தலித் மக்கள் மீது காவல்துறை பாதுகாப்புடன் நிகழ்த்தப்பட்ட அராஜகம்!



__10
சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் கண்ணப்பர் திடலில் தலித் மக்களின் குடியிறுப்பு பகுதிகள் சதி திட்டத்தால் தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் சென்னை நகரில் மட்டும் கேசவன் பூங்காவில் 300 குடிசைகள், சென்னை வண்ணாரப்பேட்டையில் 850 குடிசைகள், சென்னை கண்ணப்பர் திடலில் 680 குடிசைகள் தீ விபத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. (சேலம் வாழப்பாடியிலும் அருந்ததியர் குடியிருப்புகள் தீ விபத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வெளியில் தெரியாத சம்பவங்கள் கணக்கில் இல்லை)

இந்நிலையிலேயே சென்னை கண்ணப்பர் திடலில் உள்ள 'திடீர் நகர்' பகுதியில் 650 குடிசைகள் சதி திட்டத்தால் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் நமக்கு கிடைத்தது. நமது தோழர் ஒருவர் உண்மையை அறியும் பொருட்டு பாதிக்கப்பட்ட மக்கள் குடியிறுப்பு பகுதிக்கு சென்று மக்களிடம் தகவல்களை சேகரித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் நம்மிடம் நடந்த சம்பவங்களை விளக்கினார்:

"17 வருஷங்களா இங்க இருக்கோம். இதுவரை யாரும் வந்து எங்களை பயமுறுத்தியது கிடையாது. ரெண்டு வாரத்துக்கு முன்ன (07.07.2011) தீயணைப்பு துறையை சார்த்த இரண்டு பேர் வந்து, 'இதுக்குள்ள நீங்க இருக்காதிங்கமா. உங்க கிட்ட இன்னா இன்னா அத்தாட்சி இருக்கிறதோ எல்லாத்தையும் எடுத்துக்கோங்க'ன்னு சொன்னாரு. 'எதுக்கு சார் இதையெல்லாம் எங்க கிட்ட சொல்றிங்கோ'ன்னு கேட்டேன். 'இல்ல இந்த இடத்தை பத்தவைக்க போறாங்க'ன்னு சொல்லிட்டு இரண்டு பேரும் போயிட்டாங்க.

அப்பறம் அன்னிக்கே போலிசுக்கு போய் விவரத்தை சொன்னோம். அவங்க நம்பல. எதுக்கும் நாங்க புகார் கொடுக்கறோம்னு சொன்னோம். உடனே போலிசுக்காரங்க, 'யாராவது வதந்தியா பேசறதை எல்லாம் நம்பி பிராது குடுக்காதிங்கன்னு' எங்களை திட்டினாங்க. இருந்தாலும் நாங்க கம்ளைண்ட் கொடுக்கறோம்னு சொன்னோம். அப்பவும் அவங்க ஏத்துக்கல.

எங்க ஜனங்க தொடர்ந்து புகார் கொடுக்கப் போறோம்முன்னு வலியுறுத்தியதால உதவி ஆணையர் (AC), போலிஸ்காரங்களோடு (G2 police station - காவல் நிலையம், பெரியமேடு) எங்க இடத்துக்கு விசாரிக்கிறதா சொல்லிட்டு வந்தாங்க.

உதவி ஆணையர் (AC) எங்களுக்கு முன்னாடியே தீயணைப்பு நிர்வாகத்துக்கு போன் செய்து, 'யாரு வந்து எச்சரிக்கை செய்தாங்க'ன்னு விசாரிச்சாங்க. 'சாப்பாடு செய்திட்டிருந்த போது நெருப்பு கூரையில் பத்திக்கப் போவுதுன்னுதான் சொல்லிருக்காங்க'ன்னு ஏதோ சொல்லி சமாளிச்சிட்டாங்க. உடனே போலிஸ்காரங்க யாரோ பொய் சொல்லி இருக்காங்க போல. உங்களுக்கு எதுவும் நடக்காது. நாங்க பார்த்துக்கறோம்னு சமாதானம் சொல்லிட்டு போயிட்டாங்க.

ஆனால் தீயணைப்பு வீரர் வந்து சென்ற 5வது நாள் (12.07.2011 காலை 11.00 மணியளவில்) பக்கத்துல இருந்த 160 குடிசைங்க பத்திக்கிச்சி. ஒண்ணுமே செய்ய முடியல. வீட்டுல இருந்த பெரியவங்க எல்லாரும் வேலைக்கு போன நேரம். இந்தப்பக்கமா இருந்த சில பசங்க வீட்டுகிட்ட இருக்கிற குட்டையில இருந்து தண்ணீ எடுத்துட்டுவந்து ஊத்தினாங்க. தீயணைப்பு நிர்வாகத்துக்கும் போன் செய்து சொன்னோம். அவங்க லேட்டா வந்தாங்க. சின்ன சந்தா இருக்கிறதால வண்டி உள்ள வரமுடியலைன்னு வெளியேவே நின்னுட்டாங்க. தீ பரவாமல் நாங்க தண்ணி அடிச்சி நிறுத்திட்டோம். இருந்தாலும் 130 குடிசைங்க முழுதும் எரிஞ்சு போச்சு.

நாங்க தீயணைப்பு ஆளுங்க வந்து சொன்ன மாதிரியே நெருப்பு புடிச்சிக்குச்சேன்னு தீ விபத்து நடந்த அன்றே (12.07.2011) போலிசுக்கு போய் முறையீடு பண்ணோம். உடனே காவல்துறையினர் எங்க பக்கத்துக்கு வந்து விசாரணை பண்ணாங்க. அப்ப தே.மு.க எம்.எல்.ஏ நல்லதம்பியும் வந்திருந்தாரு. அவரு போலிஸ்காரங்களிடம், 'யாரு நெருப்பு வச்சதுன்னு விசாரணை பண்ணுங்க'ன்னு கண்டிக்கிற மாதிரி சொசொல்லிட்டு போய்டாரு.

யாரும் எங்களோட பிரச்சனையின் தீவிரத்தை உணரல. அதனால அடுத்த நாள் (13.07.2011) சைடஹாம்ஸ் சாலையில் (மூர்மார்க்கட்) பகல் 12 மணிக்கு மறியல் பண்ணோம். போலிசுங்க வந்து எங்களை சமாதானப்படுத்தினாங்க. 'மறியல் பண்ணாதிங்க. நாங்க நடவடிக்கை எடுக்கறோம்'னு சொன்னாங்க. நாங்க அசரல. அப்பறம் மாநகர ஆட்சியாளரு வந்தாரு. அரசு நிவாரணத்திற்கு ஏற்பாடு பண்றதா சொன்னாரு.

நாங்க என்ன ஏற்பாடு பண்ணுவீங்கன்னு கேட்டோம். அரிசி, பருப்பு, துணி, பணத்துக்கு ஏற்பாடு செய்யறேன்னு சொன்னாரு. அதை வச்சிக்கிட்டு என்ன பண்றது? நாளு நாள் சாப்பிட முடியும். அப்பறம் என்ன செய்யறது. எங்க குடிசையெல்லாம் எரிஞ்சு நாசமா போச்சு. திரும்பவும் குடியிருப்பு பகுதிங்கள புதுப்பிச்சி கொடுங்கன்னு சொன்னோம். அதுக்கு அவரு 12 வருடங்களாக அந்த இடத்தில் நீங்கள் வாழ்ந்து இருந்தா குடியிறுப்பு பட்டா வாங்கி தருவதாக சொன்னாரு. நாங்க 'ஓட்டு உரிமைரேஷன் அட்டை 17 வருடங்கள் தங்கிருந்ததற்கான சான்றிதழ்கள் இருக்கிறது' என்று சொன்னோம்.

அதற்கு மாநகர ஆட்சியாளரு 'அத்தாட்சி பத்திரம் எடுத்துட்டு வந்து கொடுங்கள். குடியிறுப்பு பட்டாவுக்கு ஏற்பாடு பண்றேன். இப்ப மறியல் செய்யாதிங்க' என்று கேட்டுக் கொண்டார். நாங்களும் மறியல் செய்வதை நிறுத்திவிட்டு எங்க பகுதிக்கு வந்துட்டோம். அங்க போலிஸ் பாதுகாப்பும் போட்டிருந்தாங்க. அன்னிக்கு ராத்திரி முழுவதும் தூக்கம் இல்ல. பக்கத்துல இருக்கிற குளத்துல நிறைய பாம்புங்க இருக்கும். எங்க புள்ள குட்டிங்கள கொத்திடப் போவுதோன்னு விழிச்சிட்டு இருந்தோம்.

அடுத்த நாளு (14.07.2011) இரண்டாவது பகுதியில் ராத்திரி 1 மணிக்கு குடிசைகளுக்கு யாரோ தீ வச்சிட்டாங்க. பிள்ளைங்கல தூக்கிட்டு எல்லாரும் வெளியே வந்துட்டோம். அப்பவும் அங்க போலிசு இருந்தாங்க. நாங்க தீயணைக்க முயற்சி பண்ணோம். போலிசு சுத்தி வளைச்சி வச்சிக்கிட்டு யாரையும் உள்ளே விடல. இவங்க எங்க பாதுகாப்புக்கு வரல. நெருப்பு வச்சவனுக்கு பாதுகாப்பா இருக்கத்தான் வந்திருக்காங்கன்னு அப்பதான் புரிஞ்சுது.

எங்க சனங்க போலிசை பார்த்து கதறி அழுதாங்க. எங்களை உள்ளே போகவிடாமல் எங்க வீட்டையெல்லாம் எரிச்சி நாசம் பண்ண வச்சிட்டிங்களேன்னு கேட்டாங்க. போலிஸ்காரங்க பதிலுக்கு எங்கள திட்டினாங்க. பெரியமேடு சப் இன்ஸ்பெக்டர் (G2 police station - காவல் நிலையம், பெரியமேடு) எங்களை பார்த்து 'பறைச்சி'களுக்கு பங்களா கேட்குதான்னு ஏதேதோ கேவலமா பேசி திட்டினார்.

என்னய்யா பண்ணுவோம். 17 வருஷமா நாங்க வாழ்ந்த இடங்கையா இது. எங்க கண்ணு முன்னாலே எல்லாத்தையும் எரிச்சு நாசம் பண்ணிட்டாங்கையா. 650 குடிசைங்க முழுசும் எரிஞ்சு போச்சு. எல்லாரும் சேர்ந்து சதி பண்ணிட்டாங்கையா. இன்னும் 70 குடிசைங்க எரியாமல் இருக்கு. அதையும் சீக்கிரத்துல எரிச்சுடுவாங்க. எங்களுக்கு கேட்க நாதியில்லைன்னு இந்த அரசாங்கம் எங்களை என்ன பாடுபடுத்துன்னு பாருங்கையா.

பொடிசு, பொட்டுமா சின்ன புள்ளைங்களையெல்லாம் வச்சிட்டிருக்கோம் நாங்க. வேற எங்கையா போறது? 10 நாளுக்கு மேல போயிடுச்சி. இங்கத்தான் உறங்கறோம். இங்கதான் இன்னும் வாழறோம். ஆனா எந்த கட்சிக்காரங்களும் எங்களுக்கு உதவ வரலைங்க...."

கதறியபடியும், அரசு மீது அதிருப்தியாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவங்கள் முழுவதையும் நமக்கு தெரிவித்தார்கள்.

நாம் பாதிக்கப்பட்ட தலித் மக்களின் சார்பாக தமிழக அரசுக்கு சில கேள்விகள் :

1. 07.07.2011 - அன்று தீயணைப்பு துறையைச் சார்ந்த இரண்டு ஊழியர்கள் தீ வைக்கப்போகும் தகவல்களை முன்பேயே பொதுமக்களிடம் தெரிவித்திருக்கின்றனர். அன்றே அப்பகுதி மக்கள் G2 police station - காவல் நிலையம், பெரியமேடு சென்று புகார் கொடுக்க முயன்று அலட்சியப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

2. 12.07.2011 அன்று காலை 11.00 மணியளவில் அப்பகுதியில் 160 குடிசைகள் எரிக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன.

3. 14.07.2011 அன்று இரண்டாவது பகுதியில் இரவு 1 மணிக்கு தீ வைக்கப்பட்டு 650 குடிசைகள் முற்றாக எரிக்கப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்படாமல் இருக்கும் இன்னும் 70 குடிசைகளும் விரைவில் எரிக்கப்படலாம் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

---> மேற்காட்டப்பட்ட சம்பவங்கள் மூலம் தலித் மக்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தோடு குடியிறுப்பு பகுதிகளுக்கு தீ வைக்கப்பட்ட சதிக்கு தமிழக அரசு உடந்தையாக இருக்கிறதா?

---> பெரியமேடு சப் இன்ஸ்பெக்டர் (G2 police station - காவல் நிலையம், தலித் மக்களை 'பறைச்சி' என்று இழிவுபடுத்தும் வாசகங்களால் கடுஞ்சொற்களை உபயோகித்திருக்கிறார். அரசு ஊழியர் ஒருவர் பொதுமக்களை ஜாதி பெயர் குறிப்பிட்டு இழிவுபடுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்னும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

---> புறநகர் பகுதிகளில் 5 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவருக்கு குடியிருப்பு உரிமை (பட்டா) வழங்கப்படும் என்று ஜெயலலிதா முன்பு முதல்வராக இருந்தபோது அறிவித்திருந்தார். அதன் பின் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது 3 வருடங்கள் இருந்தால் போதும். குடியிருக்கு உரிமை (பட்டா) வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்து சட்டமாக்கப்பட்டிருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியாளர் 12 ஆண்டுகாலம் என்று குடியிறுப்பு உரிமை குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் தவறாக தகவல் தருவதன் உள்நோக்கம் என்ன?

---> இன்னமும் பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் இருந்து எங்களை அப்புறப்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். எங்களுக்கு புழுத்துப் போன 2 கிலோ அரிசியும், பணமும், துணியும் வேண்டாம். இந்த அரசாங்கம்தான் எங்கள் குடியிறுப்பு பகுதிகளை சதி செய்து அழித்தது. அதனால் எங்கள் குடியிறுப்பு பகுதிகளை புதுப்பித்து தந்தால் போதும் என்கிறார்கள்.

தமிழக அரசு என்ன சொல்லப் போகிறது? அநீதி இழைத்த மக்களுக்காக என்ன செய்யப் போகிறது?