13092011
திமுக ஒரு பார்ப்பன எதிர்ப்பு கட்சியாக இல்லாதபோதும், குறிப்பாக கடந்த ஆட்சியில், பார்ப்பனர்களோடு இணக்கமாக, ஜெயேந்திரன் வழக்கை கிடப்பில்போட்டதும், அதைவிட மோசமாக எஸ்.வி. சேகரை எம்.ஆர்.ராதாவோடு ஒப்பிட்டதுமான சம்பவங்கள் நடந்தபோதும்கூட பார்ப்பனர்கள் திமுகவை தனக்கு எதிரான கட்சியாகவும், அதிமுகவை தங்களுக்கான கட்சியாகவுமே அரசியல் நடத்துகிறார்கள்.
ஜெயலலிதாவின் தலைமைக்குப் பிறகு, பார்ப்பனர்கள் அதிமுகவை தங்கள் கட்சியாகவே கருதுவதைப்போல், சமீபமாக அதிமுகவில் சசிகலாவின் செல்வாக்கிற்குப் பிறகு தேவர் ஜாதி உணர்வாளர்களும் அது தமிழ்த்தேசியம், பெரியாரியம் பேசுகிறவர்கள்கூட அதிமுகவைதான் தங்கள் ஜாதி கட்சியாக உணர்கிறார்கள்.
இத்தனைக்கும் முத்துராமலிங்கம் நூற்றாண்டு விழாவை, கம்யுனிஸ்ட் கட்சிகளின் துணையோடு ஆர்ப்பாட்டமாக, திமுக அரசு கொண்டாடியபோதும், அதிமுகவில் சசிகலா குடும்பத்தின் செல்வாக்கின் காரணமாக தேவர் ஜாதி உணர்வாளர்கள் அதிமுகவைத்தான் கொண்டாடுகிறார்கள்.
இந்த சூழலோடு பொருத்திதான், தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டை பார்க்க வேண்டியிருக்கிறது.
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சி என்பது, ஏதோ ஒரு தனிநபரின் ஞாபகர்த்த சடங்கல்ல; தலித் விரோதத்திற்கு எதிரான குறியீடு. இன்னும் நெருக்கிச் சொன்னால், முத்துராமலிங்கத்திற்கு எதிரான அணிவகுப்பு.
இந்த அணிவகுப்பை தடுத்து நிறுத்தும் நோக்கதோடுதான், காவல் துறை துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கிறது. (அதிமுக ஆட்சியில் இருக்கும்போது இமானுவேல் சேகரனின் முதல் குரு பூஜை இது)
பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம், ஜான் பாண்டியன் என்கிறது அரசு. ஆனால், மதுரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு யார் காரணம்? திடீரென்று வேறு மாவட்டக்காரர்கள் ராமநாதபுர மாவட்டத்திற்குள் நுழையக் கூடாது என்ற உத்தரவு வருவதற்கு எது காரணம்?
தேவர் ஜாதி உணர்வாளர்கள் அதிமுகவை தங்கள் ஜாதி கட்சியாக கருதுகிறார்களே அதுதான் காரணம்.
அந்த உணர்வுக்கு உண்மையாக நடந்திருக்கிறது அதிமுக அரசின் காவல் துறை. துப்பாக்கிச்சூட்டின் மூலம் தேவர் ஜாதி உணர்வாளர்களோடு இன்னும் நெருக்கமாகியிருக்கிறது அதிமுக அரசு.
‘தேவர் ஜாதி ஓட்டு முழுசும் நமக்கு; தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுக்கு, தலித் கட்சிகளின் கூட்டணி இருக்கு’ - இதுதான் அதிமுகவின் தேர்தல் கணக்கு.
எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது காவல் துறை போன்ற அரசு நிறுவனங்கள் நடத்தும் வன்கொடுமைகளின்போது தலித் விரோதிகளோடு, தலித் துரோகிகளும் அம்பலமாகி நிற்பார்கள். இம்முறை அவர்களோடு தமிழ்த்தேசியம் பேசகிறவர்களும் இணைந்திருக்கிறார்கள்.
மூன்று உயிர்களை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற, சட்டசபையில் தீர்மானம் போட்ட தமிழக அரசு, ஏழு தமிழர்களின் உயிரை பறித்திருக்கிறது.
தூக்கு கயிறுக்கு பதில், துப்பாக்கியால் கொல்லும் அரசு.