சாதிகள் ஒழிக்கப் பட்டுவிட்டதாம்... உண்மையா?


தமிழகத்தில் ஒவ்வொரு சாதியாக ஒழிக்கப்பட்டு கொண்டே வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கான காரணகர்த்தாக்களை எல்லாம், நீங்கள் அறிய வேண்டும். திகைப்பாக உள்ளதா? விஷயத்திற்கு வருகிறோம். இனமான. மானமிகு கி.வீரமணி அவர்களின் விடுதலை ஏடுக்கு, அரசு நூலகத்திலிருந்து விடுதலை அளிக்கப்பட்டதால் - புதிதாய் சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கென விடுதலை ஏட்டில் விளம்பரப்படுத்தப்படும் விதவிதமான வாசகங்களை வாசித்த போது - சில நகைசுவையாகவும், சில ஏமாற்றம் அளிப்பதாகவும் இருந்தது. உண்மையின் குரலாக இருக்க வேண்டிய விடுதலை உண்மைக்கு மாறான குரலாக ஒலிக்கலாமா? எதற்கு சந்தாத்தாரர்களை பிடிக்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். தி.மு.க.வினர் அனைவரும் "பகுத்தறிவு ஏடாம் விடுதலையை" வாங்க சொல்லி கலைஞர் ஆணையிட்டால் போதாதா?

முதலில் விளம்பரப்படுத்தப்பட்ட வாசகங்களை வாசியுங்கள். பிறகு வாசகங்களை விமர்சிப்போம. "வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைக்குரலாம் 'விடுதலை' சந்தா சேர்ப்பில் தமிழா உன் பங்கு என்ன?
"பெண்ணடிமையை ஒழிக்கும் பீரங்கியாம் பெரியாரின் போர்வாள் விடுதலைக்கு சந்தா சேர்ப்பீர்!

"ஜாதி ஒழிக்கும் சமர்ப்புலியாம் 'விடுதலை'க்கு சந்தாக்களை குவித்திடுவீர் - சாதனை படைத்திடுவீர்!" என்றெல்லாம் விளம்பர வாசகங்கள் நச்சென்று தான் இருந்தன.

இனி நமது விமர்சனத்துக்கு வருவோம். பிற வாசகங்களை விட குறிப்பிட்ட இந்த வாசகத்தை பார்த்து தான் குழம்பியும், திகைத்தும் போனோம். "ஜாதி ஒழிக்கும் சமர்ப்புலியாம் 'விடுதலை'க்கு சந்தாக்களை குவித்திடுவீர் - சாதனை படைத்திடுவீர்!" திகைப்புக்கான காரணம் - அப்படி இதுவரை "எத்தனை சாதியை" இந்த சமர்ப்புலிகள் ஒழித்திருக்கிறார்கள் என்று. நாட்டில் சாதியின் எண்ணிக்கை ஓரேயடியாய் குறைந்து விட்டதோ?

 டவுட் தனபாலுசொல்கிறார். "மல்லிகைப்பூவில் உள்ள ஜாதிய பத்தி பேசி இருக்கப்போறாருங்க"... என்று. இருக்கலாமோ. திராவிட இயக்கம் தோன்றிய நாளில் எத்தனை சாதிகள் இருந்தனவோ - அத்தனை சாதிகளும் இன்றளவும் இருக்கின்றன. இதிலென்ன "சாதியை ஒழித்த சமர்ப்புலிகள்" என்று பட்டப்பெயர். வெற்று பெருமை.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது - தவறாமல் தங்கள் சாதியை குறிப்பிட்டே ஆக வேண்டும் என்று சாதி சங்கங்கள் சுற்றறிக்கையும், மின் அஞ்சலும் அனுப்புகிறது. (இதில் பார்ப்பனர்களும் அடக்கம்) கட்சிகளும் அதை மறுக்க விரும்பவில்லை. "சாதியை வலியுறுத்த சொல்லி" சிலரால் கட்டாயம் வேறு.

ஒவ்வொரு தேர்தலுக்கும் புதிது புதிதாய் சாதிக் கட்சிகள் தோன்றி கொண்டு தான் இருக்கின்றன. அவையெல்லாம் விடுதலையால் ஒழிக்கப்பட்ட சாதிகளின் "ஆவிகளா" என்று தெரியவில்லை. வசதி படைத்த பணக்காரர்கள் - தங்களது இறுதி நாட்களில் அரசியல்வாதியாக வாழப்பிரியப்பட்டு, தங்களின் சாதியில் ஒரு கட்சி துவங்கிவிடுகிறார்கள்.

விளைவு - விளிம்பு நிலை மனிதர்களுக்காக துவங்கப்பட்ட கட்சிகள், இயக்கங்கள் சீந்துவாரின்றி. மக்களுக்கும் ஒட்டு மொத்தமாய் சாதியக்கட்சிகளின் மீது வெறுப்பாய். சாதீய கட்சிகளின் மாநாட்டு விளம்பரங்களை விடுதலை ஏட்டில் பார்த்த நமக்கு - இவர்களின் "சாதி ஒழிப்பு" பித்தலாட்டம் நன்றாகவே தெரிகிறது. "சாதி கூடாது" என்பவர்கள் எதற்கய்யா - சாதீய மாநாட்டின் விளம்பரங்களை தங்கள் பத்திரிகையில் வெளியிட வேண்டும்.

அதிலும், சாதி கட்சிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்த "சாதி ஒழிக்கும் சமர்ப்புலிகளை" நினைத்தால் புல்லரிக்கிறது. இவர்களின் மாநாட்டில் சாதி தலைவர் கலந்து கொள்வார். ஆக, இவர்கள் சாதீயை ஒழிக்கவில்லை. தங்களை பற்றிய "உண்மையை" ஒழித்து கட்டி இருக்கிறார்கள். "ஆதிக்க சாதிகளின் அடாவடிகளையே ஒழிக்க முடியாத" - அதிலும் கூட ஆபத்தில்லாத ஆதிக்க சாதிக்க சாதியை எதிர்த்து தைரியமாய் குரல் கொடுப்பார்கள்.



இது தான் இவர்களின் சாதி ஒழிப்பு லட்சணம். நீங்கள் "சாதியை ஒழித்த சமர்ப்புலி" என்றெல்லாம் கூவுவது எதற்கு. அரசியல்வாதிகளை பீடித்துள்ள விளம்பர வியாதி - பகுத்தறிவாளர்களையும் பீடித்துள்ளது போலும். வெற்று விளம்பரத்துக்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் போலும்.

வெற்று ஆசைக்காக, வெறும் விளம்பரத்துக்காக வேணும் இப்படி செய்யுங்கள். சத்யராஜை கதாநாயகனாக போட்டு, கலைஞரை வசனம் எழுத வைத்து, வேலுபிரபாகரனை இயக்குனராக போட்டு "சாதியை ஒழித்த சமர்ப்புலிகள்" என்று படமெடுங்கள்.