தனித் தொகுதிகள் தேவையில்லை-விஜயகாந்த் பேச்சைக் கண்டித்து கொடும்பாவி எரிப்பு

 [IST] 


மதுரை : தலித்களுக்குத் தனித் தொகுதி, பொதுத் தொகுதி என தனித் தனியாக தொகுதிகள் இருக்கக் கூடாது. அனைத்துத் தொகுதிகளையும் பொதுத் தொகுதிகளாக மாற்ற வேண்டும் என்று பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைக் கண்டித்து தலித் மக்கள் விஜயகாந்த்தின் கொடும்பாவியை எரித்துள்ளனர்.

தனித் தொகுதி, பொதுத் தொகுதி என்று தேவையில்லை. ஒரே தொகுதியாக அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது பிரச்சினையாகியுள்ளது. ஏற்கனவே அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துப் பேசியதால் கொதிப்படைந்துள்ள தலித் மக்கள் தற்போது விஜயகாந்த்தின் பேச்சால் மேலும் கோபமடைந்துள்ளனர்.

நேற்று தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் விஜயகாந்த் பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், பொதுத்தொகுதி, தனித் தொகுதி என்று தேர்தல் பிரித்து வைத்திருப்பது தவறு. அனைத்து தொகுதிகளையும், பொதுத்தொகுதியாக மாற்ற வேண்டும் என்றார்.

இதற்கு தமிழ்ப் புலிகள் என்ற தலித் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் பேச்சைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு திரண்ட அவர்கள் கொடும்பாவியையும் எரித்தனர்.

இந்த சம்பவம் நடந்தபோது ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து தலித்களுக்கு எதிராக பொருள்படும்படியாக தேமுதிக உயர் மட்டத் தலைவர்கள் பேசி வருவதால் தலித் மக்கள் கொதிப்படைந்து வருவது, தேமுதிக தொண்டர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.