தலித் வாலிபருடன் ஓடிப் போன பெண்ணை அடித்துக் கொன்ற கணவர் குடும்பத்தினர்


மொரேனா : மத்தியப் பிரதேச மாநிலத்தில், கள்ளக் காதலனுடன் ஓடிப்போன பெண்ணைப் பிடித்து வந்த அவரது கணவர் குடும்பத்தினர், அடித்துக் கொன்றதோடு, உடலுக்கும் தீ வைத்தனர். பொதுமக்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் லெகர் கிராமத்தில், கடந்த 20ம் தேதி நடந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: மொரேனா மாவட்டம், லெகர் கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டி என்ற போரி, 30. இவருக்குத் திருமணமாகி, நான்கு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், வீட்டுக்கு அருகே வசிக்கும் கமல் என்ற தலித் வாலிபருடன், கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த 2ம் தேதி, அவருடன் குட்டி தலைமறைவானார். ஓடிப் போன குட்டியை, அவரது கணவர் குடும்பத்தினர் தேடி வந்தனர்.
கடந்த 20ம் தேதி கண்டுபிடித்தனர். அவரை ஊருக்கு கொண்டு வந்து, பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொன்றனர். பின்னர், உடலை மரத்தில் தொங்க விட்டு, அதற்கு தீயும் வைத்தனர். சம்பவத்தின் போது, குட்டியைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.
சம்பவம் குறித்து குட்டியின் பெற்றோர், டிம்னி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து, குட்டியின் மரணத்திற்குக் காரணமான, அவரது கணவர் குடும்பத்தினரை, போலீசார் தேடி வருகின்றனர். அத்துடன் கள்ளக் காதலன் கமலின் குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர்.