650 கோடி ரூபாயில் பூங்கா திறந்து வைத்தார் மாயாவதி!


தன் கனவுத் திட்டமான, நொய்டாவில் 650 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பீம்ராவ் அம்பேத்கர் பூங்காவை, உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி நேற்று திறந்து வைத்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், யமுனை ஆற்றின் கரையில், தலித் தலைவர்களை கவுரவிக்கும் வகையிலும், அவர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையிலும், பிரமாண்ட பூங்கா ஒன்றைக் கட்ட, முதல்வர் மாயாவதி திட்டமிட்டார்.
684 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு, கடும் எதிர்ப்புக் கிளம்பியது. மக்கள் பணத்தை மாயாவதி வீணடிப்பதாக, பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டின. இருந்தாலும், அதையெல்லாம் மீறி, மாயாவதி தன் கனவுத் திட்டத்தைத் தொடர்ந்தார். அந்தத் திட்டம், தற்போது நிறைவு பெற்று, பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
தன் கனவுத் திட்டமான, "பீம்ராம் அம்பேத்கர் பூங்காவை' திறக்க, லக்னோவிலிருந்து ஹெலிகாப்டரில் நொய்டா வந்த மாயாவதி, ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து பூங்கா இருக்கும் இடத்திற்கு, ஏராளமான கார்கள் புடை சூழ பவனி வந்தார்.
பூங்காவிற்கு வந்த அவருக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், தலித் தலைவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பூங்காவைத் துவக்கி வைத்தார்.
அப்போது, அங்கிருந்த ஏராளமான புத்த மத குருக்கள், சிறப்பு வழிபாடு நடத்தினர். மொத்தம், 82 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய தலித் பிரர்னா ஸ்தல் மற்றும் கிரீன் கார்டனில், 24க்கும் மேற்பட்ட யானைச் சிலைகளும், டாக்டர் அம்பேத்கர், பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷிராம் மற்றும் மாயாவதி உட்பட பலரின் உருவச்சிலைகளும் இடம் பெற்றுள்ளன.
பூங்காவை துவக்கி வைத்து, மாயாவதி பேசியதாவது: இந்த பூங்கா அமைப்பதற்கான, 684 கோடி ரூபாய் நன்கொடைகள் மூலம் பெறப்பட்டது. மாநில அரசின் நிதி ஒரு சதவீதம் மட்டுமே, இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் பூங்காவைப் பார்க்க வருபவர்களிடம் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணம் மூலம், விரைவில் பெறப்படும்.
தலித் தலைவர்களை கவுரவிக்கவே, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. டில்லியை ஆளும் காங்கிரஸ் கட்சியினர், நேரு, இந்திரா குடும்பத்திற்காக, யமுனை நதியின் ஒரு கரையில் நினைவகங்களைக் கட்டியுள்ளனர்.
தற்போது, அந்த நதியின் மற்றொரு கரையில், உ.பி.,யை ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி, பிரமாண்டமான இந்தப் பூங்காவை அமைத்துள்ளது. உயரிய தலித் தலைவர்களை நினைவு கூர்வதற்காக, இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆட்சியில் இருந்த முந்தைய பா.ஜ., அரசும், தற்போதைய காங்கிரஸ் அரசும், எனக்கு எதிராக சி.பி.ஐ.,யை பயன்படுத்தின. கடந்த சில ஆண்டுகளாக, உ.பி., மாநிலத்தை மாற்றாந்தாய் பிள்ளை போல, மத்திய அரசு நடத்தி வருகிறது.
இருந்தாலும், பல சாதனைகளை எனது அரசு படைத்துள்ளது. எனது இந்தக் கனவுத் திட்டத்தை சீர்குலைக்க, நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை எல்லாம் முறியடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, மாயாவதி பேசினார்.
பூங்காவை, மாயாவதி திறந்து வைத்த போது, அதற்கு வெளியே ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். நொய்டாவை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மத்திய துணை ராணுவப் படையினர் உட்பட, ஏராளமான போலீசாரும், விழா பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
* மாயாவதியின் கனவுத் திட்டமான, தலித் தலைவர்களுக்கு நினைவுப்பூங்கா கட்டும் பணி, 2008ம் ஆண்டில் துவங்கியது.
* பணிகள் ஆரம்பித்த பின், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன.
* ஓக்லா பறவைகள் சரணாலயத்தின் அருகில், இந்த நினைவகப் பூங்கா கட்டப்பட்டதால், சிக்கல்கள் எழுந்தன. பூங்கா கட்டுவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
* மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும், சுற்றுச் சூழல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக, விசாரணை நடத்த உத்தரவிட்டது.
* இருந்தாலும், கடந்த ஆண்டு டிசம்பரில், மாயாவதியின் கனவுத் திட்ட பூங்காவிற்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. பூங்கா அமைக்கப்பட்ட மொத்தமுள்ள 84 ஏக்கரில், 25 சதவீத இடங்கள் தவிர, மற்ற இடங்களில் மரங்கள் நட வேண்டும் என, உத்தரவிட்டது.
* மெகா நினைவகம் கட்டுவதன் மூலம், முதல்வர் மாயாவதி மக்கள் பணத்தை வீணடிக்கிறார் எனக் கூறி, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகளும், தள்ளுபடி செய்யப்பட்டன. அவற்றில் சில வழக்குகள், இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன.
* மாயாவதி, தன் குடும்ப உறுப்பினர்களின் சிலைகளை நிறுவவே, இந்தப் பூங்காவை அமைத்ததாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.