திருச்சி : ""பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் தலித்கள் கொல்லப்பட்ட விவகாரம், மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்,'' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். திருச்சியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஆயத்தமாக போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியல் வெளியீடு, உள்ளாட்சி அமைப்புகளின் எல்லை வரையறை ஆகியவை அறிவிக்கப்படும் முன், ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டாக இருந்த ஒன்பது கட்சிகளை கடைசி நிமிடம் வரை, கூட்டாளி என்று நினைக்க வைத்து அ.தி.மு.க., ஏமாற்றி விட்டது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அதிக இடங்களை பிடித்து விடலாம் என்ற அ.தி.மு.க., கனவு பலிக்காது. மாறாக மிகப்பெரிய தோல்வியே கிடைக்கும். புதிய தமிழகம் கட்சி, இந்த தேர்தலை சவாலாக எடுத்துக் கொண்டு கடுமையாக பணியாற்றி வருகிறது. போட்டியிடும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம். கடந்த செப்., 11ம் தேதி பரமக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒன்பது தலித்கள் இறந்தனர்.
இதற்கு குறைந்தபட்ச மனிதாபிமான விஷயமான ஆறுதல் கூட, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கவில்லை. இதை ஜாதிக் கலவரமாக சித்தரிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டில் தலித்கள் கொல்லப்பட்ட விஷயம், திருச்சி மேற்கு தொகுதியில் நிச்சயம் எதிரொலிக்கும். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு புதிய தமிழகம் நிச்சயம் ஆதரவு தரவில்லை. நேர்மையான சுயேச்சைகளுக்கு ஆதரவு தருவோம். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
திருச்சி ஜங்ஷன் அருகே செந்தூர் ஓட்டலில், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியை, தி.மு.க., எம்.பி., விஜயனும், மாநகர இளைஞரணி அமைப்பாளர் தங்கமணியும் நேரில் சந்தித்து, திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆதரவு தர கோரிக்கை விடுத்தனர்.