அருந்ததியர் உள் ஒதுக்கீடும் தலித்கட்சிகளும்





பொதுவாக, இட ஒதுக்கீடு விஷயத்தில் ஆதிக்க சாதியினரிடமிருந்து தான், அதிலும் இந்துத்துவ ஆதரவாளர்களிடமிருந்துதான் எதிர்ப்பு வரும். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு ‘இந்துக்களின்’ ஒற்றுமையைக் குலைக்கும் என்பார்கள். ஆனால், அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கோருவதை தலித் தலைவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களே எதிர்த்து இதேபோன்ற வாதத்தை முன் வைத்தார்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஏன் அதிர்ச்சியாகக் கூட இருக்கும்.அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இது தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரிக்கும் செயல் என்று கூறியிருக்கிறார். அதே கருத்தை குடியரசுக் கட்சியின் செ.கு.தமிழரசனும் தெரிவித்துள்ளார் (ஜூனியர் விகடன், 23.3.08, தினமணி-14.4.08). விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்தான்.ஒற்றுமையைக் குலைக்கும் என்ற வாதம் வைப்பவர்களுக்கு பெரியார் அன்றே பதில் சொல்லிவிட்டார். சமுதாயத்தை நாங்கள் சாதிரீதியாக பிரிக்கவில்லை, அது ஏற்கனவே பிரிந்துதான் இருக்கிறது என்று. தலித்துகளும் உட்சாதிப் பிரிவுகளாகப் பிரிந்துதான் கிடக்கிறார்கள்.அட்டவணைச் சாதிகளில் ஒன்றுக்கொன்று திருமண உறவு அனுமதிக்கப்பட்டிருக்கிறதா என்ன? இல்லையே! அக மணமுறை எனும் இறுகிய கோட்டைக்குள் தானே அவைகளும் சிறைபட்டுக் கிடக்கின்றன? ரத்தத் தூய்மை கோட்பாடு, வேறுபாடின்றி அனைத்து சாதிகளாலும் கறாராகக் கடைபிடிக்கப்படுகிறது. தலித்துகளுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகளும், தீண்டாமையும் இருப்பதும் அனைவரும் அறிந்தது தான்.குண்டாயிருப்பில் 12 அருந்ததியர், 45 ஆதிதிராவிடர், 18 தேவர், 1 நாயக்கர், 10 படையாச்சி, 30 செட்டியார்- குடும்பங்கள் வசித்து வருகின்றன. அருந்ததியர் விவசாயக் கூலிகளாகவும், பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைக் கூலிகளாகவும் தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர். அரசியல், பொருளாதார ரீதியாக ஆதிதிராவிடர்கள் இங்கு பலம் பொருந்தியவர்கள். இவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர்.11.7.07 மாலை 5 மணிக்கு பொதுவீதியில் ஒரு அருந்ததியச் சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது அதே ஊரைச் சேர்ந்த ஆதிதிராவிடச் சிறுவன் அவனைக் கல்லால் அடித்திருக்கிறான். வலி பொறுக்க முடியாமல் சிறுவன் திருப்பியடிக்க, இதுபற்றிய விவரம் தெரியவர, ஆதி திராவிடச் சிறுவனின் உறவினரான முருகேஸ்வரி அருந்ததியச் சிறுவனை அவனது தாய்க்கு முன்பே அடித்து உதைத்துள்ளார். இதுபற்றி இரண்டு குடும்பங்களும் பேசி முடித்த பிறகு இரவு 9.30 மணிக்கு முத்துராசு என்பவர் ‘எப்படி என் அண்ணன் மகனைஒரு சக்கிலியப் பய எதுத்து அடிக்கலாம்’ என்று சாதிப் பெயர் சொல்லி மீண்டும் சண்டைக்கு இழுத்துள்ளார்.’ (தலித் தலைவர்களுக்கு மா.பொன்னுராசு, மீனா மயில் எழுதிய பகிரங்க கடிதம். தலித் முரசு, ஆகஸ்டு 2007).பொதுவாக தலித்துகள் விஷயத்தில் ஆதிக்கசாதியினர் எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படியே ஆதிதிராவிடரும், தேவேந்திர குல வேளாளரும் அருந்ததியரிடம் நடந்து கொள்கிறார்கள்.*‘சிறுவர்களின் சண்டையை பெரிதாக்குவது எப்போதும் ஆதிக்கசாதியினரின் தந்திரமாக இருந்து வந்திருக்கிறது. இந்த சின்ன விஷயத்தைக் காரணமாக்கியே பெரும்பாலான சாதிச் சண்டைகளும், வன்கொடுமைகளும் நடந்தேறியிருக்கின்றன. சிறுவர்களின் சண்டையைப் பெரிதாக்க வேண்டாம் என்று சொன்ன கோவிந்தராசுவை ‘கை நீட்டிப் பேசுற அளவுக்கு சக்கிலியப் பயலுக்கு தைரியம் வந்துருச்சா’ என்று விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த முத்துராசு, சுப்பையா, முருகேசன், சின்னப் பிரகாஷ், கருப்பசாமி ஆகியோர் பெரிய பெரிய தடிகளுடன் சென்று கோவிந்தராசுவைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.கோவிந்தராசுவைக் காப்பாற்ற முயன்ற தாய் வீரம்மாளை, பிறப்புறுப்பில் ரத்தம் கசியும் அளவு தாக்கியுள்ளனர். பாட்டி முனியம்மாளின் இடுப்பு எலும்பு உடைந்து விட்டது. தங்கை முத்துமாரியின் சட்டையைக் கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளனர். அவர்களுடைய வீடும் பொருட்களும் சூறையாடப்பட்டுள்ளன. ‘எங்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. எதிர்த்தா குடிசையோட கொளுத்திப்புடுவோம். எந்தத் தலைவன் வந்தாலும் எங்க மசுரக் கூட புடுங்க முடியாது’ என்று சூளுரைத்துள்ளார்கள். (அதே இதழ்). பிறப்புறுப்பில் ரத்தம் வருகிற மாதிரி அடிப்பது, குடிசையோடு கொளுத்துவது....
வெண்மணி!‘தங்களை எதிர்த்ததோடு மட்டுமின்றி தங்கள் மீது வழக்கும் பதிவு செய்த அருந்ததியர்களை பொதுவீதியில் நடக்கக்கூடாது எனவும், பொதுக் குழாயில் குளிக்கக் கூடாது எனவும் விடுதலைச் சிறுத்தைகள் தடை விதித்தது. (ஆதிதிராவிடர் ஆதிக்க சாதியாம்).’ஆதிதிராவிடர்களுக்கும், தேவேந்திர குல வேளாளர்களும் ‘நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை, யாரைவிடவும் மேலானவர்கள் இல்லை’ என்கிற எண்ணம் இல்லை. அவர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனை தனி.‘தேனி மாவட்டம் வாய்க்காபட்டியில் வார்டு உறுப்பினர் தேர்தலில் பள்ளர்களின் எதிர்ப்பையும் மீறி ஒரு அருந்ததியர் போட்டியிடுகிறார். 8.10.06ல் நடந்த மோதலில் எஸ். ஈஸ்வரன் என்ற அருந்ததியர் படுகொலை செய்யப்படுகிறார்.’ மேலவளவோ?நடந்ததை சொல்லி, சரியானதொரு கருத்தையும் சொல்லிவிட்டார்கள். கிருஷ்ணசாமியோ, திருமாவளவனோ மற்ற தலித் தலைவர்களோ அருந்ததியிருக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பது தலித்துகளின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக அல்ல என்பது தெளிவு. சாதிப்படி நிலையில் தத்தமது சாதியினரின் ஆதிக்க நிலையைப் பாதுகாத்துக் கொள்வதும் இவர்கள் எதிர்ப்பதற்கு முக்கிய காரணம்.அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், வேலை வாய்ப்புகளை இட ஒதுக்கீடு இல்லாத காலங்களில் எப்படி ஆதிக்கசாதியினர் தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்தார்களோ அதே போல் இப்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை - ஒப்பீட்டளவில் தலித் சாதிகளுக்குள் முன்னேறியிருக்கிற தங்களது சாதியினரே அனுபவிக்க வேண்டும் என்ற சுயநலத்தின் அடிப்படையிலேயே எதிர்க்கிறார்கள். அதனால்தான் பிற்படுத்தப்பட்டோருக்கான, தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு வந்தால் தங்களின் வாய்ப்புகள் சுருங்கும் அல்லது ஆதிக்கம் பலகீனமடையும் என்ற சுயநலத்தால் ஆதிக்க சாதியினர் எப்படி எதிர்த்தார்களோ, எதிர்த்துக் கொண்டிருக்கிறார்களோ அதேபோல் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை இந்த தலித் தலைவர்கள் எதிர்க்கிறார்கள். அதற்கு ஆதிக்கசாதியினர் பயன்படுத்திய அதே வாதங்களை இரவல் வாங்கியிருக்கிறார்கள்.தலித் கட்சிகளை சாதிக் கட்சிகளாகப் பார்க்கக்கூடாது, ஒடுக்கப்பட்ட மக்களின் அணிதிரட்சியாகப் பார்க்க வேண்டும் என்பது சாதி ஒழிப்பில் உண்மையான அக்கறை கொண்டவர்களின் நிலை. ஆனால், இந்த தலித் கட்சித் தலைவர்களோ தங்கள் கட்சிகளை சாதிக்கட்சிகளாகவே ஆக்கி விட்டார்கள்.அருந்ததியரை தலித்துகளாக அடையாளம் காணவும் இவர்கள் மறுக்கிறார்கள். பாருங்கள்,கிருஷ்ணசாமி என்ன கூறியிருக்கிறார் என்று:- ‘பிற தாழ்த்தப்பட்டவர்களோடு அவர்கள் (அருந்ததியர்) இணைந்து போராடுவதில்லை. அவர்கள் தங்களைத் தமிழர்களாகக் கூட அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. தெலுங்கர்களாக வெளிப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்கிறார்கள்’.( ஜூ.வி, 23.3.08).ஏற்கனவே,திருமாவளவன் அருந்ததியரை வந்தேறிகள் என்று பழித்தார். ஆரியர்களை வந்தேறிகள் என்று சொன்ன காலம் போய் அருந்ததியரை வந்தேறிகள் என்று சொல்கிற அளவிற்கு தமிழ் இனவாதம் எவ்வளவு ‘முன்னேறியிருக்கிறது’ பாருங்கள்! தமிழ் மொழிவாத அரசியல் என்பது பார்ப்பனரல்லாத ஆதிக்கசாதியினர் அணிந்திருக்கும் முகமூடி என்ற உண்மைக்கு இந்த தலித் தலைவர்கள் சாட்சியம் கூறியிருக்கிறார்கள்.அருந்ததியர் தமிழரில்லை என்றால் பின்னர் அவர்களுக்கு மட்டுமானதாக ஏன் மலம் அள்ளும் தொழில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? தமிழரல்லாதவர்களான அவர்களை விரட்டிவிட்டு தமிழர்களுக்கு அந்த வேலைவாய்ப்புகளைக் கொடுக்கலாமில்லையா? அருந்ததியர் பிற தலித்துகளோடு இணைந்து போராடுவதில்லை என்று இவர்கள் சொல்வது உண்மையானால் அதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்? ஊர் ஊருக்கு அடக்கி ஒடுக்கிக் கொண்டிருந்தால் அவர்கள் எப்படி ‘உங்களோடு’ சேர முடியும் தலைவர்களே? சக்கிலியப் பயலுகளுக்கு கைநீட்டிப் பேசுகிற உரிமையே இல்லை எனும் ‘நீங்கள்’ அவர்கள் உங்களோடு சேரவேண்டும் என்பது உங்கள் எண்ணிக்கை பலத்தை அதிகரித்துக் காட்டிக் கொள்ளவா?ஆனால், அருந்ததியர் தங்களை ஆதித்தமிழர்கள் என அழைத்துக் கொள்வதையே நாம்" காண்கிறோம். ‘அருந்ததியருக்கு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இல்லாமல் தனிப்பட்டியலில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என்கிறார். (ஜூ.வி. மே.கு.இதழ்). ஏற்கனவே 50%க்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் அதையும் மீறி 69% இட ஒதுக்கீடு உள்ளது. அது ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இனி அருந்ததியருக்குத் தனியாக இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றால் அது இப்போதைக்கு நடக்கிற காரியமா? நீதிமன்றங்களில் தற்போது சும்மாவே இட ஒதுக்கீடு என்றால் அதைக் கொலைக் குற்றத்திற்கு இணையாக பார்க்கிற போக்கு அதிகரித்து வருகிறது.‘முக்குலத்தோர் சமூகத்தில் ‘கள்ளர் சீரமைப்பு வாரியம்’ இருப்பதுபோல் அருந்ததியர் சமூகத்திற்கும் ஒரு வாரியத்தை ஏற்படுத்தி அரசு நிதி உதவிகளைச் செய்யலாம். கடன், கல்வி, தொழில் என எல்லா உதவிகளையும் செய்து அவர்களை முன்னேற்ற வேண்டும். உள் ஒதுக்கீடு அல்ல, நிதி ஒதுக்கீடுதான் அவர்களை மேம்படுத்தும். அந்த முன்னேற்றத்தால் 18% இட ஒதுக்கீட்டில் அவர்களும் போராடி வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள்.’ இது தமிழரசனின் கருத்து. இதிலும் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களிடம் இரவல் வாங்கப்பட்ட கருத்து இருக்கிறது. மேல்நிலையாக்கத்தின் ஒரு வடிவமோ என்னவோ?வி.பி.சிங் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுப்பணிகளில் 27% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டபோது அதை எதிர்த்தவர்கள், முதலில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி கொடுத்து தகுதியுள்ளவர்களாக ஆக்குங்கள் என்றார்கள். தற்போது உயர்கல்வியில் இட ஒதுக்கீடு விஷயத்திலும் ஆதிக்கசாதிகள் முதலில் அவர்களுக்கு பள்ளிக்கல்வி கொடுத்து தகுதியுள்ளவர்களாக ஆக்குங்கள் என்கிறார்கள். இப்போது தமிழரசன் அருந்ததியர் இட ஒதுக்கீடு விஷயத்தில் அதையே தான் சொல்கிறார்! இது இருக்க இவரது கருத்து கிருஷ்ணசாமியின் கருத்தோடு முரண்படுகிறது.‘18 % இட ஒதுக்கீட்டை எந்த அரசும் முறையாக அமல்படுத்தவில்லை. இதனால் சுமார் 3 லட்சம் பின்னடைவு பதவியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதை அமல்படுத்தியிருந்தாலே அருந்ததியர்பின்தங்கியிருக்கமாட்டார்கள்.’ (ஜூ.வி, அதே இதழ்). அதாவது, அருந்ததியரில் தகுதியுள்ளவர்கள் இருக்கிறார்கள். பின்னடைவு பணியிடங்கள் காலியாக நிரப்பப்படாமல் இருப்பதால்தான் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்கிறார். தமிழரசனோ இனிமேல்தான் அருந்ததியருக்கு கல்வி கொடுத்து தகுதியுள்ளவர்களாக ஆக்க வேண்டும் என்கிறார்!கிருஷ்ணசாமியே தன் கருத்தோடு ஓரிடத்தில் முரண்படுகிறார். ‘தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்கள் பலன் பெறவில்லை என்பதற்கான ஆதாரங்களை அவர்கள் அளிக்கவேண்டும்’ ( ஜூ.வி, 23.3.08). ‘பின்னடைவு பணியிடங்களை நிரப்பியிருந்தாலே அருந்ததியர்கள் பின்தங்கியிருக்கமாட்டார்கள்’ என்பதிலேயே அவர்கள் பின்தங்கியிருப்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். ஆனால், அருந்ததியர் ‘தாங்கள் பின் தங்கியிருப்பதற்கான ஆதாரங்களை அளிக்கவேண்டும்’ என்று, பின்தங்கவில்லை என்பது போல் பேசுகிறார். இதில் எது சரி?எப்படியும் தமிழரசனோ கிருஷ்ணசாமியோ திருமாவளவனோ தலித்துகள் அனைவருக்கும் கல்வியும் வேலையும் கொடுங்கள் என்று கேட்கத் தயாராக இல்லை. இருக்கிற சொற்ப வேலைவாய்ப்புகளை ‘தங்களவர்களில்’ சிலர் அனுபவித்தால் போதும் என முடிவு செய்துவிட்டனர் போலும்.பொன் செய்யும் மருந்தோ?இருக்கிற வேலைவாய்ப்புகளையும் பறித்துக் கொண்டிருக்கிற உலகமயத்தை எதிர்த்துப் போராடுவதில்லை. பெரும்பாலும் நிலமற்றவர்களாக இருக்கும் தலித்துகளுக்கு நிலம் கிடைக்க நிலச்சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற ஆக முக்கியமான கோரிக்கைக்காக போரடவும் இவர்கள் தயாராக இல்லை. அருந்ததியர் என்றில்லை, ஒடுக்கப்பட்ட எந்த மக்கள் பிரிவினரானாலும் அவர்கள் கல்வி, வேலை மட்டுமின்றி தொழில், வர்த்தகத் துறைகளிலும் முன்னேற ஆவண செய்ய வேண்டும் என்பதில் எவருக்கும் இரண்டு கருத்து இருக்கக்கூடாது. ஆனால், இட ஒதுக்கீடு செய்யப்படும் பொழுது அதை எதிர்த்து, தொழில் வர்த்தகத்தில் முன்னேற மட்டும் வழி செய்யுங்கள் போதும் என்பது கயமைத்தனமாகவே கருதப்படும். இடஒதுக்கீடு மட்டும் போதாது, கூடவே இவற்றையும் செய்ய வேண்டும் என்று சொன்னால் அது நியாயம்.‘சமூக அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் ஒரே சமூகமாகத்தான் கருதப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறது. அதற்கு எதிராகத் தான் உள்ஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு அமைந்திருக்கிறது’ என்றும் தமிழரசன் கூறியிருக்கிறார். தலித்துகளுக்குள்ளேயே ஒடுக்குபவர்களும், ஒடுக்கப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படியானால் அது எப்படி ஒரே சமூகமாகக் கருதப்பட முடியும்? இதே வாதத்தை இந்துத்துவவாதிகள் தலித், பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பயன்படுத்த முடியுமே? பயன்படுத்துகிறார்களே? இப்படி ஆதிக்கசாதிகளின் வாதங்களையே பயன்படுத்துகிறார்களே தலித் தலைவர்கள், மேல்நிலையாக்கம் அடைந்துவிட்டார்களா என்ன?‘தாழ்த்தப்பட்டோர் அட்டவணையில் சாதிகளைச் சேர்க்க அரசியல் சாசனப்படி மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அப்படியானால், அந்த பட்டியலைப் பிரிக்க எப்படி அரசுக்கு அதிகாரம் இருக்கமுடியும்? ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் அருந்ததியர் போல் அங்கே இருக்கும் ‘மாதிகா’ வகுப்பினருக்கு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்தார். எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்ற ‘பெஞ்ச்’ இது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று 2004 நவம்பரில் தீர்ப்பளித்தது. இதற்கு முன்பே ராஜஸ்தானில் இப்படியொரு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த தீர்ப்பால் ராஜஸ்தானும் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது. இதெல்லாம் முதல்வருக்குத் தெரியாதா? அருந்ததியர்ளை ஏமாற்றவும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரித்தாளவும் போடப்பட்ட திட்டம் தான் இது’ என்பது தமிழரசனின் மற்றொரு கருத்து.முதலில், அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு கோரிக்கை இப்போது திடீரென உருவானதில்லை என்பதையும், சுமார் கால்நூற்றாண்டு காலமாக ‘கனிஞ்சு கனிஞ்சு உருவாச்சு’ என்பதையும், 18.11.94ல் கோவையில் நடந்த ஒரு விவாத அரங்கில் அருந்ததியர் தலைவர் அதியமான் உள்ஒதுக்கீடு கோரிக்கையை எழுப்பியிருக்கிறார் என்பதையும் தமிழரசன் தெரிந்து கொள்ள வேண்டும். (பார்க்க: ஆதவன் தீட்சண்யா, ‘நான் ஒரு மநு விரோதன்’) ஏற்கனவே தெரிந்திருந்தால் அதை இப்படி மறைத்துப் பேசக் கூடாது. எனவே, இது பிரித்தாளும் சூழ்ச்சி என்ற வாதம் செல்லாது.அடுத்து, நீதிமன்றங்கள் பொதுவாகவே இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பல தீர்ப்புகள் வழங்கியிருக்கின்றன. அதற்காக இடஒதுக்கீடு கோரிக்கையை யாரும் கைவிட்டுவிடவில்லை. ஒரு வேளை, நீதிமன்றம் ‘பட்டியலைப் பிரிக்க’ மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று தீர்ப்பு வழங்கினால் அப்போது எல்லோரும் அதை எதிர்த்துப் போராடவேண்டும். அதைத் தான் தலித் தலைவர்கள் சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து உள் நோக்கம் கற்பிப்பது அவர்களது உள் நோக்கம் குறித்து எழும்பியிருக்கும் சந்தேகங்களை உண்மையாக்குகிறது.*‘அவர்கள்(அருந்ததியர்) சில அரசியல் கட்சிகளின் கைப்பாவையாக இருந்துகொண்டு, ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு குந்தகம் விளைவிக்கிறார்கள்’ - கிருஷ்ணசாமி (ஜூ.வி.23.3.08). ஏற்கனவே, மூன்று லட்சம் பின்னடைவுப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. வெறும் ‘2.35% இட ஒதுக்கீடு வழங்க வேண்டி வரலாம்’ என்றுதான் முதல்வர் கூறியிருக்கிறார். அது எப்படி தலித்துகளின் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டிற்கு பாதகமாகும்?விஷயம் என்னவெனில், அருந்ததியர் பிரச்னையை தாங்கள் இத்தனைநாள் கண்டுகொள்ளாதிருந்ததை அம்பலப்படுத்திவிட்டனர் என்ற ஆத்திரத்தில் பிதற்றுகிறார்கள். இதன் மூலம், கண்டுகொள்ளாமலிருந்தது எதேச்சையானதல்ல என்பதையும் அவர்களே அம்பலப்படுத்திக் கொண்டனர்.தலித்தல்லாத பிற சாதித் தலைவர்களுடன் பழக முடிகிற, அவர்களது குறைகளையும், குற்றங்களையும் சகித்துக் கொள்ள முடிகிற தலித் தலைவர்களால் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கையை சகித்துக் கொள்ள முடியவில்லை! தங்களை ஒடுக்குகிறவர்களை சகித்துக் கொள்ள முடிகிற இவர்களால், தங்களால் ஒடுக்கப்படுகிறவர்கள் பலன் பெறுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை. பலனடைந்து முன்னேறி விட்டால் ஒடுக்க முடியாது என்பதாலா? ஆம் என்பதே பதில்.ஏனெனில், தீண்டாமை என்பது பலரும் இப்போது பொதுவாகக் கருதுவதுபோல 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பது அல்ல, அது இடையிலே வந்தது என்றும், தாங்கள் எப்போதுமே தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டதில்லை என்றும், 11, 12ம் நூற்றாண்டுகளில் சோழர் ஆட்சிகாலத்தில்தான் அப்படி ஆக்கப்பட்டுவிட்டோம் என்றும், அதற்கு முன்னர் தாங்கள் உயர்ந்தவர்களாக இருந்தோம் என்றும், தோற்கடிக்கப்பட்ட புத்த மதத்தினரே தலித்துகளாக தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், எஸ்.விஸ்வநாதனின் என்ற நூலுக்கான முன்னுரையில் வாதிடுகிறார்.தன்னுடைய சாதியினர் முன்னர் பிற மேல்சாதியினரால் தாழ்த்தப்பட்டவர்களாகவோ, தீண்டத்தகாதவர்களாகவோ கருதப்படவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் கொடுத்து விளக்குகிற ரவிக்குமார் தேவேந்திரகுல வேளாளர் குறித்தும், அருந்ததியர் குறித்தும் கூற தலா ஒரு பாரா மட்டுமே ஒதுக்குகிறார். போகட்டும்.தேவேந்திர குல வேளாளர்கள் தங்களை இந்திரன் வழி வந்தவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். பல்லவ மன்னர் பரம்பரையினர் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. எனினும், அவர்களும் புத்த மதத்தினரே என்பதை, புத்த மடாலயங்கள் ‘இந்திர விகார்’ என அழைக்கப்பட்டது உள்ளிட்ட பல தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அயோத்திதாசர் விளக்குவதை மேற்கோள் காட்டுகிறார். அருந்ததியர்கள் தங்களுக்கு சக்கிலியர்கள் என்று பெயர் வைத்தது நாயக்க மன்னர்கள்தான் எனக் கூறுகின்றனர். தாங்களும் தமிழர்களே என்கிறார்கள். சாக்கிய அல்லது சாக்ய என்பதே சக்கிலியர் என திரிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் கடந்த காலத்தில் புத்த மதத்தினர்தான் என்கிறார். (தலித்துகள் அனைவரும் புத்த மத்ததினர்தான் என்று ரவிக்குமார் கூறியபோதும் நடைமுறையில் அவரது சாதியினர் தலித்துகளுக்கிடையில் ஏற்றதாழ்வு பாராட்டுகிறார்கள் என்பதை நினைவூட்டுகிறோம்).நல்லது. இவ்விஷயத்தில் நம்முடைய கேள்வி இதுதான். தங்களுடைய கடந்த கால வரலாற்று நிலையை எடுத்துக் கூறி தாங்கள் மன்னர் பரம்பரை என்பதோ, தாங்கள் சாதியம் கூறுவது போல இழிவானவர்களில்லை என்பதோ- உயர்வு, தாழ்வு அல்லது மேன்மை, இழிவு குறித்து பார்ப்பனீயம் வகுத்திருக்கும் விழுமியங்களை ஏற்றுக் கொள்வது ஆகாதா? அதுவே பார்ப்பனீயமும் ஆகாதா?அப்படி ஏற்றுக் கொள்வதால்தான் அருந்ததியரை ஆதிதிராவிடரும், தேவேந்திர குல வேளாளரும் இழிவானவர்களாகக் கருதுகிறார்கள். அவர்கள் உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கு இதுவும் முக்கிய காரணம்