ஊழல்கள் எப்படி நடக்கின்றன ? - (புதிய தாட்கோ ஊழல் குறித்த புலனாய்வு ரிபோர்ட்)


1.75 லட்சம் கோடி, 2 லட்சம் கோடி என விரிந்து கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் வலையின் பிரம்மாண்ட ஊழல் ரசிகரா நீங்கள்? அப்படியானால் முன்னமே சொல்லிவிடுகிறோம் இது வெறும் ரூ.2 கோடி சம்பந்தப்பட்ட பிரச்சனை. ஆனால், இந்த ஊழல் பெருச்சாளிகள் எப்படிச் செயல்படுகிறார்கள். அவர்களின் மாய உலகம் எப்படி அம்பலமாகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் செய்தியை நீங்கள் படித்தாக வேண்டும்.

படாபடோபமாக அறிவிக்கப்படும் திட்டங்களை முதலாளித்துவம் எப்படி கபளீகரம் செய்கிறது. இந்த அரசியல் வாதிகளின் ஸ்பெக்ட்ரம் எப்படி விரிகிறது. அது எப்படி நல்ல அதிகாரிகளை தூக்கியடிக்கிறது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளவே நமக்கு வேதனையாக இருக்கிறது. இந்த சுதந்திரத்திற்காகவா நாம் போராடினோம்? ... இத்தனை நடக்கும்போதும்,  சுதந்திர தினத்தன்று ஜெய்ஹிந்த் என்று சொல்லி முடித்துக்கொள்வதாகவல்லவா நமது நாட்டுப்பற்று சுருங்கிக் கிடக்கிறோம் என்ற சிந்தனை நம்மை சுறுக் என தைக்கிறது.

அரசு ஒதுக்கிய நமது வரிப்பணம், அதுவும் தலித் மக்கள் முன்னேற்றத்திற்காக, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பணம் இப்படி களவாடப்படுமானால், எத்தனை காலமானாலும் இந்த ஆட்சியாளர்களால் சமூக முன்னேற்றத்தை சாதித்திட முடியாது என்று தோன்றுகிறது. ஆ.ராசா பாதிக்கப்பட்டால் அது தலித் மீதான தாக்குதல் என்று கொதிக்கும் முதலமைச்சர் ... இப்போது பாதிக்கப்பட்டிருக்கும் தலித்துகள் குறித்து என்ன சொல்கிறார் என்று  பொருத்திருந்தே பார்க்க முடியும்.


கோவாவுக்கு டூருக்காக சென்றபோது எடுத்த புகைப்படத்தை காமிரா பயிற்சியின்போது எடுக்கப்பட்டதாக காட்டப்பட்டிருக்கும் படம் ...




கோவை, நீலகிரி மாவட்டங்களில் தலித் மற்றும் பிற் படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசுத் திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற் பயிற்சி அளிப்பதாகக் கூறி, தமிழக அரசு நிர்வாகத்தின் ஆசியோடு கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஒரு தொண்டு நிறுவனத்தின் பெயரில் சூறையாடலுக்கு ஆளும் கட்சி  அமைச்சர்கள்  துறை செயலாளர்கள் உடந்தை யோடு இந்த கூட்டுக் கொள்ளை அரங்கேற்றப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டம் பொள் ளாச்சி தாலுகா அம்பராம்பாளை யத்தில் டாக்டர் ஆல்வா பாரா மெடிக்கல் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஆல்வா என்பவர் கடந்த 2001ம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சி லின் அங்கீகாரம் பெற்று இந்நிறு வனத்தை நடத்தி வருகிறார். இங்கு நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது டன், மாணவர்களுக்கு ஜெனரல் நர்சிங் மற்றும் மிட் ஒய்ப்பரி கோர்ஸ் எனப்படும் செவிலியர் பணிக்கான பயிற்சி வகுப்பு கற்றுத் தரப்படுகின்றது. இதன் நிறுவனர் டாக்டர் ஆல்வா, கோவை புலியகுளத் தைச் சேர்ந்த நவநீத சிவக்குமார் என்பவருடன் இணைந்து 2006ம் ஆண்டு மார்ச் மாதம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் ஃபனா எஜுகேசனல் அண்டு சேரிட்டபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையைத் துவக்கியுள்ளார்.
இந்த அறக்கட்டளை கடந்த 2006ம் ஆண்டு முதல் தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்) திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்புடன் கூடிய சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்தத் தொடங் கியது. இத்திட்டத்தின் கீழ் தாட்கோ நிறுவனம் ஒவ்வொரு மாணவருக்கும் 12 மாத காலப் பயிற்சிக்கு  ரூபாய் 25 ஆயிரம் வீதம் வழங்குகிறது. இந்த பணம் பெரும் பகுதி கூட்டுக்கொள்ளைக்கு இரையாகியுள்ளது. திட்டத்தின் நோக்கம் ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது.
போலி பேரேடு மோசடிமுதலில் 2006 - 07ம் கல்வி ஆண்டில்  ஆதிதிராவிட மாண வர்களுக்கு கோவை தாட்கோ மூலம் 40 மாணவர்களுக்கு விஷுவல் மீடியா பயிற்சி அளிக்க அனுமதி பெற்றது. பயிற்சியாளர்களை தாட்கோ அலுவலர்களும் ஃபனா நிறு வனத்தினரும் இணைந்து தேர்வு செய்ய வேண்டும்.  பயிற்சிக் கான உபகரணங்கள் வழங்கு தல், திட்ட அறிக்கை அனுப்பு தல், மாணவர் பயிற்சிக் காலம் முடிந்த பின்னரே பயிற்சிக்குரிய தொகை வழங்கப்படும் என்று 12க்கும் மேற்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் எவற்றையும் பின்பற்றவில்லை என்னும் மோசடி வெளிச் சத்திற்கு வந்துள்ளது.  மேலும் இந்நிறு வனம் நடத்தும் பாடங்களுக்கான ஆசிரியர்கள் சம்பந் தப்பட்ட படிப்பை படிக்காதவர்கள் என்பது தனிக்கதை. 
பொள்ளாச்சி ஆல்வா நர்சிங் மையத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின்  ஆவ ணங்களைக் கொண்டே, கோவை ஃபனா நிறுவனத்தில் மாணவர்கள் படிப்பது போல் மோசடியாக ஆவணங்களை தயாரித்துள்ளனர். இப்படிக் கணக்குக் காட்டி 40 மாணவர்களுக்கு தாட்கோ நிறுவனம் வழங்கும் நிதி சுமார் ரூ.10 லட்சத்தை சூறையாடியுள்ளனர்.
இதேபோல், பல்வேறு பாடப் பிரிவுகளை நடத்தியதாக சுமார் இரண்டு கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இவ்வாறு விஷுவல்மீடியா என்ற ஒரு பயிற்சிக்கு மட்டும் மோசடி செய்து ருசி கண்டவர்கள், அடுத்தடுத்து தங்கள் மோசடி வலையை விரிவுபடுத்தினர். 2007-08 ம் ஆண்டு விஷுவல் மீடியா-40 பேர், சவுண்டு ரெக்கார்டிங்-30 பேர், சினிமாட்டோ கிராஃபி-40 பேர், டிஜிட்டல் ஃபிலிம் மேக்கிங்-30 பேர், பிராட்காஸ்ட் ஜர்னலிசம்-30 பேர், சவுண்டு எடிட்டிங்-30 பேர், டிஜிட்டல் போட்டோ கிராபி-30 பேர், ஆன்சிலரி நர்சிங் மிட்வொய்ப்ரி -35 பேர், நீலகிரி மாவட்டத்தில் ஏஎன்எம் 40 பேர் என்று அடுத்தடுத்து தாராளமாக அனும
தியைப் பெற்றுள்ளனர். மேலும் அனுமதியே பெறாமல் நவீன எடிட்டிங் தொழில்நுட்பம் என்ற பயிற்சிக்கும் 60 மாணவர்களை சேர்த்ததாகவும் வேறு கணக்கு காட்டியுள்ளனர்.
இதேபோல் 2008-2009ம், 2009-2010ம் ஆண்டுகளில் விஷுவல் மீடியா சவுண்டு எடிட்டிங் இவற்றோடு ஆப்தால்மிக் கேர் (கண்அறுவை சிகிச்சை), ஏஎன்எம் (ஊட்டியில்)-25,  ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ் என ஏறத்தாழ மொத்தம் 350 மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததாக அரசின் ஆவணங்கள் உள்ளது.
இத்தனை பயிற்சி வகுப்புகளுக்கும் தாட்கோ நிர்வாகம் எப்படி அனுமதி கொடுத்தது என்பது வியப்பாக உள்ளது. மொத்தம் 2006 முதல் 2010 வரை 880 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்ததாக கணக்கு உள்ளது. இதன்படி ஒரு மாணவருக்கு ரூ.25 ஆயிரம் என்றால், மொத்தம் தோராயமாக ரூ.2 கோடியே 20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது!
மாணவர்கள் கொதிப்பு:
ஃபனா நிறுவனத்தில் 2009-10ம் ஆண்டில் கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ் படித்ததாகச் சொல்லப்படும் உடுமலைத் தாலுகா சாம்ப்ராயம்பட்டி பார்த்
தசாரதிபுரத்தில் உள்ள மணிமேகலையைச் சந்தித்தோம். அவர் கூறியதாவது: “2007ம் ஆண்டு பொள்ளாச்சி ஆல்வா மருத்துவமனையில் கிளினிக்கல் நர்சிங் அசிஸ்டெண்ட் வகுப்புப் படித்தேன். அதன் பின்னர் எதுவும் படிக்கவில்லை. அதுவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் இலவசப் பயிற்சி அளிப்பதாக தேர்வு செய்தனர். ஆனால் விடுதிக் கட்டணம் என்ற பெயரில் மாதம் ரூ.1000 செலுத்திப் படித்தேன். எனது சான்றிதழ்களை மோசடியாகப் பயன்படுத்திய விபரம் எதுவுமே எனக்குத் தெரியாது” என்று மிகவும் ஆவேசப்பட்டார்.  
மகேஷ்வரி பெயரில் தரப்பட்டிருக்கும் போலி ஆவணம்
அதே போல், பொள்ளாச்சி பொங்காளியூர் மகேஸ்வரி, கப்பளாங்கரை மோகனப் பிரியா ஆகியோரின் பெயரிலும் இதேபோல் மோசடி நடைபெற்றுள்ளது. சுப்பே கவுண்டன் புதூர்  தங்கவேலு மகள் ரங்கநாயகி கூறியதாவது, தாட்கோ மூலம் நர்சிங் மட்டுமே படித்தோம். அப்போதுகூட மாதம் 200 மட்டுமே உதவித்தொகையாக  வழங்கினர். கடைசி ஐந்து மாதங்கள் அதுவும் வழங்கப்படவில்லை. நான் ஃபனா நிறுவனத்தில் ‘கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ்’  படிக்கவில்லை என்றார்.
உண்மையான மகேஷ்வரி
மேலும் பொள்ளாச்சி, சிங்காநல்லூர் சுப்பிரமணியம் என்பவரது மகள் மகேஸ்வரி, அதே ஊரைச் சேர்ந்த மாசிலாமணி ஆகியோரும், “நாங்கள் `நர்சிங் மட்டுமே படித்தோம், வேறு எந்தப் பயிற்சியும் பெறவில்லை. ஆவணங்களில் முழுப் புகைப்படங்களும், முகவரியும் மோசடியாக மாற்றி வைக்கப்பட்டுள்ளதும், நாங்கள் பெறாத உதவித் தொகையைப் பெற்றதாக உள்ளதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்றனர். 
இதேபோலத்தான் ஆல்வா மருத்துவமனைக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சுப்பேகவுண்டன் புதூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகள் மகாதேவி, அம்பராம்பாளையம் அருகிலுள்ள கெட்டிமங்களம் புதூரைச் சேர்ந்த ரங்கன் என்பவரது மகள் கௌரிஅம்மாள் ஆகியோரும் 2006-07ல் நர்சிங் பயிற்சி மட்டுமே பெற்றதாகக் கூறினர். ஆனால் இவர்கள் அனைவருமே 2009-10ல் கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ் பயிற்சியை ஊக்கத் தொகையுடன் பெற்றதாக மோசடியாக உள்ளது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

தடையாக இருந்தவரை பந்தாடிய அதிகாரிகள் ...
இந்த பாடங்கள் அனைத்தும் முறையாக, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும் அதி
காரியாக தாட்கோ மேலாளர் இருப்பார். அப்படி கோவையில் இருந்தவர் கோபால் என்பவர்.  முறைகேடு நடைபெற்ற நான்கு கல்வி ஆண்டுகளில்  2008ம் ஆண்டு மே மாதத்தில்  கோபால் ஆய்வுக்காக ஃபனா நிறுவனத்திற்கு சென்றிருக்கிறார். 


அப்போது மொத்தம் 200 பேர் பயிற்சி பெற இந்நிறுவனம் அனுமதி பெற்றிருந்தது.  ஆனால் ஆய்வின் போது வெறும் 20க்கும் குறைவான மாணவர்களே இருந்துள்ளனர். மற்றவர்கள் எங்கே என்று கேட்டுள்ளார். உடனே ஃபனா நிறுவன நிர்வாகிகள் வேறு இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றிருப்பதாக கூறியிருக்கின்றனர். சரி அந்த இடத்தை சொல்லுங்கள். அங்கு போய் ஆய்வு செய்து கொள்கிறேன் என்றிருக்கிறார்.


உடனே நிர்வாகிகள் எங்களுக்கு சில அமைச்சர்கள் மற்றும் தாட்கோவில் அப்போதிருந்த செயலாளர் ஆகியோரின் பெயரை கூறி எல்லாம் எங்களுக்கு நெருக்கம். ஆகவே ஆய்வை இத்தோடு முடித்து கொண்டு நீங்கள் செல்லலாம். நீங்கள் என்னவேண்டுமானாலும் எழுதி கொள்ளுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். உடனே வருகை பதிவேட்டை எடுத்து எழுத முயன்றவரை தடுத்துள்ளனர்.

பின்னர் அலுவலகம் திரும்பிய கோபாலுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அதாவது அந்த நிறுவனத்தின் வருகை பதிவேட்டை அபகரித்து சென்றதாகவும், மற்றவர்கள் எங்கே என்று கேள்வி கேட்டதாகவும், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் புகார் வந்திருந்தது. கோபாலுக்கு மேல் உள்ள உயரதிகாரிகளும் இதற்கு விளக்கம் கொடுங்கள் என நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதோடு காத்திருப்பு பட்டியலுக்கு அவரின் பெயர் மாற்றப்பட்டது.

2007-08ம் ஆண்டில் ஃபனா நிறுவத்தில் நவீன எடிட்டிங் பயிற்சி பெற்றதாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வால்பாறை பகுதியைச் சேர்ந்த மாணவர்களைச் சந்தித்தோம்.  வால்பாறை சோலையார் எஸ்டேட்டில் பணியாற்றும் கலிய
பெருமாள் என்பவரது மகள் சீமா, “2006-07 ஓராண்டு ஏ.என்.எம் என்ற நர்சிங் படிப்பை ஆல்வா மருத்துவ மையத்தில் படித்தேன். வேறெதுவும் படிக்கவில்லை.” என்றார். அதேபோல் சோலையார் எஸ்டேட்டைச் சேர்ந்த மாரிமுத்து மகள் விசயலட்சுமி நர்சிங் படித்து திண்டுக்கல் தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாகப் பணிபுரிகிறார். இவரும் ஃபனா இன்ஸ்டியூட்டில் ‘நவீன எடிட்டிங்’ பயிற்சியோ வேறு எந்த படிப்புமோ படிக்கவில்லை என்று மறுத்தார்.  மேலும் வெறும் மூன்று மாதமே கற்பித்ததாக கணக்கு காட்டிவிட்டு 30 மாணவர்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.7லட்சத்து 50 ஆயிரம் நிதியினை தாட்கோவிலிருந்து சுருட்டியுள்ளனர்.
2007-08ம் ஆண்டில் எடிட்டிங் பயிற்சி படித்ததாகப் பட்டியலில் உள்ள பெயர்களை விசாரித்தபோது அவர்கள் அனைவரும் தங்களுடன் நர்சிங் படித்த மாணவிகளே என்பதையும் தெரிவித்தனர்.  எனவே பொள்ளாச்சி, அம்பராம்பாளையம் ஆல்வா பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட்டில் நர்சிங் கோர்ஸ் படித்த மாணவர்களை அப்படியே கோவை ஃபனா நிறுவனம் மூலம் எடிட்டிங் பயிற்சி பெற்றதாக மோசடி செய்துள்ளது உறுதியாகிறது.  
அதிலும் கொடுமை என்னவென்றால், நவீன எடிட்டிங் பயிற்சிக்கு 2007-2008ம் ஆண்டிற்கு உரிமம் புதுப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவே இல்லை. ஆனால் ஒதுக்கிய பணம் செலவழிக்கப்பட்டு விட்டதாம்.
ஊட்டியிலும் மோசடி!
இதே பாணியில் நீலகிரி மாவட்டம் எல்லநல்லி பேரூராட்சியில் உள்ள ஆறுமுகம் மகள் ரம்யா 2007-08ல் பொள்ளாச்சி ஆல்வா பயிற்சி மையத்தில் ஏஎன்எம் பயிற்சி பெற்றுள்ளார். அதேபோல் ஊட்டி, பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த ஏ.கோமதி, ஜகதளா பேரூராட்சியில் எம்.நிர்மலா ஆகியோரும் நர்சிங் (ஏஎன்எம்)  பயிற்சி தான் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும், கோவை ஃபனாவில் விசுவல் மீடியா படித்ததாக ஆவணங்கள் இருப்பதைப் பார்த்து மிகவும் நொந்து போயினர்.  தங்கள் சான்றிதழ்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.  
மேலும் இது குறித்து ஃபனா நிறுவனத்தில்  நிர்வாக பிரிவில் பணியாற்றிய  மனோஜ் என்பவரிடம் உங்கள் நிறுவனத்தில் படிக்காதவர்களின் பெயர்களை எப்படி படித்ததாக கூறுகிறீர்கள் என்று கேட்ட போது, அவர் கூறியதாவது :
“நான் பணியாற்றி கொண்டிருந்த போது ஃபனா நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்டோர் படிப்பதாக கணக்கு எழுதப்பட்டிருந்தது. நான் ஃபனா நிறுவன நிர்வாகிகளிடம் இங்கு இல்லாதவர்களின் பெயர்களில் நானும் இணைந்து பணத்தை எடுக்க அனுமதித்தால் பின்னாளில் எனக்கு பிரச்சனை வராதா எனக் கேட்டேன். அதற்கு நாங்கள் சொல்வதை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும். கேள்வி கேட்கக் கூடாது. எங்களுக்கு தெரியாமலா இதனை செய்கி
மனோஜ்
றோம். துறைச் செயலாளர் முதல் அமைச்சர் வரை எல்லோரும் நமக்கு இந்த விஷயத்தில் ஆதரவுதான். ஆகவே அதைப்பற்றி கவலைப் பட வேண்டாம் என்று கூறினார்கள். பின்னாளில் எனக்குள் பயம் அதிகரித்தது.  தொடர்ந்து  வரவு- செலவு கணக்குகளை நான் பார்த்துக் கொண்டிருந்த போது  பணவரவு செலவுகளில் நிறைய முறை கேடுகள் நடப்பது தெரிய வந் தது. மேலும் மாணவர்களின் பெயர்களில் இருக்கும் மொத்த ஏடிஎம் கார்டையும் எடுத்து இவர்களே பணத்தை எடுத்து வருவார்கள். இது மேலும் எனக்கு பயத்தை அதிகரித்தது. இனிமேல் இது நமக்கு சரி வராது என நானே வேலையை விட்டு நின்று விட்டேன்.  ஆகவே எனக்கும் அங்கு நடக்கும் முறை கேட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இங்கு மட்டும் இப்படி நடக்கவில்லை இந்த திட்டங் கள் செயல்படுத்தப்படும் பல மாவட்டங்களில் இது போன்ற முறைகேடுகளை  ஒருங்கிணைக் கவே சில நபர்கள் இருக்கிறார் களாம் நான் அவர்களை பார்த்த
தில்லை என்றார்.
இந்த முறைகேடு குறித்து சில உயரதிகாரிகளை சந்தித்து நேரில் விளக்கம் கேட்க முயன்றும் அதிகாரிகளை சந்திக்க இயலவில்லை. இது குறித்து கடந்த 45 நாட்களுக்கு முன்பே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் சில கோப்புகள் கேட்டு தாட்கோ நிர்வாகத்திற்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. இதுநாள் வரை அதற்கான பதிலும் வரவில்லை. 
அடி முதல் முடி வரை, அதிகாரிகள் முதல் கல்வி பயிற்சி நிறுவனங்கள்வரை  கூட்டுக் கொள்ளை நடப்பதை இந்த ஒரு சம்பவம் அம்பலப்படுத்துகிறது. இதுதான் தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் நிலவரமா என்ற கேள்வி எழுகின்றது. சமுதாயத்தின் அடிமூட்டையாக மூச்சுத்திணறி வரும் தலித் மக்களையும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களையும் மேம்படுத்துவதற்காக தீட்டப்படும் திட்டங்கள், ஆளும் அரசியல் சக்திகள், அதிகார வர்க்கம் மற்றும் தனியார் கொள்ளைக் கூட்டத்தின் சூறையாடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.இந்த குற்றவாளிகளைத் தண்டிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
(நன்றி: தீக்கதிர்)

கூடுதல் தகவல்: இந்த செய்தி குறித்து விளக்கம் கேட்க தாட்கோவுக்கான அமைச்சர் தமிழரசியை தொடர்பு கொண்டபோது, ”இந்த பயிற்சியை நாங்கள் மத்திய அரசு உதவியுடன் கொடுத்து வருகிறோம்” என்றார். பின்னர் அதற்காக ஆதித் திராவிடர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையைக் குறிப்பிட்டு, இந்த திட்டத்திற்கு தனியார் நிறுவனத்திடம் ரூ.7.5 லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டு பேசியவுடன் ... சமாளித்துக் கொண்ட அவர் “தவறாக செய்தி வெளிவந்துவிடக் கூடாது என்பதே எனது நோக்கம். தவறு நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். உறுதியுடன்.

thanks to maattru



        இது போன்று எங்களுக்கு அரசால் கிடைக்கும் சலுகைகளை பறித்து உண்ணும் பழக்கம் உடையவர்களே. எங்க்களுடைய இப்பணம் உங்களுக்கு நாற்றம் அடிக்கவில்லயா???,, இப்போது எங்கு போனது உங்களுடய தீண்டாமை ??? ,, நினைக்கவே வேதனையாக உள்ளது


                                                                                                      -- அருந்ததியன்