அருந்ததியர் பெண் பஞ்சாயத்துத் தலைவரைத் தாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக :


திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து ஊராட்சியின் தலைவராக கிருஷ்ணவேணி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் தலித் சமுதாயத்தைச் சார்ந்த அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர். 

தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண் ஊராட்சித் தலைவராக செயல்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சக்திகள் இவருக்கு தொடர்ந்து இடையூறுகள் கொடுத்து வந்துள்ளதோடு மிரட்டியும் வந்துள்ளனர். 



ஊராட்சிக் கூட்டம் நடத்தும் போதும், கிராம சபைக் கூட்டம் நடத்தும் போதும் பல இடையூறுகளைச் செய்து இவர் ஊராட்சித் தலைவராக செயல்படுவதற்கு தொடர்ச்சியாக தடைகளை ஏற்படுத்தி வந்துள்ளனர். 

இப்பிரச்சனை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு இவரால் பலமுறை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வாறு இடையூறுகளும் மிரட்டல்களும் செய்து வந்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் 13.6.2011 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் தாழையூத்து ஊராட்சித் தலைவர் கிருஷ்ணவேணியை சாதிய வன்மத்தோடு ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இத்தாக்குதலில் கிருஷ்ணவேணி  படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஏற்கனவே இவரை மிரட்டியும், இடையூறும் செய்து வந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத பின்னணியில் இத்தாக்குதல் நடந்துள்ளது. 

இத்தாக்குதல் நடத்திய சாதிவெறி கொண்ட சமூக விரோத சக்திகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவரை மிரட்டி வந்த சாதி வெறியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமலும், இவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்காமலும் இருந்த மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழ்நாடு அரசு, உடனடியாக தலையீடு செய்து கிருஷ்ணவேணியைத் தாக்கிய நபர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறும், கிருஷ்ணவேணிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.


கிருஷ்ணவேணி பற்றி சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட கள ஆய்வுகளின் தொகுப்பு