தமிழ் தலித் இலக்கியம் குறித்துத் தமிழ்நாட்டுக்கும்,தமிழ் மொழிக்கும் அப்பால் ஆர்வம் கிளர்ந்துவருகிறது. இந்தியாவில் இருக்கும் முன்னணி ஆங்கிலப் பதிப்பகங்களான ஓரியன்ட் லாங்மன், ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி ப்ரஸ் மற்றும் பெங்குவின் முதலானவை தலித் இலக்கியப் பிரதிகளின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுவருகின்றன.நானும் ,எஸ்.ஆனந்தும் இணைந்து துவக்கிய நவயானா பதிப்பகமும்( www.navayana.org ) சில நூல்களை ஆங்கிலத்தில் வெளியிட்டுவருகிறது.அந்த வரிசையில் புதுச்சேரியிலிருக்கும் ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டும் சேர்ந்துகொண்டிருக்கிறது.’நவரத்தினங்களைப்’ போல ஒன்பது தலித் எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து( அவர்களை மட்டும் எப்படிப் பொறுக்கி எடுத்தார்களோ தெரியவில்லை) அவர்களது அனுபவங்களையும் , படைப்புகளையும் தொகுத்து ஒரு முன்னுரையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். ( http://www.ifpindia.org/Tamil-Dalit-Literature-My-Own-Experience.html )
இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் தலித் எழுத்துக்களைவிடவும் இதில் இடம்பெற்றிருக்கும் முன்னுரை மிகவும் ’சுவாரஸ்யமானது’. (அந்த முன்னுரையை தொகுப்பாளர்கள் இருவரும் சேர்ந்து எழுதியதாக அச்சிடப்பட்டிருக்கிறது.யார் சிந்தித்து யார் எழுதினார்கள் என்பது நமக்குத் தேவை இல்லாதது ) தமிழ் தலித் இலக்கியத்திலிருந்து பால் ஸெலான், ரால் ஸுரிடா, அல்லது பேட்ரிக் சமோஸு போன்றவர்கள் வெளிப்படுவார்கள் எனத் தாங்கள் இன்னும் காத்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள தொகுப்பாளர்கள் இதே நூலைத் தமிழில் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டபோது இருந்த நம்பிக்கையும் இப்போது பொய்த்துப் போய்விட்டதாக வருந்தியிருக்கிறார்கள்.(அப்புறம் ஏன் காத்திருக்கவேண்டும்?) அதாவது தமிழ் தலித் இலக்கியம் உருப்பெறுவதற்கு முன்பே செத்துப்போய்விட்டது என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். அந்த விதத்தில் தமிழ் தலித் இலக்கியத்துக்கான சமாதி என்று இந்தத் தொகுப்பைச் சொல்லலாம்.
யூதக் குடும்பத்தில் பிறந்து ஃப்ரான்ஸுக்குக் குடியேறி அங்கு மொழிபெயர்ப்பாளராக, விரிவுரையாளராகப் பணியாற்றிக் கவிஞராகவும் அங்கீகாரம் பெற்றவர் பால் ஸெலான். இரண்டாம் உலக யுத்தம், சோவியத் ஆக்கிரமிப்பு என்ற பின்னணியில் ஒரு யூதராக, ருமேனியாவைச் சேர்ந்தவராக வாழ்ந்து வதைபட்டவர் அவர். அத்தகையப் பின்னணி எதுவுமில்லாமல் தமிழ் தலித்துகளிலிருந்து ஒரு பால் ஸெலான் எப்படி உருவாக முடியும்?
சிலி நாட்டைச் சேர்ந்த ரால் ஸுரிடாவைப் போல ஐந்து விமானங்களைக் கொண்டு அவற்றின் புகையால் வானத்தில் தனது கவிதை வரிகளை எழுதவோ அல்லது பாலைவனத்தில் புல்டோஸரைக் கொண்டு தனது கவிதை வரிகளை எழுதவோ ஒருபோதும் தமிழ் தலித் எழுத்தாளர்களால் முடியாது.தமது படைப்புகளை எழுத நல்ல காகிதம் வாங்கவே கஷ்டப்படுகிறவர்கள் அவர்கள். அவர்களிலிருந்து எப்படி ஒரு ஸுரிடா வெளிப்பட முடியும்?
ஃப்ரான்ஸ் நாட்டின் காலனியாக இருந்து பின்னர் அதன் ’ஓவர்சீஸ் டிபார்ட்மெண்ட்டாக’ மாற்றப்பட்டிருக்கும் ஒரு நிலப்பகுதியைச் சேர்ந்தவர் சமோஸு. தமது காலனியவாதிகளின் மொழியை அவர் கையாளும் புதுமைக்காகப் பாராட்டப்படுகிறவர். அவர் எப்படி தமிழ் தலித்துகளுக்கான உதாரணமாக இருக்க முடியும்?
என்னைப் போல இணையத்தை நம்பியிருக்காமல் இந்த நூலின் தொகுப்பாளர்களுக்கு மேற்சொன்ன எழுத்தாளர்களின் நூல்களைப் ‘ பெறுவதற்கு’ வாய்ப்பிருக்கிறது. அவற்றை முதலில் அவர்கள் படிக்கட்டும்.புரிந்துகொள்ளட்டும். முடிந்தால் அந்த எழுத்தாளர்களைப் போல இவர்கள் ஒரே ஒரு படைப்பையாவது உருவாக்கட்டும்.ஏன் ஸெலானாக, ஸுரிடாவாக இவர்கள் ஆகக்கூடாது? பால் ஸெலானும், ஸுரிடாவும், சமோஸுவும் தமிழ் தலித்துகளிலிருந்துதான் பிறக்கவேண்டுமா? தலித் அல்லாதவர்களிலிருந்தும் பிறக்கலாமே! ஏன் தலித் அல்லாதவர்களிலும் அவர்களைத் தேடக்கூடாது? ஒரு படைப்பைக்கூட வேண்டாம் ஏன் அவர்களைப்போல ஒரே ஒரு வரியையாவது இந்தத் தொகுப்பாளர்கள் எழுதக்கூடாது?
ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் போன்ற நிறுவனங்கள் செய்வதற்கு எத்தனையோ ஆக்கப் பணிகள் இருக்கின்றன.தலித் எழுத்தாளர்களை அழைப்பார்களாம், அவர்களது படைப்புகளை வாங்குவார்களாம் அவற்றை வேலை மெனக்கெட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்களாம் ‘’ தலித் எழுத்தாளர்கள் சந்தைகளின் விதிகளால் ஆளப்படுகிறவர்கள்;தமது பத்திரிகைகளில்,வலைப்பூக்களில் புகழையும், பெருமையையும் இடைவிடாமல் விரட்டிக்கொண்டிருப்பவர்கள்” என்று அவதூறு செய்வார்களாம். என்னவொரு வித்தியாசமான பொழுதுபோக்கு! இதைக் காலனிய மனோபாவம் என்பதா? அல்லது பின் காலனிய அணுகுமுறை என்பதா?