நாமக்கல்லில் தலித் தொழிலாளியை கொலை செய்த குற்றவாளியை விரைந்து கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அருகே ராசாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் வேலுச்சாமி என்பவரிடம் விவசாய வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வேலுச்சாமியால் கண்ணன் அடித்து கொலை செய்யப்பட்டதாக கண்ணனின் மனைவி காவல்துறையில் புகார் செய்தும், குற்றவாளிகள் மீது இதுவரை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை.
இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கொலைக்குற்றவாளியை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ராமசாமி, மாவட்ட செயலாளர் ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.