ஆயினும் நாங்கள் அரசியல் கட்சிகளின் அடிமைகளே…!


உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், யாராவது இருவர் சந்தித்துக்கொண்டால், பேச்சின் மையப்பொருள் உள்ளாட்சி மன்ற தேர்தலாகத்தான் இருக்கும். கிராமங்களில் இருக்கும் தேனீர்க்கடைகளில் அமர்ந்து கொண்டு, ஜெயலலிதா யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும். விஜயகாந்த் என்ன செய்ய வேண்டும் என்று இலவச ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பார்கள்.
      ஏற்கனவே எல்லாம் நிறைந்து போயிருக்கிற ஆதிக்க சாதியினர் இவ்வாறு பேசுவதில் வியப்பொன்றுமில்லைதான். ஆனால், ஒரு நொடியைக் கூட மகிழ்ச்சியாக கடந்து விட முடியாத தலித்துகள் கூட இவ்வாறு தேர்தலைப்பற்றியே பேசி திளைப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்குத்தெரிய பல தலித் அரசு ஊழியர்கள், அன்னா ஹசாரே பற்றியும், பெட்ரோல் விலை உயர்வு பற்றியும் வாய் கிழிய மணிக்கணக்கில் பேசுகிறார்கள். உள்ளூரில் ஆதிக்க சாதியினருக்கான பிரச்னையிலும் இவ்வாறே மேலதிகமான தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். திருப்பூரில் நிலவும் சாயப்பட்டறை பிரச்னைகளையும் அக்குவேறு ஆணிவேறாக அலசுகின்றனர். ஆனால் பரமக்குடி துப்பாக்கி சூட்டைப் பற்றிக் கேட்டால், உதட்டைப் பிதுக்குகிறார்கள். நாம் பேச ஆரம்பித்தால், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு இடத்தை விட்டு நழுவுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.
      தனிநபர்கள் கூட ஊழல் போன்ற பிரச்னைகளை இந்திய அளவிலான விவாதப்பொருளாக மாற்றுவதில் வெற்றி பெறுகின்றனர். ஆனால், 25 கோடிக்கும் மேற்பட்ட தலித்துகளால், தங்கள் மீது திணிக்கப்பட்ட தீண்டாமை, வன்கொடுமை, இழிவு ஆகியவற்றை விவாதப்பொருளாக மாற்ற முடியவில்லை. தலித் தலைவர்களுக்கோ அடுத்தடுத்து வரும் தேர்தல்களே முக்கிய வேலைத்திட்டமாக மாறிவிடுகிறது.
      சமூக மாற்றத்திற்காக பணியாற்றும் தலித் இளைஞர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலான நாளாகவே தொடங்குகிறது.
      கொங்கு மண்டலம் என்று ஆதிக்க சாதிவெறியர்களால், அழைக்கப்படும் தமிழகத்தின் மேற்கு மண்டலத்திற்கு ஒரு பெருமை இருப்பதாக வாய் கிழிய பேசிக்கொள்வார்கள். வார்த்திகளில் கூட மரியாதை இருப்பதாகவும், பண்பாடான மக்கள் வாழுகிற மண்டலம் என்று பெருமை பீற்றிக்கொள்வார்கள். ஆனால், உலக அரங்கில் எப்படி இந்தியா பாரம்பரியமான பண்பாடான நாடு என்று பீற்றிக்கொண்டாலும் அதன் முகமூடி அடிக்கடி கிழிந்து தொங்குமோ அதைப்போலத்தான் மேற்கு மண்டலத்தின் முகமூடியும் அடிக்கடி கிழிந்து தொங்கும். சமீபத்தில் மீண்டும் அவ்வாறு இரு இடங்களில் கிழிந்திருக்கிறது. வழக்கம்போல் முற்போக்கு, சமூகநீதி, சனநாயகம், சமத்துவம், புரட்சி பகுத்தறிவு, இன்னபிற பேசுபவர்கள் எல்லாருமே வாய்மூடி மௌனிகளாக அமைதியாக கடந்து செல்கின்றனர்.
      கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகே உள்ள சாமளாபுரத்துக்கு பக்கத்து கிராமம் பரமசிவம்பாளையம் இங்கு குடியிருக்கும் கருப்புசாமி துரைசாமி இருவரும் விசைத்தறி தொழிலாளர்கள். இருவரும் 20.09.2011 அன்று சாபிடுவதற்காக பகவதியம்மன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே குடிபோதையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இருபத்தாறே வயதான கவுண்டன் சிவசண்முகத்துக்கு எதிரில் அமர்ந்து சாப்பிட தொடங்கியுள்ளனர். பொறுக்குமா ஆதிக்க சாதி வெறியனுக்கு? இருவரையும் வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளான் சிவசண்முகம், சாப்பிட அனுமதித்த ஹோட்டல் முதலாளிக்கும் திட்டு. குடிபோதையில் உளறுகிறான் என்று அமைதி காத்தனர் கருப்புசாமியும் துரைசாமியும். குடிபோதையை மிஞ்சிய சாதிபோதையால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தனது செருப்பை எடுத்து கருப்புசாமியின் இலையில் வைத்து இதையும் சாப்பிடு என்று மிரட்டியுள்ளான். அவமானத்தால் கூனிக்குறுகிப்போன இருவரும் எழுந்து வெளியே போக முயல கருப்புசாமியை செருப்பால் அடித்து விட்டு அங்கிருந்து பேருந்து நிறுத்தம் போன இருவரையும் துரத்தி வந்து பேருந்து நிறுத்தத்தில் வைத்தும் செருப்பால் அடித்துள்ளான். பாதிக்கப்பட்டவர்கள் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவசண்முகம் தற்சமயம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். தீக்கதிர் நாளிதழைத்தவிர எந்த நாளிதழும் இந்த செய்தியை பிரசுரிக்காமல் தங்களது சாதிப்பாசத்தை வெளிப்படுத்திக்கொண்டன. மனிதத்தின் மீது நடந்த இந்தப்பெரிய தாக்குதலுக்குப் பிறகும் கூட எந்தவொரு அரசியல் கட்சியும் கண்டனம் முழங்க தயாராய் இல்லை. தலித்துகளுக்கும் ஆயிரம் வேலைகள்! அவர்கள் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் வாக்கு சேகரிக்க கிளம்பிவிட்டனர்.
      இதுபோலவே, இன்னொரு சம்பவம், கோவை மாநகராட்சியை ஒட்டியுள்ள ஆலாந்துறைக்கு அருகில் உள்ளது நாதேகவுண்டன்புதூர். இங்கு வசித்துக்கொண்டு கட்டிட மேசனாக வேலை செய்து வரும் 24 வயதான சந்தோஷ்குமார் வேலைக்கு சென்றுவிட்டு திரும்ப வரும் வழியில் கடந்த 25ம் தேதியன்று மாலை 6 மணிக்கு ஆர் கே பேக்கரி முன் தனது வண்டியில் சாய்ந்து நின்று டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பதினெட்டே வயதான மணிகண்டன் என்கிற கவுண்டனுக்கு பொறுக்குமா? அதே இடத்தில் வைத்து சந்தோஷ்குமாரை தாக்கியுள்ளான். அங்கிருந்தவர்கள் தடுத்து சந்தோஷ்குமாரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சந்தோஷ்குமார் வீட்டுக்கு போய்விட்ட பின்னரும் சாதித்திமிர் அடங்காத மணிகண்டன் 15க்கும் மேற்பட்டோரை அழைத்துக்கொண்டு போய் சந்தோஷ்குமாரின் வீட்டுக்கே போய் வீட்டு முன் இருந்த படலைப் பிய்த்தெறிந்து சந்தோஷ்குமார், அவரின் தாயார் செல்வி, பெரியப்பா நஞ்சப்பன் மூவரையும் கடுமையாக தாக்கி 108 ஆம்புலன்சில் கொண்டு போய் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்குமளவுக்கு காயப்படுத்தியுள்ளனர். தொலைபேசியில் பலமுறை புகார் கொடுத்தும் வராத காவல்துறை தலித் மக்களின் சாலை மறியலுக்குப் பிறகே வந்து சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. மருத்துவமனை மட்டும் விதிவிலக்கா என்ன? அடிபட்டு வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் தன் சாதி வக்கிரத்தை வெளிப்படுத்திக்கொண்டது.
      இரண்டு சம்பவங்களிலுமே ஆழ்ந்து கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், இரண்டு வன்கொடுமைக் குற்றவாளிகளுமே 26 வயதும் 18 வயதுமே ஆனவர்கள். இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க? அதெல்லாம் பழைய காலத்து ஆளுங்க என்று சொல்பவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? அதிலும் பாதிக்கப்பட்டவர்களை விட வன்கொடுமைக் குற்றவாளிகள் வயதில் இளையவர்கள்.
ஆனாலும் தலித்துகளே வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் பிரிவு 6ன்படி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி விடாதீர்கள். நீங்கள் வன்முறையாளர்கள் ஆகவும் பயங்கரவாதிகளாகவும் முத்திரை குத்தப்பட்டு தேசியத்தை பாதுகாக்க சிறைக்கதவுகளை திறந்து விடுவார்கள். ஜாக்கிரதை.