நேபாளம் - தேச விடுதலையும் மக்கள் (ஜன) நாயகமும் - தோழர் பசந்தா - வர்க்கப் போராட்டத்துடன் பெண்கள், தேசிய இனம், தலித் இயக்கங்கள் இணைக்கப்படுதல்:


நமது நாடான நேபாளம் புவிரீதியாக சிறியதாக இருந்தாலும் பல்வேறு சாதிகளும் தேசிய இனங்களும் இருக்கும் நாடாகும். அதன் பன்மயமான பண்பாட்டு மரபுகள் பாரம்பரியங்கள் மற்றும் மதங்கள் என்ற அடிப்படையில் பெரியதே. ஆனால் மையப்படுத்ப்பட்ட அரசு அதிகாரமானது, அவர்களை நாட்டின் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தியிருக்கிறது. அது மட்டுமில்லாமல் 250 ஆண்டுகளுக்கு முன் நேபாளம் ஒன்றுபட்டதிலிருந்தே இந்துமதம் என்ற உயர்சாதி வெறி கருத்தியலின் கீழ் இந்த மக்கள் பிரிவை அடக்குவதற்கு அனைத்தையும் செய்துள்ளது. இயல்பாகவே இந்த மக்கள் திரள் பிரிவு இரட்டிப்பு ஒடுக்குமுறைகளினால் அழுத்தப்பட்டு இருந்தது. முதலாவதாக வர்க்க ஒடுக்குமுறையினால் அழுத்தப்பட்டு இருந்தது. இரண்டாவதாக உயர்சாதி இந்து மத வெறியினை அடிப்படையாக உடைய தந்தையாதிக்க தேசிய, சாதிய ஒடுக்குமுறையினால் அழுத்தப்பட்டு இருந்தது. இரண்டாவது வகைப்பட்ட ஒடுக்குமுறையானது மேற்தோற்றத்தில் வர்க்கம் சாராததாக தோற்றம் அளிக்கிறது. ஆனால் உண்மையில் ஆளும் வர்க்கமும் அதன் அரசதிகாரமும் உயர்த்திப் பிடிக்கின்ற பிற்போக்குக் கருத்தியலில் மீதே தாங்கி நிற்கின்றது. 
இந்தச் சரியான கருத்தியலை உள்வாங்கிக் கொண்ட நமது கட்சியானது தொடக்கத்திலிருந்தே வர்க்கப் போராட்ட முன்னணியில் இந்த மக்கள் திரள் பிரிவைத் திரட்டுவதற்குக் குறிப்பான கொள்கைகளையும் திட்டங்களையும், செயல்திட்டங்களையும் வளர்த்தெடுக்க கடுமையாக முயற்சி செய்தது. நமது கட்சியானது வர்க்கச் செயற் திட்டத்திற்கு அப்பாற்பட்டு சொத்துரிமை உள்ளிட்டு சமூக செயற்பாட்டின் அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு சம உரிமையை முன் வைத்த பொழுதும் சுயநிர்ணய உரிமை உள்ளிட்டு அனைத்து வகையான சமூகப் பாகுபாடுகளுக்கும் முடிவு கட்ட தீண்டாமை உள்ளிட்ட தலித்துகளின் நிகழ்ச்சி நிரலை வைத்த பொழுதும் அவர்கள் மக்கள் யுத்தத்திற்கு விரிவான அளவில் ஆதரவாக முன் வந்தனர். "ஒருவரைத் தனிமைப்படுத்துவதற்கு, ஐக்கியமாக்கப்பட முடிகிற அனைவரையும் ஐக்கியப்படுத்துவீர்" என்ற கொள்கையின் கீழ் மக்கள் திரள் வழியை செயற்படுத்தும் மற்றொரு வடிவமாகவே அது இருந்தது என எண்ணுகிறோம். நமது கட்சியானது பெண்கள், தேசிய இனங்கள் மற்றும் தலித்துகளை அவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகத் திரட்டுவதற்குப் பருண்மையான கொள்கைகளையும் திட்டங்களையும் செயற்திட்டங்களையும் கொண்டிருக்கா விட்டால் வெறுமனை வர்க்க வழியும், மரபு ரீதியான நீண்டகால மக்கள் யுத்தமும் ஒடுக்கப்படும் இந்த மக்கள் திரள் பிரிவை, மக்கள் யுத்தத்தை வளர்த்தெடுப்பதற்கு இந்த அளவுக்கு உக்கிரமாகவும் விரிவாகவும் திரட்டியிருக்க முடியாது.