்டும்.
மானிடம் போற்ற மறுக்கும்-ஒரு
மானிடம் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். சக மனிதர்களின் இழிவைத் துடைக்க முன்வராத மனிதர்கள் பிணங்களுக்கு ஒப்பானவர்கள். இல்லையா? பொதுநல வழக்குகளின் போதும், நீதிமன்றங்கள் நினைவூட்டும் போதும் மட்டுமே பேசப்பட வேண்டிய பிரச்சினை இல்லை இது. நாடு முழுவதும், இந்நிலை மாறும் வரை தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டிய, அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய பிரச்சினை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வர்ணாசிரமமும், சாதியும் அம்மக்களை மலக்குழிகளுக்குள் அழுத்திக் கொண்டிருப்பதை இன்னும் எத்தனை காலம்தான் வேடிக்கை பார்க்கப்போகிறோம் நாம். வர்க்கப் போராட்டத் தளத்திலோ, சாதிய போராட்டத் தளத்திலோ, அவற்றைத் தாண்டிய பொதுவான தளங்களிலோ இதற்கான போராட்டங்கள் போதுமான அளவில் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
இதில் வேடிக்கையான வேதனை என்னவென்றால், இந்நிலையை ஒழிக்க நாம் யாரிடம் கோரிக்கை வைக்க வேண்டியதிருக்கிறதோ, அந்த அரசாங்கம்தான் இதுநாள் வரையில் ஏறத்தாழ 13 இலட்சம் பேரை இந்த வேலைக்காக நாடு முழுவதும் நியமித்திருக்கிறது. நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் உலர் கழிப்பிடங்களும், கையால் மலம் அள்ளும் முறையும் நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. தொடர்வண்டித் துறை 1993ஆம் ஆண்டு தடைச்சட்டத்தை மதிப்பதில் மிக மோசனமான குற்றவாளியாகவே உள்ளது.
அரசு வேலைவாய்ப்பகங்கள், தூய்மைப்பணிகளுக்கான வேலை வாய்ப்புக் கடிதங்களை, அருந்ததிய மக்களுக்கு மட்டுமே அனுப்பி வருகின்றன. அத்தகைய வாய்ப்புகளை நிராகரிக்கும்படி அந்த மக்களுக்கு, அருந்ததியர் அமைப்புகள் அறிவுறுத்தி வருகின்றன. அந்த மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி வாய்ப்புகளும், அதற்கேற்ற வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் கடமையாகும். ஒரு சமூகத்திற்கொரு (அ)நீதி என்னும் மனுதர்மத்தை ஒழித்து, அனைவரும் சமம் என்னும் அரசியலமைப்புச் சட்டத்தை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.
குஜராத் முதல்வர் மோடி தன்னுடைய 'கர்மயோக்' என்னும் புத்தகத்தில், தலித்துகள் தூய்மைப் பணி செய்வதை, இந்த சமூகத்தின் மற்றும் கடவுளின் மகிழ்ச்சிக்காக செய்யும் கடமையாகக் கருத வேண்டும். இதை கடவுளுக்குச் செய்யும் சேவையாகக் கருதி ஆனந்தத்துடன் செய்ய வேண்டும் என்றெல்லாம் கீதாஉபதேசம் செய்திருக்கிறார். எப்படி இருக்கிறது பாருங்கள், சனாதனத் திமிர். கையால் மலம் அள்ளும் வேலையை ஆனந்தத்துடன் செய்ய வேண்டுமாம். கடவுளுக்குச் செய்யும் சேவையாம் அது. அப்படியானால், இனிமேல் அந்தச் சேவையை அவர்கள் செய்து மொத்தப் புண்ணியத்தையும் கட்டிக்கொள்ளட்டும்.
சந்திரயான், அக்னி ஏவுகணைகள், நிலவுக்கு செயற்கைக் கோள் என்று நவீன அறிவியலில் முன்னேறிக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில், இன்னும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கையால் மலம் அள்ளும் முறை நீடிப்பது சரிதானா? மனச்சாட்சி உள்ளவர்கள் பதில் சொல்லட்டும்.
(18.07.2011 ஜனசக்தி நாளிதழில் வெளிவந்த கட்டுரை. ஆதார நூல்: மலத்தில் புதையும் மாண்பு - எழில்.இளங்கோவன் மற்றும் இணையத்தளத் தரவுகள்)