சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 4
”பிற்பட்டோர் மற்றும் ஹரிஜனங்கள், பழங்குடியினர் ஆகிய இந்துக்களின்முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை வழங்கியுள்ளன.அவற்றைப் பிடுங்கி, மதம் மாறிப் போன முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்வழங்குவது முறைகேடும், அநீதியும் ஆகும். இதனால் இந்துக்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமை குறைகிறது. பறி போகிறது. ஆகவே இந்தச் சலுகைகளைஇந்துக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.”- ”மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்?”இந்து முன்னணி வெளியீடு, பக்கம் – 45.
இந்துக்களின் இட ஒதுக்கீட்டை முசுலீம்களும் கிறித்தவர்களும் பிடுங்கிக் கொள்வதாகக் கூறும் இந்த அவதூறே உண்மைக்கு மாறான ஒரு மோசடியாகும். இன்று வரையிலும் தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டில் மதம் மாறியவர்களுக்கு இடமில்லை. தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களை, பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீட்டில்தான் சேர்த்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட முசுலீம் மக்களுக்கு எதிலும் இடஒதுக்கீடு கிடையாது. ஒரு சில மாநிலங்களில் ஒரு சில முசுலீம் சாதிகளை மட்டும் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். மொத்தத்தில் மதம் மாறுகின்ற முசுலீம், கிறித்தவ மக்கள், இடஒதுக்கீட்டுச் சலுகையை இழக்கிறார்கள் என்பதே உண்மை.
அடுத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் அனைவருமே வரலாற்று ரீதியாக ‘இந்துக்களாக’ இருந்தது கிடையாது. ‘சதுர்வர்ணம்’ எனும் பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திர – வர்ண சமூக அமைப்பிலேயே பஞ்சமர்கள் இடம் பெறவில்லை. ஆங்கிலேயர் காலத்தில், அதுவும் முதல் சென்சஸ் கணக்கெடுப்பின் போதுதான் இம்மக்கள் இந்து மத்திற்குள் சேர்க்கப்பட்டனர். மேலும் பார்ப்பன இந்து மதத்தின் சமூகக் கொடுமைகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் எழுச்சியான போராட்டங்களும் வெள்ளையர் காலத்தில்தான் துவங்கின. இடஒதுக்கீடு கோரிக்கை பிறந்து பின்னர் அமலாக்கப்பட்டதின் அடிப்படை இதுதான்.
இத்தகைய இடஒதுக்கீடும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் சமூக விடுதலைக்காகத் தரப்பட்டதல்ல; மண்டல் கமிசன் குறிப்பிடுவதைப் போல உளவியல் ரீதியில் சற்று ஆறுதலைத் தருவதற்குத்தான். எனினும் இடஒதுக்கீடு என்ற சொல்லே சமூக வாழ்க்கையில் இடமில்லாமல் போன உழைக்கும் மக்களின் அவலத்தை அதாவது பார்ப்பன இந்து மதத்தின் கொடுமையைத்தான் குறிக்கின்றது. ஆதலால் இடஒதுக்கீடு பற்றிப் பேசுவதற்குக் கூட இந்து மதவெறியர்களுக்கு அருகதை கிடையாது. சாட்டையில் ரத்தம் தெறிக்க அடிப்பவனே புண்ணுக்கான மருந்தை சிபாரிசு செய்ய முடியாதல்லவா?
ஆங்கிலேயர் வருவதற்கு முன் உழைக்கும் மக்களை இந்து மதத்திற்கு வெளியே வைத்து ஆதிக்கம் செய்தார்கள். ஆங்கிலேயர் வந்தபின் இந்து மதத்திற்குள்ளே அடைத்து ஆதிக்கம் செய்ய விரும்புகிறார்கள் – அதுவும் முசுலீம் எதிர்ப்பு அடையாளத்தோடு. அதனால்தான் இந்து மதத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதியினர் பெற்ற இடஒதுக்கீட்டை முசுலீம் கிறித்தவ மதங்கள் தட்டிச் செல்கின்றன என்று அவதூறு செய்கின்றனர். இன்னொருபுறம் இடஒதுக்கீடே கூடாது என்பதும், இடஒதுக்கீட்டை எதிர்த்து வட இந்திய மேல்சாதியினர் நடத்தும் கலவரங்களை முன்னின்று நடத்துவதும் இவர்கள்தான்.
எனவே தாழ்த்தப்பட்டோரைத் தாழ்த்தியதும், பிற்படுத்தப்பட்டோரை பின்தங்க வைத்ததும் முசுலீம்களோ, கிறித்தவர்களோ அல்ல என்பதற்கு விரிவான அகழ்வாராய்ச்சி தேவையில்லை. அதேபோல மதமாற்றம் என்பது அல்லா – இயேசுவின் மேல் கொண்ட அன்பினால் அல்ல, பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடவே நடந்தது என்பதையும் விளக்கத் தேவையில்லை.
அடுத்து மதமாற்றத்தையும், இட ஒதுக்கீட்டையும் இணைத்து இந்துமத வெறியர்கள் கவலைப்படும் மோசடியைப் பார்போம். பணம், பால் பவுடர், வளைகுடா வேலை என்று பொருள் உலக ஆசை காட்டி மதம் மாற்றப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-இன் நீண்டநாள் கோரிக்கை. ஆனால், இடஒதுக்கீடு என்ற பொருள் உலக ஆசையைக் காட்டி இந்து மதத்தில் இருங்கள், மதம் மாறாதீர்கள் என்று கேட்பது மட்டும் ‘லவுகீக’ விசயமில்லையா? அதிலும் கவனியுங்கள், ”இந்து மதத்தின் சாதி – தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்து உங்களுக்கு விடுதலை தருகின்றோம். மதம் மாறாதீர்கள்” என்று அவர்கள் கோரவில்லை. இங்கேயே (அடிமையாக) இருங்கள், அப்போதுதான் இடஒதுக்கீடு சலுகைகள் தரமுடியும் என்று மிரட்டுகிறார்கள். இப்படி ஆன்மீகத்தினால் அல்ல பொருளாசையைக் காட்டித்தான், சமாதானத்தினால் அல்ல கிரிமினல் மிரட்டல்கள் மூலமாகத்தான் இந்துமதம் வாழ்கிறது என்பது அதன் யோக்கியதைக்கு ஒரு சான்று.
இருந்த போதிலும் இந்து மதத்திலிருந்து மதம் மாறிவிடுவதால் மட்டும் சாதிய இழிவுகள் போய் விடாது என்பதும் உண்மைதான். பணவசதி இருந்தும் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள் மேல்சாதித் தெருவில் குடியிருக்க முடியாது. அவர்கள் செய்துவரும் அடிமைத் தொழிலும் பெரிதாக மாறிவிடவில்லை. மதம் மாறியதால் கிடைக்க வேண்டிய சமத்துவம் கேவலம் சுடுகாட்டில் கூட கிடைக்கவில்லை. திருச்சி கிறித்தவ இடுகாடு அதற்கோர் உதாரணம். கலப்புத் திருமணம் செய்வதால் கட்டி வைத்து அடிக்கப்படுவதும் நிற்கவில்லை. முசுலீம்கள் வாழும் அரியானாவின் சுதாக்கா கிராமம் அதற்கோர் உதாரணம். சாதிகள் எங்களிடம் இல்லை என்று தம் மதங்களின் புனிதக் கதைகளைப் பேசிவரும் இசுலாமும், கிறித்தவமும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
ஆங்கிலேயர்கள் போகும்வரை தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், 1950-இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்து மதமல்லாத ஏனைய மதங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என மாற்றப்பட்டது. அதன்பின் 1956, 1990-ஆம் ஆண்டுகளில் முறையே சீக்கிய, புத்த மதங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தரவேண்டும் என அதே சட்டம் திருத்தப்பட்டது. காரணம் மதம் மாறுவதினால் அம்மக்களுக்கு சமூக, பொருளாதார முன்னேற்றம் கிடைத்து விடவில்லை என்பதால் இத்திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள். எனில் இந்த உண்மை தாழ்த்தப்பட்ட கிறித்தவ – இசுலாமிய மக்களுக்கும் பொருந்தும்.
பார்ப்பனியத்தின் ஆன்மாவான சாதி – தீண்டாமையால் நலிவுற்றுத் திணறும் இந்தியச் சமூகத்தில், எந்த மதமும் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. எனவே, அந்த ‘ஆன்மா’ ஒழிக்கப்படும்வரை தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்கள் எந்த மதத்திற்கு மாறினாலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு – மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்கிறோம்.
thanks to vinavu
thanks to vinavu