நொய்டா(உ.பி.), அக். 15-
உத்தரபிரதேசத்தில் ரூ.685 கோடி செலவில் தலித் நினைவகத்தை திறந்து வைத்த மாயாவதி, காங்கிரஸ் அரசு மீது கடும் தாக்குதல் தொடுத்தார்.
உத்தரபிரதேச முதல் மந்திரியாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி பதவி வகித்து வருகிறார்.
டெல்லி புறநகர் பகுதியை ஒட்டியுள்ள நொய்டாவில், தலித் தலைவர்களை கவுரவிக்கும் வகையில், பூங்காவுடன் கூடிய பிரமாண்டமான தலித் நினைவகத்தை அவர் உருவாக்கி வந்தார். 80 ஏக்கர் பரப்பளவுக்கும் அதிகமான இடத்தில் தலித் தலைவர்களான டாக்டர் அம்பேத்கார், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சிராம் ஆகியோருடைய நினைவிடங்களுடன் மாயாவதியின் உருவச்சிலையும் அந்த நினைவகத்தில் இடம் பெற்றுள்ளன.
அத்துடன் மாயாவதி கட்சியின் சின்னத்தை குறிக்கும் வகையில், தலா ரூ.70 லட்சம் செலவில் 20 யானைகளின் சிலைகளும் அங்கு நிறுவப்பட்டு உள்ளன. பல்வேறு எதிர்ப்புகள், சர்ச்சைகள் மற்றும் கோர்ட்டு வழக்குகளை கடந்த அந்த நினைவகம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. ஏறத்தாழ ரூ.685 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நினைவகத்தை, முதல்-மந்திரி மாயாவதி திறந்து வைத்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தலித் தலைவர்களை புறக்கணித்து வருவதாக கடும் தாக்குதல் தொடுத்தார். அவர் கூறியதாவது:
"டெல்லியில் யமுனா நதியின் மேற்கு கரையில் காந்தி-நேரு குடும்பத்தினருக்கு ஏராளமான நினைவகங்களை எழுப்பியுள்ள மத்திய காங்கிரஸ் அரசு எழுப்பியுள்ளது. எனவே எங்களைப் பற்றி விமர்சிக்க காங்கிரசுக்கு உரிமை இல்லை.
ஆனால், தலித் தலைவர்களான அம்பேத்கார் மற்றும் கன்சிராம் போன்றவர்களுக்கு எந்த நினைவு சின்னங்களும் அமைக்கப்படவில்லை. இதன்மூலம் தலித் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புண்படுத்திவிட்டது. எனது தலைமையிலான அரசுதான் தலித் தலைவர்களுக்கு நினைவகம் எழுப்பி உரிய மரியாதை செய்து உள்ளது.
மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது என் மீது பொய் வழக்குகள் தொடரப்பட்டு தொல்லை கொடுத்து வந்தனர். அப்போது என்னுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் எனக்கு நியாயம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
ஆனால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆன பிறகும் எனக்கு நியாயம் வழங்குவதற்குப் பதிலாக மீண்டும் சி.பி.ஐ. மூலம் எனக்கு தொல்லைதான் கொடுத்து வருகிறார்கள். நான் ஒரு தலித்தின் மகள் என்பதே இதற்கு காரணம். மேலும் உத்தர பிரதேசத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது.
உத்தர பிரதேசத்தில் தலித் ஓட்டுகளை பிரிப்பதற்காக காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை. பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்த பாபு ஜெகஜீவன்ராமை பிரதமர் ஆக்க காங்கிரஸ் தவறிவிட்டது. அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலில் எனது செல்வாக்கை கண்டு பயந்து, தலித் மக்களின் ஓட்டை பிரிப்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங்கை நீக்கிவிட்டு, தலித் சமுதாயத்தை சேர்ந்த பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் மீராகுமார் அல்லது மத்திய மந்திரியான சுஷில்குமார் ஷிண்டே ஆகிய இருவரில் ஒருவரை பிரதமராக நியமிக்க காங்கிரஸ் முயற்சிக்கலாம் என்று கருதுகிறேன்". இவ்வாறு மாயாவதி கூறினார்.