உள்ளாட்சித் தேர்தல்கள் பெண்களை அதிகாரப்படுத்துமா?

சாதிய உணர்வும், ஆணாதிக்க சமுதாய அமைப்பும் நடைமுறையில் உள்ள இந்தியாவில், சமம், சமத்துவம், அதிகாரம் ஆகியவற்றுக்காக, தலித்துகளும், பெண்களும் பொதுவெளியில் எப்பொழுதுமே போராட வேண்டியுள்ளது. அதுவே தலித்துகள், பெண்களாக இருந்துவிட்டால், இந்தப் போராட்டம் மிகக்கடுமையானதாக இருக்கிறது.
இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, நெல்லை மாவட்டம் தாழையூத்தின் தலித் பஞ்சாயத்துத் தலைவி கிருஷ்ணவேணி. 2006-ம் ஆண்டு, அவர் பஞ்சாயத்துத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுமுதலே, அவர் செயல்படத் தொடர்ந்து முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவரிடமும், காவல்துறை அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் பயனில்லாமல் போயுள்ளது. உச்சகட்டமாக, கடந்த ஜூன் மாதம், அவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டு, மருத்துவமனையில் அவர் உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டது.
இத்தனைக்கும், கிருஷ்ணவேணி, மத்திய அரசின் கிராமப்புற நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தியதற்காக, குடியரசுத் தலைவரிடமிருந்து விருது வாங்கியவர். இப்படிப்பட்ட பிரச்னைகள் பல இருந்தாலும், சமம், சமத்துவம், அதிகாரப்பரவலாக்கல் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய குறிக்கோள்களை நோக்கிப் பயணப்படுவதற்கும், அவற்றுக்கு அவசியமான நமது அடிப்படை ஜனநாயகம் வலுப்படுவதற்கும், சிறந்த வாய்ப்பை, பஞ்சாயத்து ராஜ் மட்டுமே அளிக்கிறது என்றால் மிகையில்லை.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், மிக வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் மாநிலமாகக் கருதப்படுகிறது. இந்திய மாநிலங்களிலேயே, மிக அதிகமாக நகரமயமாக்கல் நடந்துள்ள மாநிலமும் தமிழகம்தான். கிட்டத்தட்ட 49 சதவீத மக்கள், தமிழகத்தின் 600 நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள் என்கின்றன சமீபத்திய புள்ளிவிவரங்கள். நமது பெரும்பாலான கிராமங்கள், நகர்களை ஒட்டியே உள்ளன. ஆயினும், நகரமயமாக்கலினாலும், பொருளாதார வளர்ச்சியாலும் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் என்னவென்றால் ஒரு சிலவற்றைத் தாண்டி, உறுதியாகக் கூற அதிகம் ஒன்றுமில்லை.
இன்று நம்மைப் போன்ற மாநிலங்களில், வளர்ச்சி உண்டு, ஆனால், அவை குன்றாது நீடித்திருக்குமா என்பது நிச்சயமில்லை. ஒப்பீட்டளவில், கட்டமைப்பு வசதி உண்டு. மக்களுக்கு அதனால் மகிழ்ச்சி இல்லை. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தமிழக அரசு, இன்னும் ஆடுகளையும், ஜெர்சி மாடுகளையும் ஏழைக் கிராம மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கத் தொடங்கவில்லை. ஆனால், இன்றுள்ள நம்மூர் கால்நடைகளுக்கே தமிழகத்தில் போதிய மேய்ச்சல் நிலமில்லை என்பதுதான் உண்மை.
நம்மிடம் எண்ணிக்கை உண்டு, தரம் இல்லை. பொருளாதாரம் உண்டு, அதில் சமத்துவமில்லை. பள்ளிகளும் கல்லூரிகளும் உண்டு, ஆனால், அங்கு மேம்படுத்தக்கூடிய கல்விதான் இல்லை. பெண்கள் உண்டு, போதிய அதிகாரம் இல்லை. இளைஞர்கள் உண்டு, அவர்களில் பெரும்பாலானவர்களிடம் சமூகப் பங்களிப்பு இல்லை. மக்களுக்கு ஓட்டு உண்டு, ஆனால், ஆளுகையில் பங்கெடுப்பு இல்லை. அரசியலில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டு, அரசின் இலவசத் திட்டங்களின் பயனாளிகளாக, மனுப்போடுபவர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பிரசவம், பாப்பாவுக்குச் சத்துணவு, பிள்ளைகளுக்குச் சீருடை, தாலிக்கு 4 கிராம் தங்கம், பொழுதுபோக்குக்குத் தொலைக்காட்சி, தினமும் சோறு வடிக்க அரிசி, பருப்பு, மேய்க்க ஆடு, மாடு, பொங்கலுக்கு உடுத்த வேட்டி, சேலை, இறந்தால் அமரர் ஊர்தி என்று அத்தனையும் அரசிடமிருந்து மக்களுக்கு இலவசம். ஆனால், இதற்கான நிதிஆதாரம் அரசிடம் இல்லை. அத்தனைக்கும், டாஸ்மாக் சாராயம் மூலம் மிக வெளிப்படையாக மக்களிடமிருந்தே சுரண்டித்தான் கொடுக்க வேண்டும்.
வளர்ந்து வரும் தமிழகத்தின் சுற்றுச்சூழல் வேகமாக நாசமாகிக் கொண்டிருக்கிறது. நிலம், நீர், காற்று எல்லாமே வீணாகி விஷமாகிக் கொண்டிருக்கின்றன. சுத்தம், சுகாதாரம் உண்மையாகவே ஒரு மிகப்பெரிய பிரச்னை. தரமான குடிநீர், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கானல்நீராகி விட்டது. உள்ளாட்சியின் ஈடுபாடு இல்லாமையால், உள்ளாட்சிகள் ஈடுபடுத்தப்படாமையால், பன்னாட்டு நிறுவனங்களும் பெருநிறுவனங்களும்தான் உள்ளே நுழைந்து, எல்லா சேவைகளையும் தனியார்மயமாக்கி ஆட்டுவித்து வருகின்றன.
ஊர்கள்தோறும் கட்டப்பஞ்சாயத்து, நிலமோசடி, வேலைதேடி பெரும்பாலான இளைஞர்கள் இடம்பெயர்வு, வெளிமாநில மக்கள் அதிகமாகக் குடியமர்வு, குழந்தைத் தொழிலாளர்கள், வரலாறு காணாத அளவு பெருகிவிட்ட சாராயம், புகையிலை, போதைப்பாக்கு நுகர்வு, பெருகிவரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லங்கள், முதியோர் இல்லங்கள், கணவரால் கைவிடப்பட்ட கைம்பெண்கள். இவை எல்லாமே, பொருளாதார வளர்ச்சி காணும் தமிழகத்தின் மறுபக்கங்கள்.
மேற்சொன்ன பெரும்பாலான பிரச்னைகளுக்கெல்லாம் ஒரு வடிகால், ஒரு நிவாரண மருந்து, மக்கள் பங்கேற்புடன் கூடிய வலுவான உள்ளாட்சி அமைப்புகள்தான்.
வளர்ச்சித்திட்டங்களையும், சமூகப்பாதுகாப்புத் திட்டங்களையும் தில்லியிலும், மாநிலத் தலைநகரங்களிலும் உட்கார்ந்திருப்பவர்கள் வடிவமைத்து, அவற்றை அமல்படுத்தக்கோரும் ஆணைகளையும் பிறப்பிப்பது பொருத்தமற்றது என்பதால்தான், 73-வது, 74-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் 1993-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
அதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் 11-வது அட்டவணையில் கொடுக்கப்பட்ட 29 துறைகளுக்கான திட்டங்கள், உள்ளாட்சிகள் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் பங்கேற்கும் அதிகார அமைப்புகளின் மூலமே, வளர்ச்சியின் பயனும், பொருளாதாரத்தில் சமத்துவமும், கிராமங்களில் வேலைவாய்ப்பும், சமூக நீதியும் எல்லா மக்களையும் சென்றடையும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், நடைமுறையில் எல்லா அதிகாரங்களும், நிதியாதாரங்களும் மத்திய மாநில அரசுகளிடமும், அதிகாரிகளிடமும்தான் இன்றைக்கும் குவிந்து கிடக்கின்றன.
ஆயினும், மக்கள் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை, அவற்றின் தேவையைப் புரிந்துகொள்ளத் தொடங்கி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 16 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. தீவிரவாதம், ராணுவம் ஆகியவற்றுக்கு நடுவே அகப்பட்டு அல்லல்பட்டுக் கொண்டிருந்தாலும், காஷ்மீர் மக்கள் அடிப்படை ஜனநாயகத்துக்கான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். 60 முதல் 90 சதவீதம் வரைகூட அங்கு வாக்களிப்பு நடந்தது.
ஏற்கெனவே, உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், பிகார், ஹிமாச்சல பிரதேசம், ம.பி., ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு என்று சட்டமியற்றியுள்ளன. கேரளத்தில் கடந்த ஆண்டும், பிகாரில் கடந்த மாதமும் வெற்றிகரமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, மிக அதிக அளவிலும், மிக ஆர்வமாகவும் பெண்கள் பங்கேற்றுள்ளார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வந்து உள்ளாட்சித் தலைவர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
இப்பொழுது, பெண்களுக்கு உள்ளாட்சிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு எனும் நாடுதழுவிய சட்டத்திருத்தத்தை, இந்த நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசின் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஆயினும், இது கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு மட்டுமே. இன்றைக்கு நாடாளுமன்றம் ஊழல் பிரச்னைகளாலும், லோக்பால், மன்னிக்கவும், ஜோக்பால் அரசியல் விளையாட்டுகளாலும் அமளிதுமளியில் இருப்பதால் இந்தச் சட்டத்திருத்த மசோதா இக்கூட்டத்தொடரில் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியே.
நமது தமிழகம், மிகவும் சக்தி வாய்ந்த பெண் முதல்வரை மக்கள் தலைவராகக் கொண்டுள்ளது. பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் காவல் நிலையங்கள், தொட்டில் குழந்தைத்திட்டம் உள்பட, ஆளுகையில் ஒரு பெண்ணியப் பார்வையைக் கொண்டுவந்தது ஜெயலலிதாவின் ஆட்சியில்தான். ஆனால், புதிய அரசின் பட்ஜெட் உரையில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றி கொள்கை ரீதியாக எதுவும் கூறப்படாதது, சமூக ஆர்வலர்களிடம் வியப்பையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என்றால் மிகையில்லை. யாரும் முதல்வரின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்லவில்லையா என்பது புரியவில்லை.
முற்போக்குச் சிந்தனை கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களாவது, இதுகுறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று வலியுறுத்த வேண்டும். தமிழகம், இந்தியாவிலேயே மிக அதிகமாக 49 சதவீத நகர்ப்புறத்தைக் கொண்டுள்ள மாநிலம் என்பதால், பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்படும்பொழுது, அது கிராமப்புறம், நகர்ப்புறம் எல்லாவற்றுக்குமான உள்ளாட்சிப் பதவிகளுக்கானதாக இருப்பது நலம்.
தமிழகத்தில் பல பிரச்னைகள் இருந்தாலும், அனுபவமிக்க, ஆர்வமிக்க பெண்கள் தயாராகவே உள்ளனர். சுயஉதவிக் குழுவினர், செவிலியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். குறைந்த அளவில் இருந்தாலும், சமுதாய ஆர்வமிக்க படித்த இளைஞர்களும் உள்ளனர். சுற்றுச்சூழல் மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை, எல்லா கிராமங்களிலும் குடிநீர் ஆதாரங்கள், சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், மக்கள்நலத் திட்டங்கள் போன்றவற்றை வெற்றிகரமாகவும், ஊழல் நாற்றம் அடிக்காமலும் செயல்படுத்த நினைக்கும் மாநில அரசுக்கு, இந்தப் புதிய பெண் ஊராட்சித் தலைவர்களும், இளைஞர்களும் உறுதுணையாக இருப்பார்கள் என்பது நிச்சயம்.
ஆக, அவர்களையெல்லாம் நன்கு பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்தின் வளர்ச்சிப்பாதையைச் சீரமைத்துக்கொள்ள நல்லதொரு வாய்ப்பு வந்துள்ளது. இப்பொழுது தவறவிட்டால், இன்னும் 5 ஆண்டுகள் காத்துக்கிடக்க வேண்டியிருக்கும்.
எனவே, தமிழக முதல்வர் மூலம், நேர்மையான, கண்ணியமான, பெண்களையும், உரிமை மறுக்கப்பட்டவர்களையும் அதிகாரப்படுத்தும் வகையிலான அடிப்படை ஜனநாயகப்புரட்சி மலருமா?