ப.வேலூர்: ப.வேலூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனினும், வறுமை காரணமாக கல்லூரியில் சேர இயலாமல் இருந்த அம்மாணவிக்கு கிராம மக்கள், உடன் பயின்ற மாணவ, மாணவியர் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உதவி செய்வது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் கந்தன் நகர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன். அவர், சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வெட்டியான் வேலை செய்வது வருகிறார். ராணி என்ற மனைவி, காயத்திரி (17) என்ற மகள், சிவமாசனம், சிவராமன் என இரு மகன்கள் உள்ளனர். காயத்திரி இந்தாண்டு ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 1,142 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவியின் மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் 197.25. சில தினங்களுக்கு முன் நடந்த மருத்துவ படிப்புக்கான கவுன்சலிங்கில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் காயத்திரிக்கு இடம் கிடைத்துள்ளது. இம்மாதம் 14ம் தேதி கல்லூரியில் சேருவதற்கான அழைப்புக் கடிதமும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது மாணவி காயத்திரி குடும்பத்தினரை மட்டுமின்றி அக்கிராம மக்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. கூலி வேலை செய்து அன்பழகன் பிழைப்பு நடத்தி வருவதால், கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கு கட்டவேண்டிய தொகை 8,500 ரூபாய் மற்றும் போக்குவரத்து செலவுக்கும் அவரிடம் பணம் இல்லை. அதையறிந்த அக்கிராம மக்கள் மற்றும் மாணவி காயத்திரி உடன் பயின்ற சக மாணவ, மாணவியரின் பெற்றோர் மனமுவந்து நிதி உதவி செய்துள்ளனர். தவிர, கல்லூரியில் சேர்ந்து படிப்பத்தற்கான செலவுத் தொகைக்கும் கிராம மக்கள் ஏற்பாடு செய்து வருவது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
இது குறித்து மாணவி காயத்திரி தெரிவித்தாவது: ப.வேலூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தேன். அப்போது 473 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் இரண்டாம் இடம் பிடித்தேன். சிறு வயது முதல் டாக்டர் ஆக வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. எஸ்.எஸ்.எல்.ஸி.,யில் அதிக மதிப்பெண் பெற்றதால் ப.வேலூர் மலர் மெட்ரிக் பள்ளியினர், என்னை பள்ளியில் சேர்த்து, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக வழங்கினார். ப்ளஸ் 2 தேர்வில் 1,142 மதிப்பெண் பெற்றேன். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் செய்திருந்தேன். அதற்கான கட்-ஆப் 197.25 பெற்றதால், சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் இடம் கிடைத்துள்ளது. தாய், தந்தை கூலி வேலை செய்வதால், கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கு கூட பணம் இல்லை. அந்தத் தொகையை கிராம மக்கள், உடன் பயின்ற மாணவ, மாணவியரின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்து உதவினர். கல்லூரியில் படிக்கவும் கிராம மக்கள் உதவி செய்ய பணம் வழங்குகின்றனர். டாக்டரானவுடன் எனது கிராம மக்கள் மட்டுமன்றி ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பேன். எனது தந்தை 7ம் வகுப்பு வரை படித்துள்ளார். தாய் எதுவும் படிக்கவில்லை. எனினும் எனது படிப்பு ஆர்வத்தை கண்டு பெற்றோர் நன்கு ஊக்கம் அளித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.