சக்கிலியனாப் பொறந்தா பீ திங்கணுமா?



04_2005.jpg"எம் பேரு கண்ணன். எங்கப்பா செருப்பு தைக்கிறவரு. சீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி காலனியிலதான் எங்க வீடு இருக்கு. எங்கூடப் பொறந்தவங்க ஆறு பேரு. வீட்டுல ரொம்ப கஷ்டம். அதனால, ராஜஸ்தானுல கோட்டாங்கிற டவுனுல குமான்புரா தெருவுல இருக்குற சீவில்லிபுத்தூர்காரர் வெள்ளைச்சாமியோட கடலமிட்டாய் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். என்னோட எங்க காலனியில இருக்குற முனியாண்டியும் வீரய்யாவும் வேலைக்கு வந்தாங்க.

 மூணு வேளை சோறு போட்டு வருசத்து 7000 ரூபா தர்றதா சொன்னாங்க. ஆனா அங்க தண்ணி கூட எங்கள குடிக்க விடல. தண்ணி குடிச்சா அடிக்கடி ஒண்ணுக்கு போவோம், அதனால வேல கெட்டுப் போகும்னாங்க. எங்கள கஷ்டமான வேலையெல்லாம் செய்யச் சொன்னாங்க. முடியலன்னா போட்டு அடிப்பாங்க. ரெண்டு நேரம் பழைய கஞ்சித் தண்ணிதான் ஆகாரம். அங்கெல்லாம் சனங்க மாட்டுக்கு ரொட்டி குடுக்கறாங்க. அதுகூட எங்களுக்கு இல்ல. விடியற நேரம் மூணுலேர்ந்து நாலு மணி வரைக்கும்தான் தூங்க விடுவாங்க. சரியா வேலை செய்யலைன்னு என்ன கயித்துல கட்டி நெருப்பு வைச்சு கொளுத்தப் பார்த்தாங்க. நான் பயந்து அலறுனேன்.

 ரெண்டு மாசத்துக்கு முந்தி, எனக்கு அவசரமாக கக்கூசு போகணும்னு சொன்னப்ப, என்னப் போட்டு அடிச்சாங்க. எனக்கு அவசரமா இருந்ததால கக்கூசுக்கு ஓடப் பார்த்தேன். என்னைப் புடிச்சி அடிச்சி சங்கிலியால கட்டிப் போட்டாங்க. என்னால தாங்க முடியாம அங்கேயே கழிஞ்சிட்டேன். அதனால வெள்ளச்சாமியும் அவரு மகனும் சேர்ந்துகிட்டு என்னய அடிச்சி, ஒரு கப்புல மூத்திரத்தப் பிடிச்சு என்னக் குடிக்க வெச்சாங்க. என்னய போட்டு மிதிச்சு நான் கழிச்ச மலத்தையே என்னையே திங்க வெச்சாங்க. சக்கிலியன் பீ திங்குறது புதுசான்னாங்க.

 அதுக்கு மேல என்னால தாங்க முடியல. அடுத்த நாளு நான் தப்பி ஓடப் பார்த்தேன். தெருவுல ஓட ஓட விரட்டி என்ன உருட்டுக் கட்டையால அடிச்சான் வெள்ளச்சாமி. ரத்த வெள்ளத்துல நான் மயங்கிக் கெடக்குறதப் பார்த்த உள்ளூரு சனங்க, போலீசுல புகார் குடுத்தாட்டாங்க. நெலமையப் புரிஞ்சிகிட்ட வெள்ளச்சாமி ஆளுங்க எங்கமூணு பேரையும் ரயிலேத்தி எங்க ஊரு சக்கிலித் தெருவாண்ட விட்டுட்டு ஓடிட்டாங்க. எனக்கு நியாயம் கெடைக்கணும். நான் சக்கிலியனாப் பொறந்தது தப்பா? சக்கிலியனாப் பொறந்தா பீ திங்கணுமா?''

                                                                        ***

 அருந்ததியர் சாதியைச் சேர்ந்த இளம் சிறுவர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கொடூரமாக வதைத்ததோடு வன்கொடுமையையும் ஏவிய சாதிவெறி பிடித்த வெள்ளைச்சாமி வகையறாக்கள் இன்றுவரை கைது செய்யப்படவில்லை. தென் மாவட்டங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொத்தடிமைகளாக உழலும் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் நிலைமைக்கு இன்னுமொரு சாட்சியம்தான் இந்தக் கொடூரம். இக்கொத்தடிமைத்தனத்திற்கும் சாதிவெறி வன்கொடுமைக்கும் எதிராக 23.2.05 அன்று அருந்ததியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருவில்லிபுத்தூர் காமராசர் சிலை அருகில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தகவல் : நந்தன், திருவில்லிபுத்தூர்.