நொய்டா, அக் 15-
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 84 ஏக்கர் பரப்பளவில் ரூ.685 கோடி செலவில் பிரமாண்டமான வகையில் தலித் நினைவகம் கட்டப்பட்டுள்ளது. அதில் தலித் தலைவர்கள் அம்பேத்கார், கன்சிராம் சிலைகளுடன் மாயாவதிக்கும் சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த கட்சியின் சின்னத்தை குறிக்கும் வகையில் 20 யானைகள் சிலையும் பூங்காவில் வைக்கப்பட்டது.
இந்த நினைவகம் மற்றும் பூங்காவை முதல்- மந்திரி மாயாவதி திறந்து வைத்தார். சிலை மற்றும் பூங்கா அமைப்பதற்கு ரூ.685 கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையெல்லாம் மாயாவதி பொருட்படுத்தாமல் நினைவகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய மாயாவதி தலித் இனத்தை சேர்ந்தவரை காங்கிரஸ் கட்சி பிரதமராக நியமிக்க வேண்டும். சபாநாயகர் மீராகுமார், மத்திய மந்திரி சுஷில்குமார் ஹிண்டே ஆகியோரில் ஒருவரை பிரதமராக்கலாம் என்று யோசனை கூறினார். அவரது கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்தது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியதாவது:-
பிரதமர் மன்மோகன்சிங் நேர்மையான பண்புள்ளவராக செயல்படுகிறார். எனவே இந்த நேரத்தில் அவரை மாற்ற வாய்ப்பில்லை. பிரதமர் பதவி காலியாக இல்லை. தலித்தலைவர்களை புறக்கணிப்பதாகவும், அவர்களுக்கு சிலை வைப்பதை எதிர்ப்பதாகவும் காங்கிரஸ் மீது மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். இது தவறு. பிரதமர் மன்மோகன்சிங் தலித் இனத்தவர்களுக்காக பாடுபட்டு வருகிறார். நினைவகங்களில் தலித் தலைவர்களது சிலை வைக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஆனால் தலித்தலைவர்களுடன் மாயாவதி தனக்குத் தானே சிலை வைப்பதும், அவரது சிலைக்கு அவரே மாலை அணிவிப்பதும்தான் சரியில்லை. அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதை மாயாவதி புரிந்து கொள்ளவேண்டும். நேரு, இந்திரா காலத்தில் இருந்து சோனியா காந்தி வரை தலித் இனத்தவர்களுக்காக காங்கிரஸ் பாடுபடுகிறது. அவர்களுக்கு இட ஒதுக்கீடும் அளித்துள்ளோம். ஆனால் மாயாவதிதான் அவர்களைப் பற்றி பேசி ஓட்டு வாங்கும் அரசியல் நடத்துகிறார்.
ஆனால் ராகுல் காந்தி தலித் மக்களின் ஆதரவை பெற்று வருகிறார். வானவில் போல உயர் பிரிவினரையும், தலித் மற்றும் முஸ்லிம்களையும் சமமாக மதிக்கிறோம்.
இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.