புதுச்சேரி, அக். 4: புதுச்சேரியில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி சமூக நலத்துறை அமைச்சர் பி.ராஜவேலுவிடம், அருந்ததியர் மக்கள் சங்கத்தினர் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன் விவரம்: புதுச்சேரியில் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழகத்தை போல அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு அருந்ததியர் என்று சாதிச் சான்று வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் அருந்ததியர்களுக்கு சக்கிலியர் என்று வழங்குவதை நிறுத்தி, அருந்ததியர் என்று வழங்க வேண்டும். ஆதிதிராவிடர்களுக்கு கல்வீடு கட்டும் திட்டத்தில் ரூ.5.5 லட்சம் வழங்குவது போல, அருந்ததியர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றுள்ளன.
சங்கத்தின் பொதுச் செயலர் எம்.தவமணி, துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், காரைக்கால் மாவட்டத் தலைவர் ந.கலியமூர்த்தி உள்ளிட்டோர் அமைச்சர் ராஜவேலுவிடம் மனு அளித்தனர்.