கோவையில் ஒரு தீண்டாமைச்சுவர்..!!! தகர்ந்தது தீண்டாமைச்சுவர்!கோவை மாநகராட்சி சிங்கை நகர் பத்தாவது வட்டம் தந்தை பெரியார் நகரில் வசிக்கும் அருந்ததிய சமூகத்தினர் பயன்படுத்தும் சாலையை ஆதிக்க சக்தியினர் மறித்து தடுப்பு சுவர் கட்டியுள்ளது குறித்து கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ராவைச் சந்தித்து மனு அளித்துள்ளன.

கூட்டாக இரு அமைப்புகளின் சார்பில் கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் யு.கே.சிவஞானம் மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார் ஆகிய இருவரும் அளித்துள்ள மனுவில், கோவை மாநகராட்சி, சிங்கை நகர், பத்தாவது வட்டம் காமராஜர் ரோடு அருகில் உள்ள தந்தை பெரியார் நகர் உள்ளது. இக்குடியிருப்பு ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் 1989 ஆம் ஆண்டில் 58 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.

தந்தை பெரியார் நகரிலிருந்து ஜீவா வீதி வழியாக காமராஜர் ரோடு பிரதான சாலையை இணைக்கும் 30 அடி சாலை உள்ளது. இச்சாலை வழியாகத்தான் பெரியார் நகரில் வசிக்கும் தலித் மக்கள் காமராஜர் சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்நகரில் மாநகராட்சியின் மூலம் சாலை, கழிவுநீர் வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

அருந்ததியர் மக்கள் செல்லும் இச்சாலையை சில ஆதிக்க சாதியினர் தீண்டாமை எண்ணத்தோடு தீண்டாமை சுவர் கட்டி சாலையை அடைத்து மறித்துள்ளனர். எனவே, மேற்படி சாலையில் தீண்டாமை சுவர் கட்டியுள்ளதை மாநகராட்சியின் மூலம் உடன் அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

1989 ஆம் ஆண்டில் அருந்ததிய சமூகத்தினருக்கு இந்த மனைப்பட்டாக்கள் வழங்கப்படும் வரை தடுப்புச்சுவர் எழுப்பப்படவில்லை. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிறகுதான் தடுப்புச்சுவர் வைத்து, அந்தச்சுவரின் மறுபக்கத்தில், அதாவது தங்கள் பகுதியில் விநாயகர் சிலையொன்றை வைத்து பெயருக்கு கோவில் என்று பெயர்ப்பலகையும் மாட்டியுள்ளார்கள்.

அந்தக் கோவிலில் பூசைகள் எதுவும் நடப்பதேயில்லை. அருகில் உள்ள வீட்டுக்காரர் அந்தக் கோவிலை மாட்டுத்தொழுவமாகவே பயன்படுத்தி வருகின்றார். தலித் மக்களுக்கு அந்தப் பாதையைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளுக்கு முன்பாக நடந்து சென்றுவிடக்கூடாது என்பதே அந்தக் கோவில் மற்றும் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டதன் பின்னணி என்று பெரியார் நகர் மக்கள் கூறுகிறார்கள்.

பாதை மறிக்கப்பட்டு இருப்பதால் போதிய அடிப்படை வசதிகள் செய்வதிலும் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. பாதை திறக்கப்பட்டால் தங்களுக்குத் தேவையான வசதிகளும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அந்தப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

மனைப்பட்டாக்கள் தரப்பட்ட வேளையில் இருந்த இரு பாதைகளும் அடைக்கப்பட்டே இருந்தன என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர்கள் தருகிறார்கள். மற்ற பாதையைத் திறக்கவும் கடுமையான போராட்டம் நடந்துள்ளது. காவல்துறையினர் பலர் மீது வழக்குத் தொடுத்தனர். 1989 ஆம் ஆண்டில் போடப்பட்ட வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தீர்ப்பு வந்து தலித் மக்கள் விடுதலையாகியுள்ளனர்.

அண்மையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பல போராட்டங்கள், அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, ஆலய நுழைவுப் போராட்ட வெற்றிகள் பெரியார் நகர் மக்களுக்கு நம்பிக்கை அளித்தது. இதனால் தங்களுக்குரிய பாதை மறிக்கப்பட்ட கொடுமையிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர்களை அணுகி கோரிக்கை விடுத்தனர்.

இதனடிப்படையில் கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தலைவர் சி.பத்மநாபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், கணேஷ், வழக்கறிஞர் வெண்மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரச் செயலாளர் கே.மனோகரன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் நிர்வாகிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.
பொதுப்பாதையை மறித்துதான் சுவர் எழும்பியுள்ளது என்பது உறுதியானதால் கோவை மாநகர ஆணையர் அன்சுல் மிஸ்ராவை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர் பொதுப்பாதையை மறித்துக் கட்டப்பட்டுள்ள சுவர் அகற்றப்படும் என்ற உறுதியை அளித்தார்.21 ஆண்டு காலமாக நீடித்து வந்த கோவை, சிங்காநல்லூர், பத்தாவது வட்டம் ஜீவா வீதியில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச்சுவர் தகர்க்கப்பட்டது. ஜேசிபி எந்திரம் அந்த சுவரைத் தள்ளியபோது பெரியார் நகர் மக்கள் எழுப்பிய கரவொலி நிற்க வெகு நேரமானது. சில பெண்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். தாரை தாரையாக அவர்கள் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

மூன்று நாட்கள்தான் எனக்கு அந்தப்பகுதியினர் பழக்கம். என்னைப்பார்த்து சில பெண்கள், அண்ணா... அதோ ரோடு தெரியுது... என்று சொன்னபோது எனக்குமே கண்கள் கலங்கத்தான் செய்தது. அடப்பாவிகளா... உங்களால் எத்தகைய வேதனையை, துக்கத்தை இந்த அப்பாவிப் பெண்கள் அடக்கி வைத்திருந்திருக்கிறார்கள் என்ற கோபமும் எழுந்தது.

சொடக்கு போடும் நேரத்தில் சாய்த்து விட்டீர்கள் என்று ஆண்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரைப் பார்த்து உற்சாகத்துடன் கூவினார்கள். எங்களுக்கும் உற்சாகம் தொற்றியது. விநாயகரை மாட்டுத்தொழுவத்திலிருந்து விடுவித்து விட்டோம் என்று அவர்கள் சொன்னது மனதைத்தொட்டது.

அதைத்தான் கோவில் என்று சொல்லிக்கொண்டு இந்து மக்கள் கட்சியினர் கலகம் விளைவிக்க முனைந்தனர். விநாயகரை எங்களிடம் கொடுங்கள். எங்கள் கோவிலுக்குள் வைத்து அவரை வழிபடுவோம் என்று அருந்ததிய மக்கள் சொன்னதும் மதவெறியர்களின் கூக்குரல்கள் எடுபடவில்லை.

முழுமையான பாதை இன்னும் உருவாகவில்லை. அதை அடைந்துவிடுவோம். தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் இருப்பதால் அதைச் சாதித்து விட முடியும் என்று அந்த மக்கள் சொன்னார்கள்.

உண்மையும் அதுதானே...