இந்திய சமுதாயத்தை அழுத்தும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, தங்கள் தொழில்நுட்ப அறிவையும், அடிப்படை ஆராய்ச்சியையும், ஐஐடி என்று அழைக்கப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் இனி பயன்படுத்தும் என்று சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராகப் பதவியேற்றுள்ள முனைவர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறியுள்ளது வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.
÷இந்தப் பின்னணியில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இன்றைக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுமான இப்ராஹிம் கலிபுல்லா, சென்னை ஐஐடி பற்றி இரு ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டுப் பேசியதை இப்பொழுது மேற்கோள் காட்டுவது அவசியமாகிறது.
÷பாதாளச் சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கும், அவற்றின் பராமரிப்பில் மனிதர்களை ஈடுபடுத்தாமல், தகுந்த தொழில்நுட்பங்களையும் இயந்திரங்களையும் பயன்படுத்துவது பற்றியும், ஆலோசனை வழங்குவதற்காக உயர் நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழுவில் பங்கு பெறுமாறு இருமுறை அழைப்பு விடுத்தும் ஐஐடியின் சூழலியல் தொழில்நுட்பத்துறை சட்டை செய்யவில்லை.
இதனால் புண்பட்டுப்போன நீதிபதி, ஐஐடி ஒரு பளிங்கு மாளிகை, அதன் உச்சியில் இருக்கும் மெத்தப்படித்தவர்கள் கீழிறங்கி வர மறுக்கிறார்கள். சமுதாயமும், உயர் நீதிமன்றமும், ஐஐடியைப் பொறுத்தவரை, அவர்களது தகுதிக்கு மிகக் கீழே உள்ள இடங்கள், ஏதேனும் சுயலாபம் இருக்குமெனில், முன் வந்திருப்பார்கள். ஆகவே ஐஐடியிடம் நாம் பிச்சையெடுக்க வேண்டியதில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
÷2009-ம் ஆண்டு, ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பேசிய பொருளாதார மேதை பேராசிரியர் ஜகதீஷ் பகவதி, ஐஐடி, இனி ஏழ்மைக் குறைப்புக்கும், சமுதாயப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் தங்கள் அறிவையும், ஆராய்ச்சித் திறனையும் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததையும், ஐஐடியின் புதிய இயக்குநர் மறந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.
÷ஐஐடி மட்டுமல்ல, இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்களும், அரசுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்களும், மக்கள் வரிப்பணத்தில் சுகமாகக் காலம் கழிக்கும் வெள்ளை யானைகளாகவே அமைந்துவிட்டன என்று குற்றம் சாட்டினால், அதில் 80 விழுக்காடு உண்மை இருக்கிறது.
பல்வேறு விதமான அறிவியல் துறைகள், பொறியியல் துறைகள், மருத்துவம், வேளாண்மை, மீன்வளம், நீர்வளம், சுற்றுச்சூழல், கால்நடை, உணவு, தாதுவளம், சாலைகள், கட்டடக்கலை, பொருளாதாரம் உள்பட சமுதாயத்துக்கு வேண்டிய நூற்றுக்கணக்கான தேவைகளுக்கும் இந்தியாவில் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்புகளும், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
÷இங்கெல்லாம் பேராசிரியர்களும், விஞ்ஞானிகள் என்ற பணியில் இருப்போரும் நிரந்தரப் பணிப் பாதுகாப்புடனும், நல்ல வருவாய், வசதிகள், சலுகைகளுடனும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்களுக்குப் பயன்படும் உண்மையான ஆராய்ச்சிகளோ, தீராத தாகம் கொண்ட முனைப்புகளோ இல்லாமல், மேம்போக்கான செயல்பாடுகளே பெரும்பாலும் அங்கு நடைபெற்று வருகின்றன என்றால் மிகையில்லை. இவைகளால், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதா எனும் அடிப்படைக் கேள்விக்குத் தகுந்த பதில் இல்லை என்பது தான் கசப்பான செய்தி.
÷குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் இயக்குநராக இருந்த, பாதுகாப்பு ஆராய்ச்சி மையங்கள்கூட (டிஆர்டிஓ), உப்புச் சப்பில்லாத ஆய்வுகளை மேற்கொள்வதிலும், நமுத்த பட்டாசு போன்ற திறனற்ற ஏவுகணைகளைக் கடலில் மிதக்க விடுவதிலுமே மக்கள் பணத்தை வீணடித்து விட்டனர்.
ஓரளவு திறமையுள்ள ஒரே துறையாக உள்ளது, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் மட்டுமே. ஆனால், இந்த விஞ்ஞானிகளின் மூளையும், திறனும் கூட எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது, ஐஎஸ்ஆர்ஓவின் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கும், தேவாஸ் மல்டி மீடியா என்னும் தனியார் நிறுவனத்துக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டு, சமீபத்தில் அம்பலமானதால், அவசரமாக ரத்து செய்யப்பட்டு மூடிமறைக்கப்பட்ட எஸ். பாண்ட் அலைக்கற்றை ஊழல் விவகாரம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
÷ஆக, இன்றைக்கு இந்தியாவில் உள்ள உயர்கல்வித்துறையும், உயர்தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களும், சமுதாயத்தின் அன்றாட, அடிப்படையான பிரச்னைகளிலிருந்து விலகி நின்று, சமுதாயத்தின் உழைப்பைச் சுரண்டி வாழ்வதோடு மட்டுமல்லாமல், சமுதாயத்துடன் முரண்பட்டு நிற்கும் அமைப்புகளாகத்தான் இன்று வரை காட்சியளிக்கின்றன.
÷அதுமட்டுமல்ல, இந்தியாவில் உயர்கல்வி கற்க முன்வரும் லட்சக்கணக்கான இளைஞர்களை வழிநடத்தத் தவறுவதோடு, பெரும்பாலான படித்த இளைஞர்களின் வளம், நாட்டின் முன்னேற்றத்துக்கும், சமுதாயப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் பயன்தராமல், மனித ஆற்றல், விழலுக்கு இறைத்த நீராகிவிடுவதற்கு, உயர்கல்வித்துறை கல்வியாளர்களின் குறிக்கோளற்ற செயல்பாடுகளே காரணம்.
÷இந்நிலையில், அடிப்படைப் பிரச்னைகள் பற்றிப் புரிதல் ஏற்படுத்தாமல், நானோ தொழில்நுட்பம் பற்றியும், 2020-ல் வல்லரசுக் கனவு பற்றியும், உயர்ந்த இடத்தில் உள்ள சிலர் பேசுவது, இளைஞர்களைத் திசை திருப்புவதற்கே உதவுகிறது.
÷இன்றைக்கு, இந்திய உயர்கல்வித்தளம் சந்திக்கும் பிரச்னைகள், உலகின் முன்னேறிய, முன்னேறி வரும் வேறு எந்த நாடும் சந்தித்திராத, அடித்தளமே ஆட்டம் காணும் பிரச்னைகள். ÷மிக முக்கியமாக, பள்ளிக் கல்வியில் அடிப்படை அறிவியலைச் சரியாகச் சொல்லிக் கொடுக்காமல், சமூகத்திலும் ஆளுகையிலும்கூட அறிவியல் பார்வை இல்லாமல், உயர்கல்வியிலும் அடிப்படை அறிவியலை வலுப்படுத்தாமல், நேரடியாகத் தொழில்நுட்பக் கல்விக்குத் தாவும் ஒரு மோசமான கல்வி அமைப்பு.
எந்த ஒரு செயல்பாட்டிலும் அடிப்படை அறிவியலை உள்வாங்காத, அறிவியலைப் புறக்கணிக்கும் ஒரு சமுதாயத்தில், தொழில்நுட்பம் மட்டும் எப்படி மேம்படும்? அது மருத்துவக் கல்வியாக இருக்கட்டும், பொறியியலாக இருக்கட்டும், நானோ தொழில்நுட்பமாக இருக்கட்டும்.
÷அதனால் தான் இந்தியாவில் பகுத்தறிந்து, ஆய்வின் அடிப்படையில் எந்த ஒரு விஷயத்தையும் அணுகுவதில்லை. அதனால் தான், மேம்பாலம், விமான நிலையம், மெட்ரோ ரயில், ராக்கெட் விடுவது, கம்ப்யூட்டர் வடிவமைப்பு, அணுஉலை, அலைபேசி, இவ்வளவு ஏன், குப்பை மேலாண்மைக்குக்கூட அயல்நாட்டுத் தொழில்நுட்பத்தையே அண்டியிருக்கிறோம். இன்றைக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான தொழில்நுட்பங்கள், கடன் வாங்கப்படும் தொழில்நுட்பங்களே.
÷அடுத்த மிக மோசமான நிலை என்பது, சமூக அறிவியலும், சமூகவியலும் இல்லாத வறட்டுத்தனமான உயர்கல்வி. சமூக அறிவியலானது, நம்நாட்டில் பத்தாம் வகுப்புப் பள்ளிக்கல்வியோடு தொலைந்து போகிறது. மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், தொழில் மேலாண்மை, தணிக்கையியல், பொருளாதாரம் போன்றவற்றைப் படிக்கும் எந்த உயர்கல்வி மாணவர்களுக்கும், சமூக அறிவியலை துணைப்பாடமாக முகர்ந்து பார்க்கும் வாய்ப்புக்கூட இல்லை.
தரமான உயர்கல்வியைத் தரமான ஆசிரியர்களிடம் பெற்று, அதன் மூலம் சமூகத்தை உயர்த்தி, தானும் உயர வேண்டும் என்று தணியாத தாகம் கொள்ளும் படித்தவர்களை, சமூகத்தை வழிநடத்தக் கூடியவர்களை, சமூகத்துக்கு முன்மாதிரியாக நடக்கக்கூடியவர்களை உருவாக்க, இன்றைய உயர்கல்வி உதவவில்லை.
÷மாறாக, மற்றவர்களுடன் போட்டிபோட்டு இந்த நுகர்வுப் பொருளாதாரச் சந்தையில் விலை போவதற்காக, மருத்துவம், பொறியியல், எம்பிஏ ஆகிய பட்டங்களை வாங்குபவர்கள் உருவாகும் நிலைதான் இன்று உயர்கல்வியில் ஏற்பட்டுள்ளது.
ஒரு சராசரி மருத்துவர், மலேரியாவையோ, கருச்சிதைவையோ, சமூகத்தில் நிலவும் அநீதிகளின் விளைவுகளாகப் பார்க்காமல், தனது வருமானத்துக்கான வாய்ப்பாகவே பார்க்கிறார். அதனால் தான், பொது மருத்துவத்துக்கும், தடுப்பு மருத்துவத்துக்கும் இன்று ஆளில்லை. அறுவைச் சிகிச்சை செய்வதற்கும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை நிறுவுவதற்கும்தான் போட்டி. பொறியியல் படிப்பவர், பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூலியாகப் பணிபுரியத்தான் விருப்பப்படுகிறார்.
பட்டதாரி ஆசிரியர்கள் என்போர் இன்றைக்கு மிகமிக அரிது. ஆசிரியர் பட்டம் எனும் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே அதிகம். கற்பித்தலின் அரிச்சுவடிகூடத் தெரியாதவர்களிடமிருந்து தான் எதிர்காலக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டியுள்ளது.
÷இந்திய உயர்கல்வித்துறையானது, அடிப்படை அறிவியலும் சமூக அறிவியலும் இல்லாமல், சந்தைக்கானதாக ஆகிவிட்டதால், கல்விக் கொள்ளையர்களிடமும், உலகமயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்துக்கு ஆள்பிடிக்கும் தரகர்களிடமும் அகப்பட்டுக் கிடக்கிறது.
கார் வாங்குவது, வீடு வாங்குவது போன்று, பட்டத்தை மிக அதிக விலை கொடுத்து உயர்கல்விக் கொள்ளையர்களிடமிருந்து வாங்குவதால், வாழ்க்கையைத் தொடங்கும் போதே கடனாளிகளாகும் இளைஞர்களுக்கும், அவர்களால் நாட்டுக்கும் என்ன பயன்?
÷இந்த கல்விக் கொள்ளையைத் தடுப்பதற்காகவும், உயர்கல்வித்துறையில் பாழடைந்து கிடக்கும் பல்வேறு அமைப்புகளை தூசிதட்டி, மராமத்து செய்து, இருக்கும் கட்டமைப்புகளை இணைத்து பலப்படுத்துவதற்காகவும் உதவும் என்ற நம்பிக்கையில், பல மசோதாக்கள், மனிதவள மேம்பாட்டுத் துறையால் இயற்றப்பட்டு, நாடாளுமன்ற விவாதத்துக்காக நிலுவையில் உள்ளன.
÷இவற்றில், "தொழில் நுட்பக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் - நேர்மையற்ற செயல்பாடுகள் (தடுப்பு) மசோதா 2010, கல்வித்துறை தீர்ப்பாயம் மசோதா 2010, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியக் கமிட்டி மசோதா 2011' ஆகிய மூன்று மசோதாக்கள் முக்கியம் வாய்ந்தவை. இவையெல்லாம், நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, விரைவில் சட்டங்களாகுமா, அவை உண்மையாகவே நடைமுறைப்படுத்தப்படுமா, அவற்றின் மூலம் கல்விக் கொள்ளையர்களுக்குக் கடிவாளம் போடமுடியுமா, எந்த அளவுக்கு இந்திய உயர்கல்வியை நெறிப்படுத்தி, அர்த்தமுள்ளதாக்கி மேம்படுத்தும் இவற்றுக்கான பதில்கள் எல்லாம் எதிர்காலத்தில் தான் தெரியவரும்.
÷வருங்கால இந்திய இளைஞர்களின் தேவைகளுக்கு ஈடுகொடுக்க, இன்று உள்ள 480 பல்கலைக்கழகங்களோடு, கூடுதலாக 800 பல்கலைக்கழகங்களும், 35,000 கல்லூரிகளும், 3 லட்சம் விரிவுரையாளர்களும் வேண்டியுள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம்.
இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவில் நிலுவையில் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஒழுங்குபடுத்துதல் மசோதாவானது சட்டமானால், தரமற்ற இந்தியக்கல்வித் துறையை வெளிநாட்டுப் போட்டியின் மூலம் மேம்படுத்த உதவுமா அல்லது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி எனும் அநீதியை ஆழப்படுத்தி, மேலும் சமத்துவமற்ற நிலையை அதிகரிக்கச் செய்யுமா என்பதும் இன்றைக்கு ஒரு கேள்விக்குறியாக மட்டுமே இருக்க முடியும்.