அருந்ததியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தில் திருத்தம்-03-06-2009


சென்னை: அருந்ததியருக்கான இடஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, காலியிடத்துக்கு தகுதியான அருந்ததியர் இல்லாவிட்டால், மற்ற ஆதிதிராவிடர்களைக் கொண்டு அந்த இடத்தை நிரப்ப முடியும்.

ஆதிதிராவிடர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டுக்குள், 3 சதவீதத்தை அருந்ததியினருக்கு ஒதுக்கச் செய்யும் சட்டம் ஏப்ரல் 29ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், அரசுப் பணிகள் ஆகியவற்றில் அருந்ததியினருக்கு இடஒதுக்கீடு வழங்க இச்சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தில் தற்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அருந்ததியினருக்கு ஒதுக்கப்படும் இடங்கள் முன்னுரிமை அடிப்படையில், 2, 32, 66 என்ற இனசுழற்சி முறையில் நிரப்பப்படும். இந்த முன்னுரிமை அடிப்படையிலான இடங்களை நிரப்பியதால், இதர தகுதியான அருந்ததி இனத்தைச் சேர்ந்தவர், மீதமுள்ள ஆதிதிராவிடர்களுக்கான ஒதுக்கீட்டில் போட்டியிட முடியாது என்று அர்த்தம் அல்ல.

அதேபோல, உள்ஒதுக்கீட்டில் உள்ள காலியிடத்துக்கு தகுதிவாய்ந்த அருந்ததியர் இல்லாவிட்டால், அதனால் ஏற்படும் காலியிடத்தில் இதர ஆதிதிராவிடர்களை தகுதி அடிப்படையில் நிரப்பக் கூடாது என்று அர்த்தமல்ல. இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அருந்ததியினர் தங்களுக்குரிய உள் ஒதுக்கீடு போக, மீதமுள்ள ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீட்டிலும் தகுதி அடிப்படையில் போட்டியிட முடியும்.

அதேபோல, அருந்ததியினருக்கான ஒதுக்கீட்டில் தகுதிவாய்ந்த அருந்ததி இனத்தைச் சேர்ந்த யாரும் இல்லாவிட்டால், இதர ஆதிதிராவிடர்களைக் கொண்டு, காலியிடத்தை நிரப்ப முடியும்.