பார்ப்பனர் மட்டுமல்ல; அருந்ததியர் முன்னால் எல்லா ஜாதிக்காரனும் குற்றவாளிதான்
***
***
நாகூர் இஸ்மாயில்: ஆனாலும் கடவுள் மதம் குறித்து பெரியார் கடுமையாக விமர்சித்தாரே?
வே. மதிமாறன்: சாதாரண பக்தனின் இறைநம்பிக்கையைவிட, ஒரு ஆர்.எஸ்.எஸ். காரனின் மத நம்பிக்கை ஆபத்தானது. கிராமத்தானின் இறை நம்பிக்கை முட்டாள்தனமானதாக இருக்கலாம். ஆனால், அது அடுத்த மதக்காரனை துன்புறுத்துகிற அளவிற்கு ஆபத்தானது இல்லை. அவன் கும்பிடுகின்ற எந்த கடவுளிடமாவது ‘நான் நல்லா இருக்கணும், ஊர்ல மழை பெய்யணும்’ என்று வேண்டிக் கொண்டு அவன் பாட்டுக்கு போய் விடுவான்.
ஆனால் அவனிடமிருப்பதில் மோசமானது, சாதீய உணர்வு தான். ஏனெனில் தன்னுடைய சுய சாதியை முன்னிறுத்த நினைப்பவன் மற்ற மனிதர்களை தனக்கு கீழாக நினைக்கிறான். இது மிகவும் கேவலமானது. ஆபத்தானது.
ஒரு அப்பாவி பக்தனுடைய கடவுள் நம்பிக்கையை அவனுடைய சாதி உணர்வு, ஆபத்தானதாக மாற்றிவிடுகிறது. தாழ்த்தப்பட்டவர்களை தங்களின் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதும், அவர்களை தங்கள் கடவுள்களை வழிபட தடுப்பதும், அப்படி மீறி வழிப்பட்டால் அவர்களை கொலை செய்கிற அளவிற்குக்கூட சாதி உணர்வு அவனுடைய இறைநம்பிக்கையை பயங்கரமானதாக மாற்றிவிடுகிறது.
அதனால்தான் பெரியார் சாதிஒழிப்பின் நோக்கத்தில்தான் இறைமறுப்பையும் தீவிரப்படுத்தினார். பெரியாரின் 70 ஆண்டு கால கடின உழைப்பால் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான், முற்போக்கானவர்கள் மட்டுமல்ல; பிற்போக்கான சாதி சங்கத் தலைவர்கள்கூட தனது பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதில்லை. அப்படி போட்டுக் கொள்வதற்கு விரும்பம் இருந்தாலும், அதை பகிரங்கமாக வெளிபடுத்த வெட்கப்படும்படியான நிலையை ஏற்படுத்தினார்.
ஆனால் இன்று சாதி உணர்வு பழைய மாதிரி மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து இருக்கிறது. ‘சாதி உணர்வோடே ஒருவன் முற்போக்காளனாக இருக்கலாம்’ என்பது மாதிரியான போக்கு தீவிரமாக வளர்ந்து வருகிறது. முற்போக்கானவர்களாக காட்டிக்கொள்கிறவர்கள் சாதி சங்கத் தலைவர்களை ஆதரிக்கிறபோக்கும் வளர்ந்து வருகிறது. இது மிகுந்த ஆபத்தானது.