அருந்ததியர்க்கான இடஒதுக்கீடு: கண்காணித்திட குழு

அருந்ததியர்க்கான 3 சதவீத இடஒதுக்கீட்டு நடைமுறையைக் கண்காணித்திட தலைமைச் செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.


தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
அருந்ததியர் சமுதாய மக்களின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி முதல்வர் கருணாநிதி 29.5.2009 அன்று ஆணையிட்டு நடைமுறைப்படுத்தியுள்ள இடஒதுக்கீட்டின்படி, அருந்ததியர் சமுதாய மக்கள் தமிழக அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் அதிக இடங்களைப் பெற்று முன்னேறி வருகின்றனர்.

இந்த 3 சதவீத இடஒதுக்கீட்டின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தலைவராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளரை செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி இன்று (29.12.2010) ஆணையிட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.