அருந்ததியர் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தது செங்கொடி இயக்கம் - என். வரதராஜன் பெருமிதம்




திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில், ரெட்டியார்பட்டி காலனி, நீலமலைக்கோட்டை காலனி, ரெட்டியார் சத்திரம் காலனி அருந்ததிய மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் என்.வரதராஜன் நேரில் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் அருந்ததியர் மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

அருந்ததியர் மக்களோடு இன்று நேற்றல்ல, ஆண்டாண்டு காலமாக அவர்களோடு இரண்டறக் கலந்த இயக்கம் செங்கொடி இயக்கம். திண்டுக்கல் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி ஆற்றிய பங்கை அவ்வளவு குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களது பஞ்சப்படிக்காக, உடைக்காக, சமூக மேம்பாட்டிற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆகி என்ன பயன்? இன்றும் கூட மனித மலத்தை சுமக்கும் அவலத்தை அருந்ததிய மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். குடியிருக்க வீடு இல்லை. குடியிருக்கும் வீட்டுக்குப் பட்டா இல்லை. ரேசன் கடையில் நல்ல அரிசி போடவில்லை. பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியவில்லை. 2 ஏக்கர் திட்டம் என்கிறார்கள். அந்தத் திட்டத்தின்படி யாருக்கும் நிலம் கிடைக்கவில்லை. மயானம் இல்லை, மயானம் இருந்தால் அதற்குப் பாதை இல்லை. தொகுப்பு வீடு கட்டித்தரப்படவில்லை என்று ஏராளமான புகார்களை நீங்கள் என்னிடம் கூறி உள்ளீர்கள்.

100 பேருக்கு அரசின் வேலைவாய்ப்பு கிடைத்தால், அதில் தலித் மக்கள் 18 பேருக்கு வேலை தர வேண்டும். ஆனால், அந்த 18 தலித் இளைஞர்களில் ஒரு அருந்ததியருக்குக்கூட வேலை கிடைப்பதில்லை. அந்த அளவிற்கு கல்வியில், வேலைவாய்ப்பில் அருந்ததிய மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். எனவே தான் அருந்ததிய மக்களின் சமூக விடுதலைக்காக சென்னையில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தினோம். ஆர்ப்பரித்தோம். தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக 6 சதவீதம் வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைத்தோம். முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினோம். மகஜர் கொடுத்தோம். ஆனால் அரசு 3 சதவீதம்தான் தந்தது. உள்ஒதுக்கீட்டில் 6 சதவீதம் பெறுவதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது. தீண்டாமை எனும் கொடுந்தீயில் அருந்ததிய மக்கள் வெந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கு ஒரே தீர்வு போராட்டம் தான்.

நகர் மற்றும் கிராமப்புறங்களில் இறந்த மனிதனை எரிப்பது, புதைப்பது, தப்படிப்பது போன்ற பணி யை அருந்ததியர் செய்கிறார்கள். நமது தலைமையில் அருந்ததியர் அமைப்புக்கள் எழுப்பிய முழக்கத்தின் எதிரொலியாகத்தான் சென்னையில் மட்டும் 175 பேருக்கு மயான உதவியாளர் பணி வழங்கப்பட்டது. ஏன் அரசு அதனை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தக் கூடாது? தொடர்ந்து நமது போராட் டங்களில் வலியுறுத்துவோம். பொருளாதார நெருக்கடியிலிருந்தும், சமூக நெருக்கடியிலிருந்தும் ஒட்டு மொத்தமாக அருந்ததியர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தருவோம்.

இவ்வாறு என்.வரதராஜன் பேசினார்.