திருச்சி, இந்தியா: ரகசிய மெசேஜ் ஒன்று குறிப்பிட்ட தரப்பு வாக்காளர்களிடம் வாய் வார்த்தையாக பரப்பப்படுவதாக கிடைத்துள்ள தகவல், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஆளும் கட்சியினரை மிரள வைத்துள்ளது. இந்த ரகசிய மெசேஜ் எந்தளவுக்கு தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும்? அதுதான் யாருக்கும் புரியவில்லை.
திருச்சி மேற்கு தொகுதியில் ரகசியமாகப் பரப்பப்படும் இந்த மெசேஜ், அ.தி.மு.க. வாக்குகளை சிதறடிக்குமா என்று ரிப்போர்ட் கொடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உளவுப் பிரிவுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகின்றது. அந்தளவுக்கு இதை சீரியசாக எடுத்திருக்கிறது ஆளும் கட்சி.
தொகுதிக்குள் இந்த ரகசிய மெசேஜைப் பரப்பும் ஆட்கள், பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் அமைப்பினர் என்று கூறுகின்றார்கள்.
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 22-24,000 தலித் இன ஓட்டுக்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, இது பெரிய எண்ணிக்கைதான். காரணம், 4 மாதங்களுக்கு முன் நடைபெற்ற கடந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் மரியம்பிச்சை ஜெயித்ததே, வெறும் 7,000 வாக்கு வித்தியாசத்தில்தான்!
ரகசிய மெசேஜைப் பரப்பும் தலித் அமைப்பினர், இந்தத் தேர்தல் நடந்து முடியும்வரை ஜான் பாண்டியன் எங்கும் செல்ல முடியாதபடி தமிழக அரசு அவரை முடக்கி வைத்திருக்கின்றது என்றும், தலித் மக்களுக்கான அவரது செய்தி, “அ.தி.மு.க.வை எப்படியாவது தோற்கடியுங்கள்” என்றும் வாய் வார்த்தையாகப் பரப்பி வருகின்றனராம்.
தலித் மக்களின் சிறிய சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், மாதாந்த உணவு விடுதிகள் (மெஸ்) ஆகியவற்றின் ஊடாகவே இந்த மெசேஜ் பரப்பப்படுகின்றது என்கிறார்கள்.
நாம் விசாரித்த வகையில், அப்படியொரு மெசேஜ் தலித் சமுகத்தினரிடம் அடிபட்டுக் கொண்டிருப்பது நிஜம்தான்! இது எந்தளவுக்கு அ.தி.மு.க.வைப் பாதிக்கும் என்பதே மில்லியன் டாலர் கேள்வி!