சாதியாதிக்கத்திற்கு எதிராகப் போராடியதால் 1957இல் கொல்லப்பட்ட இமானுவேல் சேகரனின் நினைவிடம் அமைந்துள்ள பரமக்குடியில் அவரது நினைவு நாளான கடந்த செப்டம்பர் 11ஆம் நாள் ஏராளமான தலித் மக்கள் அஞ்சலி செலுத்தத் திரளவிருந்த நிலையில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் வரை இறந்துள்ளனர். இறந்தோர், காயமடைந்தோர் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்ல முடியாத அளவிற்கு இத்தாக்குதல் கடுமையானதாக இருந்திருக்கிறது. அத்துடன் துப்பாக்கிச் சூடு நடந்த காலை 11 மணிக்குப் பின்னரும் மாலை 5 மணி வரை காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். சாதுரியமாகக் கையாண்டிருக்கக்கூடிய பிரச்சினையைத் தவறாகக் கையாண்ட காவல் துறையினரால்தான் இந்த வன்முறை நடந்திருப்பதாக இப்பிரச்சினை குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இமானுவேல் குருபூஜை என்னும் பெயரில் முன்னெடுக்கப்படும் அஞ்சலி நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்த ஜான்பாண்டியன் கைதுசெய்யப்பட்டதை அறிந்த அவருடைய ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்யக் கோரிச் சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இம்மறியலால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் காவல் துறை தெரிவிக்கிறது. அதாவது மறியலில் ஈடுபட்டோர் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததோடு காவல் துறையினரையும் தாக்கி வாகனங்களைக் கொளுத்தினர் என்றும் காவல் துறையினர் விளக்கம் கொடுத்துள்ளனர். காவல் துறையின் இதே கருத்தைத்தான் பெரும்பாலான ஊடகங்களும் அரசும் பிரதிபலித்துள்ளன. ஆனால் இந்நிகழ்வு குறித்த வீடியோ பதிவு உள்ளிட்ட ஆதாரங்களைப் பார்க்கும்போது இக்கூற்றுகள் திரிக்கப்பட்டவை என்பதை அறிய முடிகிறது. அங்கு 20 பேர் அளவில்தான் மறியலில் ஈடுபட்டிருந்தனர். அக்கூட்டம் சாலையை முழுமையாக ஆக்கிரமிக்கக்கூடியதாக இல்லை. சிறிய அளவிலான இம்மறியல் நடந்துகொண்டிருக்கும்போதே அஞ்சலி செலுத்துவதற்காக வாகனங்கள் சென்று வரக்கூடிய நிலைமைதான் அங்கு இருந்துள்ளது. இந்நிகழ்விற்காகப் போக்குவரத்து நகரச்சாலையிலிருந்து முற்றிலுமாக மாற்றுப்பாதைக்குத் திருப்பிவிடப்பட்டிருந்ததால் போக்குவரத்து இடையூறு என்று கூறுவதில் எந்தத் தர்க்கமும் இல்லை. எனவே ஜான்பாண்டியனைத் தக்க பாதுகாப்போடு அழைத்துவந்திருக்கவோ மறியல் செய்தோரை எளிய நடவடிக்கைகள் மூலம் கலைத்திருக்கவோ வாய்ப்பிருந்தது. கடந்த சில ஆண்டுகளில் லட்சம் பேர் கூடும் தமிழக அளவிலான நிகழ்வாக மாறிவரும் இமானுவேல் நினைவுநாள் என்ற உணர்ச்சிபூர்வமான நிகழ்ச்சியை அதிக எச்சரிக்கையுடன் காவல் துறை கையாண்டிருக்க வேண்டும். தினசரி வாழ்வில் ஒடுக்குமுறையை எதிர்கொண்டுவரும் வகுப்பினர் இதுபோன்ற அரசின் வன்முறைக்கும் ஆளாவது துரதிருஷ்டம். துப்பாக்கிச் சூட்டிற்கு முன் கையாளப்பட்டிருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடைமுறைகள் எவையும் இங்கே பின்பற்றப்படவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. கூட்டம் கலைந்தோடிய பின்னும் அகப்பட்டவர்களை எல்லாம் கடுமையாகத் தாக்கியுள்ளது காவல் துறை. இறந்த ஆறு பேரில் அடித்துக்கொல்லப்பட்டோரும் உண்டு. குண்டுகள் பெரும்பாலும் இடுப்புக்கு மேலேதான் பாய்ந்துள்ளன. இந்நிலையில்தான் சட்டப்பேரவையில் அறிக்கை வாசித்த முதல்வர் இந்த வன்முறையோடு அதுவரையிலும் நேரடியாக இணைக்கப்படாதிருந்த ‘சாதி மோதல்’ என்ற காரணத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். செப்டம்பர் 11க்கு முன்பு செப்டம்பர் 9ஆம் நாள் கமுதி அருகே உள்ள பச்சேரியில் முத்துராமலிங்கத் தேவரை இழிவுபடுத்தி எழுதியதால் 11ஆம் வகுப்பு படிக்கும் பழனிக்குமார் என்னும் தலித் மாணவன் கொல்லப்பட்டதாகவும் இதனால் அங்கே செல்லவிருந்த ஜான் பாண்டியன் கைதுசெய்யப்பட்டதாகவும் அவரை விடுவிக்கக் கோரி மறியலில் ஈடுபட்டோர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் முதல்வரின் அறிக்கை கூறியிருக்கிறது. பிரச்சினையை இரண்டு சாதிகளுக்கு இடையேயானதாக மாற்றிவிடக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கும் அவ்வறிக்கை பிரச்சினையின் வேரைத் தலித்துகள் தரப்பில் தேடுவதாகவும் அமைந்திருக்கிறது. முதல்வரின் இந்த அறிக்கை துரதிருஷ்டவசமானது. சாதி காரணமாகக் கொல்லப்பட்ட பழனிக்குமாரின் படுகொலைக்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை அக்கொலையைத் தேவரை இழிவுபடுத்தியதால் ஏற்பட்ட எதிர்வினையாகக் காட்ட முயல்கிறது என்று கள ஆய்வு மேற்கொண்ட உண்மையறியும் குழுவினர் பலரும் கருதுகின்றனர். காவல் துறையின் வன்முறையை நியாயப்படுத்திய அதிமுக அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அறிவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் காவல் துறை நடத்திய கொடியங்குளம் வன்முறைக்காக நியமிக்கப்பட்ட கோமதிநாயகம் கமிஷனும் திமுக ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலி தாமிரபரணி படுகொலைகளுக்காக நியமிக்கப்பட்ட மோகன் கமிஷனும் அன்றைய ஆட்சியாளர்களின் எண்ணங்களையே பிரதிபலித்தன. அவை தலித் மக்களுக்கு நியாயம் செய்யவில்லை. எனவே பணியிலுள்ள நீதிபதி தலைமையிலான கமிஷன் அல்லது நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை என்ற தலித் அமைப்புகள் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளின் கோரிக்கையை ஏற்க அரசு முன்வர வேண்டும். தலித் கட்சிகளும் மக்களும்கூட இப்போராட்டத்தை அரசியல்ரீதியானதாகப் பரவலாக்க வேண்டும். அதோடு தலித் மக்கள் பிரச்சினையை ஒட்டுமொத்த சமூகப் பிரச்சினையாகக் கருதுவோரும் இதில் தலையிட வேண்டும். ooo தங்களின் சுயமரியாதைக்காகப் போராடிய இமானுவேல் சேகரனை நினைவுகூர்வது ஒடுக்கப்பட்டோரைப் பொறுத்தவரை கடந்தகால வரலாறாக மட்டுமல்லாமல் நிகழ்காலத்தின் அரசியலாகவும் தொடர்கிறது. தமிழக அரசியல் அரங்குகளிலோ ஊடகங்களிலோ இமானுவேல் சேகரனும் அவரை அடையாளமாகக் கொண்டு வெளிப்படும் அரசியல் எழுச்சியும் சிறு அளவிலும் அங்கீகரிக்கப்பட்டதில்லை. பொதுவெளி மீதான தங்களின் உரிமைக்காக இம்மக்கள் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. பொதுச்சமூகத்தின் அங்கீகாரத்தைக் கோருவது என்பது தங்கள்மீது திணிக்கப்பட்ட இழிவை மறுக்கும் போராட்டம்தான்.ராமநாதபுரம் பகுதியில் அரசியல் செல்வாக்கோடும் சாதி அதிகாரத்தோடும் இருந்த முத்துராமலிங்கத் தேவரை எதிர்த்ததால் கொல்லப்பட்டதாகத் தலித் மக்களின் நினைவுகளில் வாழும் இமானுவேல் சேகரனைக் கொண்டாடுவது சமகாலத்திலும் ஆதிக்கம் செலுத்திவரும் தேவர் சாதியினரின் அதிகாரத்தை எதிர்கொள்ளும் அரசியலாகவும் விளங்குகிறது. அதனால்தான் தேவர் சாதிக்கு இணையாகத் தங்கள் அடையாளங்களை அரசும் பொதுச்சமூகமும் அங்கீகரிக்க வேண்டும் என்று தலித்துகள் விரும்புகின்றனர். ஆனால் சமகால அரசியலும் பொதுச்சமூகமும் பிற சாதி அடையாளங்களை ஆராதிக்கும் அளவுக்குத் தலித் அடையாளங்களைக் கண்டுகொள்வது இல்லை. இப்புறக்கணிப்பிற்கு எதிரான தலித் மக்களின் கோபம் அதிகாரத்திற்கு எதிரான வன்முறையாகவும் மாறிவிடுகிறது. தங்கள் தலைவரின் நினைவுக்காக ஒன்றுகூடிய இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் காவல் துறைக்கு எதிராகக் கல்வீசிப் போராடியவர்களின் மனநிலை அதுதான். அரசே சாதியாகவும் சாதியே அரசாகவும் மாறிவிட்ட நிலையில் ஒடுக்கப்பட்டோரின் சிறு அடையாளத்தை அங்கீகரிப்பதும் ஆதிக்கச் சாதிகளைப் பகைப்பதாக மாறிவிடும் என்று இன்றைய அதிகார அமைப்பு கருதுகிறது. இமானுவேல் சேகரன் விழாவை அரசு விழாவாக அறிவிக்கக் கோரி தலித் அமைப்புகள் போராடுவதை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது இதனால்தான். நினைவிடத்தில் பெரும் மக்கள் திரட்சி கூடுவதன் மூலம் அரசு விழா போன்ற அங்கீகாரங்களுக்கு அழுத்தம் கூடிவிடாதபடி துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் மூலம் அச்சூழலைக் கலைக்க விரும்புகின்றனர். சாதி முறைக்கு ஆதரவாக எடுக்கும் நடவடிக்கையை அரசு மறுக்கப்போவதில்லை என்பதை அறிந்திருப்பதால்தான் இம்மக்கள்மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தத் துணிந்திருக்கிறது. பொதுவாகவே அதிமுக ஆட்சியை முக்குலத்தோர் வகுப்பினருக்குப் பரிவான ஆட்சியெனச் சொல்வதுண்டு. பெருவாரியான ஒடுக்கப்பட்ட மக்கள் இதைத் தங்களுடைய ஆட்சி அல்ல என்று கருதும்படியான நடைமுறைகளைத் தொடர்வது அதிமுகவிற்கோ அரசிற்கோ ஜனநாயகத்திற்கோ நல்லதல்ல. |