சென்னை, செப்.12: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்காக நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான 1,077 பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கும் அதே நாளில் தனியாகத் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவதில் உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஆர். சந்தோஷ் குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.என். பாஷா, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தார்.
இந்த சூழலில், பெத்தம்பட்டியைச் சேர்ந்த ஏ.அருள் உள்ளிட்ட சிலர் இந்த வழக்கில் தங்களையும் எதிர் தரப்பாகச் சேர்த்து விசாரிக்கக் கோரி தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், "இட ஒதுக்கீட்டின்படி தமிழ்நாட்டில் உள்ள வி.ஏ.ஓ. பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அவர்களுக்கான 1,077 இடங்கள் பின்னடைவு காலியிடங்களாக உள்ளதென அரசு கண்டறிந்தது.
எனவே, அந்த இடங்களுக்கான தேர்வை நடத்தி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரை பணியமர்த்தும்படி டி.என்.பி.எஸ்.சி.யை மாநில அரசு கேட்டுக் கொண்டது.
அதன் அடிப்படையில் உரிய சட்ட விதிகளின்படி பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. எனவே, தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று அருள் தனது மனுவில் வலியுறுத்தினார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.என். பாஷா, இடைக்காலத் தடை உத்தரவில் மாற்றம் செய்து புதிய உத்தரவை திங்கள்கிழமை பிறப்பித்தார்.
அதில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடலாம். தகுதியானவர்களை பணியில் நியமிக்கலாம்.
எனினும், இந்தப் பணி நியமனமானது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் பிறப்பிக்கப்படும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாகும் என்று நீதிபதி கூறியுள்ளார்.