கடந்தஇரண்டு மூன்று நாட்களாக நடப்பு விபரங்கள் மற்றும் செய்திகள் பற்றிய விபரம் அறியமுடியாத நிலை. இன்று கடந்த இரு நாட்களில் தமிழகத்தில் நடந்தேறிய நிகழ்ச்சிகள் படித்தேன். நடந்தசம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தது என்றே கூறலாம்.
முதலில் இறந்த அந்த மாணவனுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவனது குடும்பத்திற்கு என் அனுதாபங்கள்.
ஒரு சிறுவனின் கொலை: ஒரு சிறுவன் பள்ளி விட்டு திரும்பும் போது கொலை செய்யப்படுகிறான். சம்பத்தப்பட்ட மாணவன் எந்த காரணத்துக்காக கொலை செய்யப்பட்டான்? யாரோ சுவற்றில் தேவர் இன தலைவரை பற்றி தப்பாக கிறுக்கியதால் அதன் காழ்ப்புணர்ச்சியால் இந்த சிறுவன் தாக்கப்பட்டிருக்கலாம் என்று அரசு கூறியுள்ளது. (படிக்க : அரசு விசாரணை) ஒரு பள்ளி மாணவன் எதற்கு தாக்கப்பட வேண்டும்? பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் என்றால் பதினெட்டு வயதுக்கும் குறைவான பாலகனை கொள்ள இவர்களுக்கு எப்பிடி மனம் வந்தது? வலி, வேதனை அனைவருக்கும் பொதுவானதே! இதனை சாதி மோதலாக பார்க்காமல் ஒரு சமுதாய குற்றமாக பார்க்க வேண்டும். கொன்றது யார்? பள்ளியின் சுவற்றில் சம்பத்தப்பட்ட காழ்ப்புணர்ச்சியுடன் வாசகங்கள் எழுதப்பட்டதா? அப்படியெனில் பள்ளியில் சாதீய விஷயங்களை பேச வேண்டிய அவசியம் என்ன? இதன் மூல காரணங்களை ஆராய வேண்டும்.
அடுத்தது: குருபூஜை மற்றும் ஜான்பாண்டியன் கைது. ஒரு சாதி தலைவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய காவல்துறைக்கு அனுமதி இருக்கும் போதிலும் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது. தென்மாவட்டத்தில் கலவரம் எப்போ என்று காத்திருப்போர் தான் அதிகம். பல்வேறு கட்டுரைகள் மற்றும் அறிக்கைகள் படித்ததில் இருந்து அறிந்தது – காவல்துறை அத்துமீறல் என்றே குறிப்பிட்டுள்ளனர். சில அறிக்கைகள் கூட்டத்தினர் அத்துமீறியதால் தான் துப்பாக்கிசூடு நடத்தவேண்டியதாகிவிட்டது என்று குறிப்பிடுகின்றன. எது எப்படியாகினும் இறந்து போன உயிர் திரும்பப்போவது இல்லை. தென்மாவட்டங்களில் கொலை, கலவரம் மற்றும் உயிர்பறிப்பு மிகவும் சாதாரணமான ஒன்றாகிவிட்டது.
இது இப்படியிருக்க கைது செய்யப்பட தலைவர் அவரது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டாமா? தான் கைது செய்யப்படுவோம் என்றிருக்க தந்து தொண்டர்களுக்கு அமைதி வழியில் போராட்டம் செய்ய கட்டளை பிறப்பித்திருக்கலாமே? எதற்கு கலவரம்? போராட்டம்? கண்கூடாக நாம் கண்டோமே அறவழிப்புரட்சியின் பலன். தலைவர்கள் தனது தலைமைப்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டிது அவசியம். ஏழு உயிர்ப்பலியை தடுத்திருக்கலாம். எதனால் பொருள் சேதம் விளைவிக்க முற்பட வேண்டும்? போராட்டத்திற்கான களமாக அமைதி வழியை தேர்ந்தெடுத்திருக்கலாமே?
அடுத்து: சாதிவெறி பற்றி: நீண்ட நாட்களாக எழுத வேண்டிய விஷயம் இன்று பதிவிடுகிறேன்.
சாதி வெறி மனிதனை வீழ்த்தும் என்பது நிச்சயம். பல நேரங்களில் பேஸ்புக்கிலும் எனது தனிப்பட்ட குழு விவாதத்தின் போதும் சாதி வெறி மீதான எனது கருத்துகளை நான் பகிர்ந்துள்ளேன். சாதிப்பற்று அளவுகடந்து போகும்போது சாதிவெறியாகிறது.
தனிப்பட்ட முறையில், தேவர், கவுண்டர், தேவேந்திரகுல வேளாளர் மற்றும் தலித் நண்பர்களுடன் கல்லூரிக்காலத்தில் சில கசப்பான அனுபவங்கள் உண்டு. தனிப்பட்ட முறையில் நல்லமனிதர்களும் / நண்பர்களும் உண்டு.
பொதுவாக தேவர் சாதியினருக்கு எப்போதுமே தலித் மற்றும் தேவேந்திரகுல மக்கள் மீது ஒரு வித காழ்ப்புணர்ச்சி உண்டு. தென்மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் சிலர் இது பற்றி கூறும் போது வீராவேசம் கொண்டு பேசுவது வாடிக்கை.
எனது நட்பு வட்டாரத்தில் இருக்கும் பெரும்பாலான நண்பர்கள் இந்த சாதிய வெறி கொண்டு திரிந்தது கிடையாது. ஆனால் தேவர், வன்னியர், கவுண்டர் சாதி நண்பர்கள் தங்களது சாதி பெருமைகளை பீற்றிக்கொள்ளுவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். எனது நண்பர் குழாமில் நல்ல சிந்தனை செறிவு மிகுந்த நண்பர்கள் சிலர் இருந்தனர். சாதி பாகுபாடு மற்றும் அதன் விஷவேலியில் சிக்காமல் தனித்து தங்களது திறமை மற்றும் முன்னேற்றத்தில் குறிக்கோளாக கொண்டு செயல்பட.
நான் ஆரம்ப காலங்களில் இந்த “தேவர் – தலித்” மோதல் பற்றிய அடிப்படை விபரம் அறியாமல் ஏதோ இரண்டு சாதிக்குள் சண்டை என்பதாகத்தான் நினைத்திருந்தேன்.
சமீபத்திய நியுஸ் மற்றும் தகவல் திரட்டி விபரங்கள் எனக்கு தலித் தலைவர் “இம்மானுவேல் சேகரன்” மற்றும் “முத்துராமலிங்க தேவர்” உடனான கருத்து வேறுபாடுகள் பற்றி படித்து அறிய நேர்ந்தது. இந்த கலவர மற்றும் சாதீய மோதல்களுக்கான அடிப்படை காரணம் என்ன என்பதை அறிய முடிந்தது.இந்த கட்டுரையின் இறுதியில் சில கட்டுரைகளின் இணைப்பினை தந்துள்ளேன்.
ஆரம்பம் முதலே இந்த மோதல்கள் மொத்தத்தில் அரசியல் ஆதாயத்திற்கான மோதலே அன்றி வேறல்ல. முத்துராமலிங்கத்தேவர் இருந்த போதும் சரி இறந்த பிறகும் சரி.ஆதிக்க மனம் கொண்ட மக்கள் திருந்தாத வரையில் இதற்கு முடிவே கிடையாது.
இவ்வகையான மோதல்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
- சாதீய கட்சிகள் மற்றும் சாதீய வோட்டுப்பொறுக்கி அரசியலை விட்டு அரசியல் கட்சிகள் வெளி வரவேண்டும். இது நடக்காது என்பது என் கணிப்பு.
- அந்தந்த பாதிக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் சாதி அரசியலை விட்டு அவர்களின் வாழ்வினை செம்மைப்படுத்த கல்வி கேள்விகளில் கவனம் செலுத்த வேண்டும்.
- ஒரு சமூக புரட்சி நடைபெற வேண்டும் – ஆயுதம் ஏந்தியோ அல்லது கலவரம் செய்தோ அல்ல. கல்வியில், வேலைவாய்ப்பில் திறமை செம்மைப்படுத்துதலில் புரட்சி படைக்க வேண்டும். இன்றைய தலைமுறையும் இதன் பின் வரும் அடுத்த தலைமுறையும் இதனை குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். (உதாரணத்திற்கு யூதர்களின் திட்டமிட்ட வியுகம்)
- சமூக அந்தஸ்து ஒருமனிதருக்கு அவரது “பொருளாதார மற்றும் சமூக பொறுப்பு” வைத்தே அமைகிறது. வளர்ந்து வரும் சமூக மாற்றங்களும் இதையே அடிக்கோடிட்டுகாட்டுகின்றன.
- தேவர் / சாதிபிரச்சினைக்கு மூல காரணமான ஜாதி தலைவர்கள் / மக்கள் தங்களது மேம்பாடு பற்றி சிந்திக்கும் நேரம் வந்து விட்டதை உணர வேண்டும். மேம்பாடு என்பது பொருளாதார நிலை மட்டும் அல்ல சுய சிந்தனையிலும் தான்.
- வீரம் என்பது வலியோனை வீழ்த்துவது அன்று. எவராயினும் கடந்த கால வீரக்கதைகளோ அல்லது வீர செயல்களோ பயன் அளிக்காது என்பதை உணர வேண்டும்.
- பெரும்பான்மை தலித்துகள் முன்னேற்றம் அடையாமல் தான் இருக்கிறார்கள். குடி மற்றும் போதைக்கு அடிமையாகி கல்வி மற்றும் கேள்விகளில் சீர்கெட்டு திரியும் நண்பர்களை இன்றும் காண்கிறேன். தலித்துகளிலேயே நல்ல நிலைக்கு வந்தவர்கள் இதனை சீர் செய்ய முயற்சி எடுக்கலாம். எடுக்கும் பட்சத்தில் இணைந்து செயல்பட ஒத்த கருத்து கொண்ட இளைஞர்கள் தயாராக இருக்கிறோம்.
- ஒரு காலத்தில் “கொட்டுப்பறை, தட்டுப்பறை” என்ற வாக்கியம் புழக்கத்தில் இருந்தது. அதாவது நாடார்களை சமூகம் பார்த்த விதம். ஆனால் இன்று? நாடார்கள் தங்களது சமூக பொருளாதார கல்வி நிலைகளை படிப்படியாக உயர்த்தி, தங்களை பொருளாதார மற்றும் கல்வி சமூக எதிர்பார்ப்புகளில் ஒரு தவிர்க்க இயலாத அங்கமாகிவிட்டனர். ஒரு சமூகம் மேம்பட கல்வி, நல்லொழுக்கம், திறமை தேவை. இதனை சம்பத்தப்பட்ட தலித் தலைவர்கள் அறிவுறுத்துவார்களா?
- நீங்கள் இறந்துபோன உங்கள் தலைவரது கொள்கைகளை புத்தியில் நிறுத்துங்கள், அவரின் நினைவினை மனதில் வையுங்கள் அவரது சிலையினை ஆதிக்க சாதியினர் உடைக்கட்டும். நீங்கள் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலம் அளிக்க திட்டமிடுங்கள். உங்கள் பலத்தினை ஆதிக்கம் செலுத்த நினைப்போரிடம் காட்டுவதை விட்டு உங்கள் நீண்ட கால திட்டத்தினை செயல்படுத்த உறுதி மேற்கொள்ளுங்கள். அதுவே சமுதாய மாற்றத்திற்கு வித்திடும்.
நான் ஒரு தொழில்சார்ந்த எழுத்தாளன் அல்ல. அதனால் வாக்கிய கட்டமைப்பில் பிழை அல்லது தரம் குறைவாக இருப்பின் வாசிப்பவர்கள் மன்னிக்க.